இறைச்சிக் கூடங்களை என்ன செய்யலாம்? பாபா ராம்தேவ் கருத்து

  • 4 ஏப்ரல் 2017

உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத இறைச்சிக்கூடங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துக் கொண்டே இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP/Getty images

யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாநில காவல்துறையினர் பெருமளவிலான இறைச்சிக் கூடங்கள் மற்றும் கசாப்புக் கடைகளை மூடிவிட்டனர்.

"மாநிலத்தில் இயங்கிவரும் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் இரண்டு ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்துவருகிறது. சட்டவிதிகளை பின்பற்றி செயல்படும் இறைச்சிக்கடைகளை நாங்கள் ஒன்றும் செய்யவில்லை" என்று யோகி ஆதித்யநாத் அண்மையில் தெரிவித்தார்.

"தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், சட்டவிரோதமாக இறைச்சிக் கழிவுகளை கொட்டி வரும் இறைச்சிக்கூடங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் யாரும் தப்பிக்க முடியாது" என்றும் யோகி ஆதித்யநாத் கூறுகிறார்.

இப்போது இது தொடர்பான விவாதங்களில் குதித்திருக்கிறார் பாபா ராம்தேவ்.

"எந்தவொரு இறைச்சிக் கூடமும் கடவுளின் சட்டத்தின்கீழ் சட்டப்பூர்வமானது இல்லை" என்று பாபா ராம்தேவ் தமது டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

"பசுவை கொல்வது சட்டவிரோதமானது"என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், "சட்டவிரோத இறைச்சிக்கூடங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துவந்தாலும், சட்டப்படி செயல்படும் மற்றும் உரிமம் வைத்திருக்கும் இறைச்சிக் கடைகளுக்கும், கூடங்களுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று உறுதியளிக்கிறார் உத்தரபிரதேச மாநில அமைச்சர் சித்தார்த்நாத்.

பாபா ராம்தேவின் கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் சூடாக நடக்கிறது.

சிலர் ஆதரவு தெரிவிக்க, மற்றும் சிலரோ, பாபா ராம்தேவிடம் எதிர்கேள்விகளை தொடுக்கின்றனர்.

"நீங்கள் தயாரிக்கும் மருந்துகள் சைவமா?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

" பாபாஜி, மனித உலகில் கடவுளின் சட்டங்கள் செல்லாது"என்று ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்