யார் செய்த தவறுக்கு, யார் தண்டனை அனுபவிப்பது?

யுனைடட் ஏர்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் வலுக்கட்டாயமாக ஒரு நபர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக வெளியான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் அதிர்வலைகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விமான பயணி

பட மூலாதாரம், TYLER BRIDGES/TWITTER

படக்குறிப்பு,

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விமான பயணி

ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிகாகோவில் இருந்து லூயிவில்லேக்கு பயணிகள் புறப்படத் தயாராக இருந்த இந்த விமானத்தில் உள்ளே எடுக்கப்பட்ட காணொளி காட்சிகள், ஒரு நபர் அவர் இருக்கையில் இருந்து பலவந்தமாக இழுக்கப்பட்டு நடைபாதை வழியாக வெளியேற்றப்பட்டதை காண்பித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து வெளியிட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், இது குறித்து தான் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

காணொளிக் குறிப்பு,

தரதரவெனெ இழுத்துச் செல்லப்பட்ட விமானப்பயணி

இச்சம்பவம் தொடர்பான காணொளி பதிவு செய்யப்பட்ட நாளில் , 50 வினாடிகள் அடங்கிய இச்சம்பவத்தின் கிளிப் காட்சிகள், டிவிட்டரில் 16,000 முறைகள் மறு டிவீட் செய்யப்பட்டது.

இந்த காணொளி பதிவை வெளியிட்ட ஜெய்சி டி அன்ஸ்பாக், ''விமானத்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக நான்கு இருக்கைகளை தனது முன்பதிவில் விற்றுவிட்ட யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம், தங்களின் பணிகளை அடுத்த நாளில் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ள பயணிகள் நான்கு பேர் தங்களாவே சுயமாக இருக்கைகளை விட்டுத்தர வேண்டும் என்று விரும்பியது'' என்று டிவிட்டரில் தெரிவித்தார்.

''யாரும் தங்களின் இருக்கையை விட்டுத் தர விரும்பவில்லை. அதனால் அவர்களாகவே ஓர் ஆசிய மருத்துவரையும், அவரது மனைவியையும் விமானத்திலிருந்து வெளியேற்ற முடிவெடுத்தனர்.'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''அந்த மருத்துவருக்கு அடுத்த நாளில் மருத்துவமனையில் பணிகள் இருந்ததால், தனது இருக்கையை விட்டுத்தர மறுத்தார்'' என்று தெரிவித்த ஜெய்சி டி அன்ஸ்பாக், மேலும் கூறுகையில், ''பத்து நிமிடங்களுக்கு பிறகு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அந்த மருத்துவர், ரத்தம் தோய்ந்த முகத்துடன் விமானத்தில் இருந்த ஒரு தூணை பிடித்தவாறு நான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று குரல் எழுப்பினார்'' என்று குறிப்பிட்டார்.

இதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணியான ஓட்ரா டி. பிரிஐஸ், இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்ட காணொளி பதிவு, ஃபேஸ்புக்கில் 400,000 முறைகள் பார்க்கப்பட்டுள்ளது.

''இந்த காணொளியை தயவு செய்து பகிரவும். நாங்கள் இந்த விமானத்தில் தற்போது உள்ளோம். யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூடுதலான இருக்கைகளை முன்பதிவில் விற்றுள்ளது'' என்று தெரிவித்த அவர், ''இந்நபர் ஒரு மருத்துவர். மேலும், அவர் மருத்துவமனையில் காலையில் இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ''அவர் கிளம்பிச் செல்ல விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்தோம்'' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், JAYSE D ANSPACH

படக்குறிப்பு,

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நபர்

விமானத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆயிரக்கணக்கான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

''இது மிகவும் கோபமடைய செய்கிறது'' என்று ஒருவர் கருத்து வெளியிட்டார்.

''ஓ மை காட்! இவ்வளவு மோசமாக ஒருவர் நடத்தப்படுவதை காண்பது வருத்தமாக உள்ளது. நான் இனி எப்போதும் யுனைடட் ஏர்லைன்ஸ் விமானங்களில் செல்ல மாட்டேன்'' என்று மற்றொருவர் கூறியுள்ளார்.

இதுபற்றி, பிபிசியிடம் ஓர் அறிக்கை மூலம் கருத்துத் தெரிவித்த யுனைடட் ஏர்லைன்ஸ், சிகாகோவில் இருந்து லூயிவில்லேக்கு சென்ற 3411 என்ற இலக்கம் கொண்ட விமானத்தில் முன்பதிவில் கூடுதல் இருக்கைகள் விற்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தது.

''தங்களின் இருக்கைகளை சுயமாக விட்டுத்தர விரும்பும் தன்னார்வலர்களை எங்கள் பணிக்குழு தேடியது. ஒரு வாடிக்கையாளர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்தார். இச்சமயத்தில் விமான நிலையங்களில் ஒழுங்கை பராமரிக்கும் சட்ட அமலாக்க குழு விமானத்தின் கதவை நோக்கி வந்தது'' என்று மேலும் தனது அறிக்கையில் யுனைடட் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஆஸ்கார் முனோஸ் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். ''யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் எங்கள் அனைவரையும் இந்த சம்பவம் வருத்தமடைய செய்கிறது. கூடுதலான இந்த வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் இடமளிக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நான் மன்னிப்புக் கோருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்