வட கொரியாவை அச்சுறுத்த கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க கடற்படை

  • 9 ஏப்ரல் 2017

வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலைகள் எழுந்துள்ளதற்கு மத்தியில் அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி செல்ல அமெரிக்க ராணுவம் ஆணை பிறப்பித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

கார்ல் வின்சன் என்று அழைக்கப்படும் அந்த அமெரிக்க கடற்படை கப்பலில் ஒரு போர் விமானம் தாங்கியும் மற்றும் பிற போர் கப்பல்களும் உள்ளன

தற்போது பசிபிக் கடலின் மேற்கு பகுதியை நோக்கிச் செல்லும் அந்த கப்பல், அந்த பிராந்தியத்தில் வரும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கான ஒரு விவேகமான நடவடிக்கை என அமெரிக்க பசிபிக் கமாண்ட் விவரித்துள்ளது.

வட கொரியாவிடமிருந்து வரும் அணு அச்சுறுத்தல்களை அமெரிக்கா தனியாக எதிர்கொள்ள தயாராக உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

"அஜாக்கிரதையான, பொறுப்பற்ற, மற்றும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆணு ஆயுதங்களுக்கான ஆற்றலை பெறும் முயற்சி ஆகியவற்றால் அந்த பிராந்தியத்தின் முதல் அச்சுறுத்தலாக வட கொரியா உள்ளது" என அமெரிக்க பசிபிக் கமாண்டின் செய்தி தொடர்பாள டேவ் பென்ஹாம் தெரிவித்துள்ளார்.

பத்து அணு சக்தி விமானந் தாங்கிகளை கொண்டுள்ள யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை கொண்ட இரண்டு கப்பல்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ள கடற்படையில் அடங்கும்.

எங்கள் அணு சோதனையை நியாயப்படுத்துகிறது அமெரிக்காவின் சிரியா தாக்குதல்: வடகொரியா

வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்

மேலும் அதிகப்படியாக தாக்குதல் ஆற்றலும், பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனும் அந்த கப்பற்படைக்கு உள்ளது.

அது முதலில் ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்படுவதாக இருந்தது; ஆனால் சிங்கப்பூரிலிருந்து, சமீபத்தில் தென் கொரிய கடற்படையுடன் பயற்சிகளை மேற்கொண்டு மேற்கு பசிபிக்கிற்கு திருப்பி விடப்பட்டது.

வட கொரியா பல அணு சோதனைகளை நடத்தியுள்ளது; இருப்பினும் அமெரிக்காவை தாக்கும் வல்லமை கொண்ட பெரிய அளவில் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியை நெருங்கி கொண்டிருக்கையில் கடற்கரையை ஒட்டி மேலும் பல சோதனைகளை அந்நாடு நடத்தும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்

புதன்கிழமையன்று, வட கொரியா, கிழக்கு பகுதியில் இருக்கும் துறைமுகமான சின்போவிலிருந்து இடை தூர தொலைவில் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஜப்பான் கடலுக்குள் செலுத்தியது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியா விமான தளத்தை பதம் பார்த்த அமெரிக்க ஏவுகணைகள்

அந்த சோதனை குறித்து ஜப்பான் மற்றும் தென் கொரியா கண்டனம் தெரிவித்திருந்தது; மேலும் அது சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க அமரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமயத்தில் நடைபெற்றது

அந்த இரண்டு தலைவர்களும் வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு எவ்வாறு கடிவாளம் அமைப்பது என்பது குறித்து விவாதித்தார்கள்.

பதற்றங்களை குறைக்க வட கொரியாவின் வரலாற்று கூட்டாளியான சீனாவின் மீது அமெரிக்கா அதிக நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது.

சீனா தனது அண்டை நாடான வட கொரியாவை எதிர்க்க தயக்கம் காட்டி வருகிறது; மேலும் அகதிகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அமெரிக்காவின் ராணுவம் சீனாவை நெருங்கிவிடும் என்றும் சீனா அஞ்சுகிறது.

சீனாவின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக டிரம்ப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்."சீனா வட கொரியாவால் வரும் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் நாங்கள் தீர்ப்போம்." என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

எந்தவித ஏவுகணை மற்றும் அணு சோதனைகளை மேற்கொள்ள வட கொரியாவிற்கு ஐ.நா தடை விதித்துள்ளது; ஆனால் வட கொரியா தொடர்ந்து அந்த தடையை மீறி வருகிறது.

கடந்த மாதம் வட கொரியா சீன எல்லைக்கு அருகில் உள்ள டாங்சங் பிராந்தியத்திலிருந்து நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலை நோக்கி ஏவியது.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே இது "புதிய வடிவிலான அச்சுறுத்தல்" என தெரிவித்திருந்தார்.

அமெரிக்க நிதியமைச்சர் 11 வட கொரிய வர்த்தக பிரதிநிதிகள் மீதும் ஒரு நிறுவனம் மீதும் தடை விதித்தார் அந்த சட்டத்தை அமெரிக்க அரசியல்வாதிகள் அதிகப்படியான ஆதரவை வழங்கினர்.

சர்வதேச நாடுகள் தொடர்ந்து தடை விதித்தால் ஏவுகணையை செலுத்தி வட கொரியா பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளது மேலும் "அமெரிக்கா போருக்கு வித்திடுகிறது" என வட கொரியா தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்