பெண் பணியாளர்களின் நீண்ட தலைமுடியை வெட்டி எறிந்த அதிகாரி

நைஜீரியாவில் மூத்த சாலைப் பாதுகாப்பு கமாண்டர் ஒருவர், பெண் பணியாளர்களை தண்டிக்கும் விதமாக அவர்களுடைய நீண்ட கூந்தலை வெட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, அவர் மீது நைஜீரியாவின் சாலை பாதுகாப்பு நிறுவனமானது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

நைஜீரியாவில் பெண் பணியாளார்களின் நீண்ட தலை முடிகளை வெட்டி எறிந்த கமாண்டர்

பட மூலாதாரம், FRSC RIVERS STATE/FB

கமாண்டர் ஒருவர் ஆய்வு அணிவகுப்பின் போது, கத்தரிக்கோலை பெண்ணின் தலைமுடியில் வைத்து வெட்டுவதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் கடும் சீற்றத்தை உருவாக்கி உள்ளது.

மத்திய சாலை பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் பணியாளர்களின் சிகை அலங்காரத்திற்கு அரசாங்கம் சில விதிகளை வகுத்துள்ளது.

ஆனால், மூத்த அதிகாரியின் செயல் மத்திய சாலை பாதுகாப்பு நிறுவனத்தின் சட்டத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், FRSC RIVERS STATE/FB

ராணுவ அதிகாரியின் இந்த முடிவெட்டும் நடவடிக்கையைக் கண்டித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நைஜீரிய அதிபர் முகமது புஹாரியின் நெருங்கிய தொடர்பில் உள்ள லரெட்டா ஓனெக்கி , இது பெண்ணை அவமானம் செய்யும் செயல் என பதிவிட்டுள்ளார்.

சதர்ன் ரிவெர்ஸ் மாநிலத்தில் உள்ள மத்திய சாலை பாதுகாப்பு நிறுவனத்தின் பிராந்திய கமாண்டராக பதவியில் இருக்கும் ஆண்ட்ரூ குமாபயீ கடந்த திங்கட்கிழமையன்று போர்ட் ஹர்கோர்ட் என்ற நகரில் அதிகாலை வேளையில் இந்த தண்டனையை நிறைவேற்றினார்.

இதுவரை அவரிடமிருந்த எந்த கருத்தும் வெளிவரவில்லை.

பட மூலாதாரம், FRSC RIVERS STATE/FB

எஃப்ஆர்எஸ்சி அணிவகுப்பின் பெண் பணியாளர்களுக்கான அலுவல் சார்ந்த வழிகாட்டி கூறுகையில், ''பெண்கள் தங்களுடைய முடியை தொப்பிக்குள் மறையும்படி பராமரிக்க வேண்டும்'' என்றார்.

ஆனால், அதற்காக நீண்ட முடிவைத்திருப்பதற்கு எவ்விதமான தடையும் இல்லை.

பட மூலாதாரம், FRSC RIVERS STATE/FB

அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் மற்றும் பதிவு நீக்கப்பட்டுள்ளன. எனினும், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக, எஃப் ஆர் எஸ் சியின் பேச்சாளர் பிஸி கஸீம் நைஜீரியாவின் அரசு தொலைக்காட்சி நிறுவனத்திடம் கருத்து கூறியுள்ளார்.

பட மூலாதாரம், FRSC RIVERS STATE/FB

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதுவும் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்