தரதரவெனெ இழுத்துச் செல்லப்பட்ட விமானப்பயணி

சிகாகோவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் எடுக்கப்பட்ட இந்த காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் நிரம்பி வழிந்த விமானத்திலிருந்து மருத்துவர் ஒருவரை விமான நிலையக் காவலர்கள் பலவந்தமாக இழுத்துச் செல்வதை இந்த காணொளி காட்டுகிறது.

குறிப்பிட்ட விமானத்தில் இருந்த இருக்கைகளைவிட கூடுதலாக பயணச்சீட்டுகள் விற்கப்பட்டதாகவும் எனவே நான்கு பயணிகள் தாமாக முன்வந்து விமானத்திலிருந்து வெளியேறும்படி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

"ஆனால் பயணிகள் யாரும் இறங்கவில்லை, எனவே விமான நிறுவனமே சிலரை தேர்வுசெய்து அகற்ற முயன்றது" என்று பயணி ஒருவர் டுவீட் செய்தார்.

(இந்த காணொளியில்) பலவந்தமாக அகற்றப்படும் மருத்துவர், தாம் ஊர்திரும்பவேண்டியது மிகவும் அவசியம் என்றும் காரணம் தம் பராமரிப்பில் இருக்கும் நோயாளிகளை உடனடியாக கவனிக்க வேண்டுமென்றும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் அவரது கோரிக்கைக்கு விமான நிலைய காவலர்கள் செவி சாய்க்கவில்லை.

இந்த காணொளி வெளியானதால் கோபமடைந்த பலர் இந்த விமான நிறுவனத்தை புறக்கணிக்கப்போவதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மன்னிப்பு கோரியுள்ளார்.