எல்லை மீறுகிறதா ஈவ் டீசிங் தடுப்புப் படை?

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஈவ் டீசிங்கை தடுக்க சிறப்பு போலிஸ் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிறப்பு படையினரின் நடவடிக்கை சில சமயங்களில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பதாகவும் அது எல்லை மீறுவதாகவும் குற்றங்கள் எழுந்துள்ளன. எனவே அலகாபாத் சிறப்பு படையினருடன் ஒரு நாளை கழித்து இதுகுறித்த செய்திகளை தருகிறார் பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே.

உ.பி.யில் ஈவ் டீசிங் எதிர்ப்புப் படையின் நடவடிக்கை எல்லை மீறுகிறதா?

பட மூலாதாரம், Ankit Srinivas

பொது பூங்கா ஒன்றில் இந்தப் படையைக் கண்டதும் இளம் காதலர்கள் ஒளிந்து கொள்கின்றனர்.

"தயவு செய்து வெளியே வாருங்கள், நாங்கள் உங்கள் பாதுகாப்பிற்காகதான் இங்கு இருக்கிறோம்" என அந்த படையின் தலைவர், போலிஸ் துணை கண்காணிப்பாளர் நீரஜ் குமார் ஜாடவுன் தெரிவித்தார்.

அந்த நபர் எழுந்து மன்னிப்பு கோருகிறார், தான் எந்த தவறும் செய்யவில்லை என ஜாடவுனிடம் விளக்குகிறார்.

ஒரு சிறிய விசாரிப்பிற்கு பிறகு அந்த ஜோடிகள் மீண்டும் பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

"சிலர் போலிஸாரை கண்டு பயப்படுகின்றனர். நாங்கள் அதைத்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் ஈவ் டீசிங்காக உள்ளது."

உத்தரப் பிரதேசத்தில் உள்ள போலிஸார் அங்கு அதிக பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வருவதால் இந்த சிறப்பு படையை அமைத்தனர்.

எத்தனை பெண்கள் இம்மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை; பல பெண்கள் இது குறித்து புகார் தெரிவிப்பதில்லை.

ஆனால் அனைத்து பெண்களும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கக் கூடும்.

பட மூலாதாரம், Ankit Srinivas

மாநிலம் முழுவதும் மொத்தம் 1400 போலிஸார் இந்த சிறப்பு படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு படையிலும் மூன்று சீருடை அணிந்த அதிகாரிகளும் சாதாரண உடையில் ஒரு பெண் போலிஸாரும் இடம் பெறுவர்.

அவர்கள் கார்களில் சென்றும், நடந்து சென்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். பொதுவாக அவர்கள் அதிகம் புகார்கள் பெறும் இடங்களில் இந்த ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதுவரை இந்த படைகள் குறித்து கலவையான கருத்துக்கள் வந்துள்ளன.

சில படைகள் எல்லை மீறுவதாகவும் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்பிப்பது போன்றும் நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

மேலும் ஜோடிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகவும், அடிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

போலிசாரின் தலைமை செய்தி தொடர்பாளர் ராகுல் ஸ்ரீவத்சவா, "மிக சில அதிகாரிகளே அவ்வாறு நடந்து கொள்வதாக" தெரிவிக்கிறார்.

நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் அதிகாரிகளுக்கு எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம் என அவர் கூறுகிறார். இதுவரை விதிகளை மீறிய 9 அதிகாரிகளை தாங்கள் இடைநீக்கம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

18 வயதைத் தாண்டி இருப்பவர்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதே எங்கள் அறிவுறுத்தல் என அவர் தெரிவிக்கிறார்.

"இதற்கு வளர்க்கப்பட்ட முறைகளையும் குற்றம் சொல்ல முடியும். சில கலாசாரங்களில் பொது இடங்களில் ஒரு பெண்ணும் ஆணும் ஒன்றாக அமர்ந்து பேசுவது என்பது மறுக்கப்படுகிறது. எனவே இம்மாதிரியான சிந்தனைகளை கொண்ட சில போலிஸார் அம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் ஆனால் அது மிக குறைந்த எண்ணிக்கைதான்" என ஜாடவுன் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Ankit Srinivas

பூங்காவில் ஜாடவுனுடன் பேச வேண்டும் என ஒரு இளைஞர் அவரை நெருங்கினார்.

"என்னுடைய பெயர் அபிலாஷ் டெனிஸ். நான் உங்களின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் இதில் சில பிரச்சனைகளும் இருக்கு" என்று தெரிவித்தார் அந்த இளைஞர்.

"நான் எனது தோழியுடன் பொது பூங்காவிற்கு செல்ல விரும்புவேன். ஆனால் அது எப்போதும் ஆபத்தானதாக இருக்கும். ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள் எப்போதும் எங்களை சூழ்ந்திருப்பார்கள், தகாத கருத்துகளை தெரிவிப்பார்கள். மேலும் கடுமையான போக்கை கடைபிடிப்பார்கள்" என அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் அதற்கு போலிஸார் எங்களை எந்த நேரமும் தொல்லை செய்யலாம் என்று அர்த்தமில்லை எனவும் தெரிவிக்கிறார் அந்த இளைஞர்.

மேலும் போலிஸார் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத்தான் அவர்களை தொல்லை செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஜாடவுன்.

பூங்காவின் மற்றோரு இடத்தில் தனது அடையாளத்தை காட்டிக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர் போலிஸாரின் மீது கோபமாக காணப்பட்டார்.

பட மூலாதாரம், Ankit Srinivas

"எங்களை பாதுகாப்பாக உணர வைப்பது போலிஸாரின் கடமை. ஆனால் அதே சமயத்தில் ஒரு பொது இடத்தில் நான் எனது ஆண் தோழருடன் அமர்ந்திருக்கிறேன் என்பதற்காக ஏதோ ஒரு போலிஸ் என்னை வந்து கேள்வி கேட்பது எனக்கு பிடிக்கவில்லை". என அவர் தெரிவித்தார்.

"ஈவ் டீசிங் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதுகுறித்து போலிஸார் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அவர்கள் செய்வதில் சில மாற்றங்கள் தேவை என நான் உணர்கிறேன்" என்று அப்பெண் தெரிவித்தார்.

மேலும் நகரில் மற்றொரு பகுதியில் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த இரண்டு ஜோடிகளை போலிஸார் நெருங்குகிறார்கள்.

போலிஸாரின் இந்த பணிகளுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறார் கிரித்திகா சிங் என்ற மற்றொரு பெண். போலிஸாருடன் பேசுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.

"இந்த மாநிலத்தில் ஈவ் டீசிங் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் ஒவ்வொரு பெண்ணும் மோசமான நிகழ்வு ஒன்றை சந்தித்திருப்பார்".

"சில சமயங்களில் சில ஆண்கள் பொது இடங்களில் தகாத முறையில் நடந்து கொள்வார்கள். மோசமான செய்கைகளையும், பெண்களை அநாகரிகமாக தீண்டவும் செய்வார்கள்" என தெரிவிக்கிறார் கிருத்திக்கா சிங்.

அவரின் தோழி சாதனா மெளரியாவும் அதை ஒப்புக் கொள்கிறார்.

பட மூலாதாரம், Ankit Srinivas

"மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என போலிஸார் கூறுவதாக புகார்களை நான் பார்த்தேன். ஆனால் இந்த படைகள் நிறுத்தப்பட கூடாது. இந்த படையால் மாற்றங்கள் ஏற்படுவதை நான் உணர்கிறேன். 100 சதவீதம் இல்லை என்றாலும் தற்போது நாங்கள் ஓரளவிற்கு பாதுகாப்பாக உணர்கிறோம்" என தெரிவிக்கிறார் அவர்.

"இப்படி துன்பப்படுவதுதான் நிஜம் என்பது தங்களுக்கு பழகிவிட்டது என்றும் ஆனால் முதல் முறையாக அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில் சில குறைபாடுகள் இருந்தாலும் அதை ஒப்புக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

காணொளிக் குறிப்பு,

உத்தர பிரதேசத்தில் பெண்களை காக்கும் ஆண்டி ரோமியோ படை

படைகள் மற்றும் மக்களுக்கு இடையே ஏற்பட்ட இம்மாதிரியான பேச்சுக்களை நான் பார்த்தேன். பள்ளிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் நாங்கள் நிறுத்தப்பட்டோம்.

இந்த படைகள் பலரை கேள்வி கேட்டனர் ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. "எங்களின் நோக்கம் மக்களை கைது செய்வதில்லை. ஈவ் டீசர்களை கைது செய்ய போலிஸார் இருக்கின்றனர் என்பதை அவர்களுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். அவர்கள் மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என தெரிவிக்கிறார் ஜாடவுன்.

பட மூலாதாரம், Ankit Srinivasf

அந்த நாளின் முடிவில், இந்த நடவடிக்கையை கண்காணிக்கும் குழு இது ஒரு வெற்றிகரமான முயற்சியா என்று ஆராய்கிறார்கள்.

சில இடங்களில் பெரும்பாலான பெண்கள் இந்த படையின் பணிகளை பாராட்டுகிறார்கள். ஆனால் சிலர் இம்முறையில் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

ஈவ் டீசிங் என்பதுதான் தற்போதைய நிஜமாகவுள்ளது; எனவே பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் மற்றும் அவர்களை துன்புறுத்துபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் உணர்த்த விரும்பினோம் என தெரிவிக்கிறார் மூத்த போலிஸ் அதிகாரி ஜாவித் அகமத்.

இது இன்னும் சிறப்பாக பல காலம் செயல்படவுள்ளது. நாங்கள் இம்மாதிரியான நடவடிக்கையை தொடங்கியது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால் அந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக மாற வழியில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

நீங்கள் இதையும் படிக்க விரும்பலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்