பூமியை நெருங்கும் விண்வெளிக் குப்பைகள்: ஆபத்தைத் தடுக்க புதிய முயற்சி

  • 4 ஏப்ரல் 2017

ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பிண்ணும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல்.

பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது.

அவர்களது 2016-ம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்கள் கண்டுப்பிடிக்கப்ட்டன. இவை, ஆய்வுக் கூடங்களைத் தாண்டி, மனித வாழ்க்கையில், சோதித்துப் பார்க்கத் தயாராகிவிட்டன. அதில் ஒன்று விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல்.

விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல்

காலியான ராக்கெட் ஏவுகலண்கள், செயலிழந்து போன பெரும் செயற்கைக் கோள்கள், கண்ணாடி மற்றும் பெயின்ட் சிதிலங்கள் போன்றவை விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன. 7 ஆயிரம் டன் விண்வெளிக் குப்பைகள் மூலம், இந்த மெய்நிகர் குப்பைத் தொட்டி உருவாகியுள்ளது. விண்வெளிக் காலம் துவங்கியது முதல் இப்படித்தான் விண்வெளி குப்பையாக்கப்பட்டிருக்கிறது.

உயிருக்கு ஆபத்தானதா விண்வெளி பயணம்?

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பல கலன்கள், இன்னும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பயன்பாட்டில் இருக்கும் செயற்கைக் கோள்களுடன் மோதக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளன. ஆனால், அந்த செயற்கைக் கோள்கள் நமது இணையதளம் மற்றும் மொபைல் தொலைபேசித் தொடர்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவை.

இது ஏற்கெனவே நடந்துவிட்டது. மணிக்கு ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமியை சுற்றி வரும் பயனற்றுப் போன விண்கலத்தின் சிறிய பாகங்கள் கூட, பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை என்பதைக் காட்டியிருக்கின்றன. விண்வெளிக் குப்பைகளுடன் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம், அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வருகிறது குப்பைகளை அகற்றும் திட்டம். 2017-ம் ஆண்டு துவக்கத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. விண்வெளிக் குப்பைகளை பூமிப்பாதைக்குள் இழுத்து வரும் இந்தத் திட்டம், புதிய தொழில்நுட்பத்தின் முதல் முயற்சி.

''இது அறிவியல் கதை அல்ல. நிஜமான பிரச்சினை. விண்வெளிக் குப்பைகள் அனைத்தும், புவியீர்ப்புத்தன்மை காரணமாக பூமிக்கு வந்துவிடும். ஆனால், சில குப்பைகள் அல்லது துண்டுகள், பூமியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளன. அந்த உயரத்தில் இருந்து பூமிக்கு வர ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அவ்வளவு காலம் நம்மிடம் இல்லை. விண்வெளிக் குப்பைகளால் பெரும் பிரச்சினை ஏற்படுவதற்கு இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள்தான் இருக்கின்றன'' என்று விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளிக் குப்பைகளை அகற்றும் அணியைச் சேர்ந்த ஜேசன் ஃபோர்ஷா பிபிசியிடம் தெரிவித்தார்.

பழைய குழாய்கள் மூலம் சூரிய புயலை கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் உதகை ஆய்வகம்

சோதனை ரீதியாகப் பயன்படுத்தப்படும் குப்பைகளை அகற்றும் தொழில்நுட்பம், ஆச்சரியப்படத்தக்க வகையில், சாதாரண தத்துவங்களின் அடிப்படையிலானது.

ஒன்று, விண்வெளி வலை. மீன் பிடி வலையைப் போன்று, இந்த வலையை விண்வெளியில் வீச வேண்டும். வலையில் விண்வெளிக் குப்பை சிக்கியவுடன், கயிற்றால் கட்டப்பட்ட லாரியைப் போல அவை விண்கலத்துக்குப் பின்னால் இழுக்கப்பட்டு, பூமிக்குக் கொண்டுவரப்படும்.

பூமிக்குத் திரும்பும்போது, அதனால் ஏற்படும் வெப்பத்தால் குப்பைத் துண்டுகள் எரிந்துவிடும். அவ்வாறு முழுமையாக எரிந்துபோகாத துண்டுகள், பசிபிக் கடலில் விழும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு, செலுத்தப்படும்.

இன்னொரு முறை, பட்டம் போன்று இருக்கும். இது, பாய்மரப்படகில் கட்டப்படும் பாயைப் போன்று, இது வெள்ளிப் பாய். மெல்லிய சவ்வினால் உருவாக்கப்பட்ட இது காற்றுக்குப் பதிலாக, சூரிய ஒளியின் மூலம் செலுத்தப்படும். விண்வெளியில் உள்ள குப்பைகளை இழுத்து பூமிக்கு அனுப்புவுதுதான் இதன் பணி.

இதுவும் உங்களுக்குப் பிடிக்கலாம்:

செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?

மூவாயிரம் ஜெல்லி மீன்கள் ஒரே இடத்தில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்