சூரியனை விட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்ட 4டி எக்ஸ்-ரே

  • 6 ஏப்ரல் 2017

ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பின்னும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல்.

பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ஆம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்களில் ஒன்றுதான், 4டி எக்ஸ்-ரே ரகசியங்கள்

4டி எக்ஸ்-ரே ரகசியங்கள்

புதிரான பெயரைக் கொண்ட, புதிரான இயந்திரம் 4டி எக்ஸ்-ரே ஸின்க்ரோட்ரான். இது என்ன செய்யும் என்று கேட்டால் இன்னும் மலைப்பாக இருக்கிறது.

எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் உள்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் அக்குவேறு ஆணிவேறாகப் பார்த்துவிட முடியும்.

பூமியை நெருங்கும் ஆபத்து: விண்வெளிக் குப்பைகள்

பெரிய எரிமலை வெடிப்பதைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம். நாம் சாப்பிடும் குறிப்பிட்ட ஐஸ் கிரீம் வகைகள் ஏன் அதிக சுவையாக இருக்கின்றன என்பதைக்கூட, ஐஸ் படிகங்களுக்குள் ஊடுருவி ஆய்வு செய்து அறிய முடியும்.

மான்செஸ்டர் பல்கலைக்கழக ஸின்க்ரோட்ரான் நிபுணர் கமெல் மடி இதுகுறித்து பிபிசியிடம் பேசும்போது, "எக்ஸ்-ரே கம்ப்யூட்டர் வரைவு என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். எந்த ஒரு பொருளின் உள்வடிவத்தையும் மூன்று கோணங்களில் தெளிவாகக் காட்டிவிடும் அளவுக்கு மிக அதிக சக்தி வாய்ந்த வெளிச்சத்தைக் கொண்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது" என்றார்.

கொசுக்கடியிலிருந்து தப்ப கொசுவலை படுக்கை

இந்த ஸின்க்ரோட்ரான் வெளிச்சம், சூரியனைவிட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்டது என்றால் நீங்களே கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு ஒளி வெள்ளம் என்பது. எந்தப் பொருளையும் துளையிடாமலோ, வெட்டாமலோ உள்ளே இருப்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.வெளிச்சம் மூலம் பெறப்படும் தகவல்கள் அனைத்தையும் இன்னொரு பக்கம் உள்ள கேமரா தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்து கொள்ளும்.

இதன் நான்காவது வடிவம், நேரம்: பல்வேறு வகையான கால நிலைகளை, அழுத்தங்களை, சூழ்நிலைகளை விஞ்ஞானிகள் உருவாக்க முடியும். ஒவ்வொரு சூழலிலும் பொருட்கள் எந்த வகையான தன்மைக்கு மாறுகின்றன என்பதைப் பார்க்க முடியும்.

கிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா?

"ஒரு பொருளை உருவாக்கும்போது, அவை எப்படியெல்லாம் உருமாறுகின்றன என்ற வரைவியலை நாம் புரிந்துகொள்ள முடியும். அதனால், ஜெட் என்ஜின் அல்லது லித்தியம் பேட்டரிகள் போன்ற பல்வேறு பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ரகசியங்கள் இதில் உள்ளன" என்று நிபுணர் மடி தெரிவித்தார்.

மருத்துவ அறிவியலுக்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும். மாற்று அறுவை சிகிச்சை மூலம் உடலில் பொருத்தப்படும் பாகங்கள், உடலில் உள்ள திசுக்களோடு எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். முடக்குவாதம், எந்த அளவுக்கு குருத்தெலும்பை பாதிக்கிறது என்பதையும், முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து வருகிறார் நிபுணர் மடி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்