குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்த நீதிபதி உத்தரவு; ஏற்க மறுக்கும் பெற்றோர்

ஓர் அபூர்வமான மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் உயிர் காக்கும் கருவிகளை அக்குழந்தையின் பெற்றோரின் விருப்பத்தை மீறி மருத்துவர்கள் அகற்றிவிடலாம் என்று பிரிட்டன் உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மூளை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை சார்லி

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

மூளை பாதிக்கப்பட்டுள்ள குழந்தை சார்லி

எட்டு மாத குழந்தையான சார்லி கார்ட், சீர் செய்ய முடியாத மூளை பாதிப்பால் பாதிக்கப்பட்டு வலி நிவாரண பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குழந்தையின் பெற்றோரான கானி யேட்ஸ் மற்றும் கிறிஸ் கார்ட், தங்களின் மகனுக்கு சிகிச்சை அளிக்க அவனை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினர்.

நீதிபதியின் இந்த தீர்ப்பால் தாங்கள் நிலைகுலைந்துள்ளதாக தெரிவித்த குழந்தையின் பெற்றோர், இது குறித்து தாங்கள் மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அவர்களது வழக்கறிஞரான லாரா ஹோபி-ஹாம்ஷர் இது குறித்து கூறுகையில், ''குழந்தை சார்லிக்கு ஏன் சிகிச்சை வாய்ப்பை வழங்க நீதிபதி ஃபிரான்சிஸ் அனுமதிக்கவில்லை என்று தங்களுக்கு புரியவில்லை'' என்று கூறினார்.

இந்தத் தீர்ப்பு குறித்து தங்களது சட்ட வல்லுநர் குழு நன்கு ஆராய்ந்த பிறகு, இது குறித்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை கோரும் பணியை குழந்தையின் பெற்றோர் மேற்கொள்வர் என்று வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேல்முறையீடு செய்வதற்கு குழந்தையின் பெற்றோருக்கு மூன்று வார கால அவகாசம் உள்ளது.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

குழந்தை சார்லியின் பெற்றோர்

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில், மேல்முறையீடு செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும் வரையில், உயிர் காக்கும் கருவிகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையை தாங்கள் தொடரவுள்ளதாக தெரிவித்தது.

துணிச்சலான மற்றும் கண்ணியமான செயல்

''மிகவும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை தான் எடுத்ததாகவும், ஆனால் குழந்தையின் நலனை முழுவதுமாக கருத்தில் கொண்டு முழு மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு இது'' என்றும் தனது தீர்ப்பு குறித்து நீதிபதி ஃபிரான்சிஸ் கூறினார்.

''குழந்தை சார்லி பிறந்த நாளில் இருந்து முழு அர்ப்பணிப்புடன் அவனை கவனித்துக் கொண்ட பெற்றோர், சார்லிக்காக மேற்கொண்ட துணிச்சலான மற்றும் கண்ணியமான பிரசாரத்தை நான் பாராட்டுகிறேன்'' என்று நீதிபதி புகழாரம் சூட்டினார்.

குழந்தை சார்லியை மருத்துவமனைக்கு சென்று பார்த்த நீதிபதி மேலும் கூறுகையில், ''சார்லியின் பெற்றோருக்கு இது ஒரு கறுப்பு நாளாக உணர்வார்கள் என்று நான் அறிவேன். எனது இதயம் அவர்களுக்காக விம்முகிறது'' என்று மேலும் தெரிவித்தார்.

''மேலும் வேதனை மற்றும் வலியை சார்லி அனுபவிக்காமல் அமைதியாக இறுதியை சந்திப்பதற்காக அவனது நலன்களை சிறப்பான முறையில் உத்தேசித்து எடுக்கப்பட்ட முடிவு இது என்று அவனது பெற்றோர் உணரும் காலம் வரும் என்று நான் நம்புகிறேன்'' என்று நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், PA

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று பிறந்த சார்லி, இழைமணிக்குரிய சிதைவு நோய்க்குறி என்றழைக்கப்படும் நரம்பியல் சீர்குலைவால் பாதிக்கப்பட்டுள்ளான். இது உடல் திசுக்களுக்கு சக்தி அளிக்கும் மரபியல் கட்டுமான தொகுதிகளை பாதிக்கும் ஓர் ஆபூர்வ வகை நோயாகும்.

உடல் தசைகளை மேலும் வலுவிழக்கச் செய்யும் இந்த நோய், பின்னர் மூளை சேதத்தையும் உண்டாக்குகிறது.

நீதிபதி ஃபிரான்சிஸ் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு வெளியிடப்பட்ட கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை செய்திக்குறிப்பில், ''சார்லி உயிர் பிழைத்திட அல்லது அவனது வாழ்க்கை நிலையில் முன்னேற்றம் ஏற்பட சிகிச்சைகளால் இயலுமா என்பதை அறிய மருத்துவ உலகில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும், ஆனால் இதன் ஒருமித்த முடிவு அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று தெரிந்தது'' என்று கூறப்பட்டுள்ளது.

''சார்லி உடல் நலன் குறித்து அடுத்த கட்டங்களை அவருடைய குடும்பத்துடன் தீர்மானிப்பதே எங்களின் தற்போதைய நோக்கமாகும்'' என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு,

கிளிக் - தொழில் நுட்ப காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்