எங்கள் அணு சோதனையை நியாயப்படுத்துகிறது அமெரிக்காவின் சிரியா தாக்குதல்: வடகொரியா

  • 9 ஏப்ரல் 2017

சிரியா மீது அமெரிக்கா நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல், அணு திட்டத்தை வலுப்படுத்தும் தங்களின் முடிவு சரியானது என "மில்லியனிற்கும் அதிகமான முறை" உறுதிப்படுத்துவதாக வட கொரியா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த மாத தொடக்கத்தில் நான்கு ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டது

வெள்ளியன்று நடைபெற்ற தாக்குதல் "இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது சகித்துக் கொள்ள முடியாத அளவு நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்" என பெயர் வெளியிடப்படாத அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் சிரிய நகரில் ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலில் 89 பேர் பலியானதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது.

வடகொரியா அணு ஏவுகணைகளை உருவாக்க சோதனைகளை மேற்கொண்டது; ஆனால் வட கொரியா ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனைகளை நடத்த ஐ.நா தடை விதித்துள்ளது.

வட கொரியா அந்த தடையை தொடர்ந்து மீறி வருகிறது.

அதிகரிக்கும் சக்திகளை கொண்ட அணு குண்டுகளை வட கொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. மேலும் ஏவுகணைகளில் பொருந்தக் கூடிய சிறிய அளவில் ஆயுதங்களை உருவாக்க முடியும் என அந்நாடு கூறியுள்ளது.

வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்

சிரியா மீது அடுத்த ராணுவ நடவடிக்கைக்கு தயார் : அமெரிக்கா

ஆனால் சில வல்லுநர்கள் அதுகுறித்து சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

வெள்ளியன்று, சிரியா விமான தளத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக அந்த பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்கா, சிரியா அரசு படைகளை நோக்கி தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

"சிரியா மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல், இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது தெளிவாக மற்றும் சகித்துக் கொள்ள முடியாத அளவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட ஒரு தாக்குதல்; அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் ", என வட கொரிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கேசிஎன்ஏ என்ற செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியா விமான தளத்தை பதம் பார்த்த அமெரிக்க ஏவுகணைகள்

"அதிகாரத்திற்கு எதிராக அதிகாரத்துடன் நிற்க வேண்டும் என இன்றைய நிஜம் தெரிவிக்கிறது; மேலும் அணு சக்தியை கொண்டு எதிரியை தடுக்கும் சக்தியை வலிமைப்படுத்தும் எங்களின் முடிவு மிகச் சரியானது என்பதை மில்லியனிற்கும் அதிகமான முறை இது நிருபித்துள்ளது".

"எங்களின் சொந்த ராணுவத்தின் வலிமைதான் எங்களை ஏகாதிபத்திய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும்."

"எப்போதும் தீவிரமடைந்து வரும் அமெரிக்காவின் வலிந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க எங்களின் ராணுவத்தை பல வழிகளில் தொடர்ந்து தயார்படுத்துவோம்" என அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்