12 வயது சிறுவன் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியான சோகம்: காஷ்மீரில் அதிர்வலைகள்

12 வயதான ஃபெய்ஸான் ஃபயாஸ் தான் கொல்லப்பட்ட அன்று காலை, இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் பிரதேசத்தில் பட்காம் மலையுச்சியில் இருக்கும் வீட்டில் தூக்கத்தில் இருந்து எழுந்து, தேனீர் அருந்திவிட்டு திருகுரான் வாசித்தார்.

காஷ்மீர் பிரச்சனைக்கு பலிகடாவான படிப்பில் கெட்டியான 12 வயது சிறுவன்

பட மூலாதாரம், Abid Bhat

பின்னர், சமையலறைக்கு வந்தார்.

அவருடைய பாட்டி ஒரு தட்டு திராட்சைப் பழங்களை அவருக்கு வழங்கினார். ஃபெய்ஸான் அதனை உண்டாரா என்று அவருக்கு நினைவில்லை.

விவசாயி ஒருவரின் மகனான ஃபெய்ஸான், ஃபிரான் எனப்படும் காஷ்மீர் மக்கள் அணிகின்ற கம்பிளி தொப்பையை அணிந்துவிட்டு ஞாயிறு வகுப்புக்கு அமைதியாக புறப்பட்டார்.

சில மணிநேரத்திற்கு பிறகு வால்நட் மற்றும் வில்லோ மரங்கள் சூழ்ந்திருந்த சுட்டெரிக்கும் வெயிலில் பள்ளி மைதானம் ஒன்றில் ஃபெய்ஸான் இறந்து கிடந்தார்.

எங்கிருந்து வந்தது குண்டு?

துணை ராணுவப்படையினர் அவரை தலைக்கு பின்னால் சுட்டுவிட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பிரகாசமாக, இதமான குளிர் நிலவிய காலையில், ஒரு பாக்கெட் பிஸ்கட்டை கொண்டு ஃபெய்ஸான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுகொண்டிருந்த வாக்குச்சாவடி அமைந்திருந்த இந்த பள்ளக்கூடத்திற்கு அருகில், இந்திய நிர்வாகத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

பட மூலாதாரம், Abid Bhat

ஒரு மாடியுடைய, மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கக்கூடிய இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து நான்கு முறை சுடப்படும் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சில தகவல்கள்படி, குன்றின் மேலிருந்தும், முன்னால் இருந்த சாலையில் இருந்தும் போராட்டக்காரர்களால் இந்த பள்ளிக்கூடம் கற்கள் வீசி தக்கப்பட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அங்கு ஏற்பட்டிருந்த பதட்டத்தை பற்றி அறிய ஃபெய்ஸான் நின்றிருக்கலாம். அப்போது துப்பாக்கி குண்டு அவரை பதம் பார்த்துள்ளது. அதற்கு அருகில் நின்ற இருவர், இந்த செய்தியை அவரது வீட்டுக்கு ஓடிசென்று தெரிவித்தனர்.

அந்த பள்ளி மைதானத்திற்கு பதறியடித்து கொண்டு ஓடிய தாய், ரத்தம் வடிந்து கொண்டிருந்த மகனை கட்டி பிடித்து கதறினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பட மூலாதாரம், Abid Bhat

"இறந்து விட்டது எனக்கு தெரியும்"

"அவன் இறந்துவிட்டான் என்று எனக்கு தெரியும்" என்று ஸாரிஃபா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

ஃபெய்ஸான் சுடப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு கிராமவாசி தன்னுடைய செல்பேசியில் எடுத்துள்ள இதயத்தை உருக்குகின்ற காணொளியில், கவலை தோய்ந்த முகத்தில் ரத்தம் வடியும் நிலையில் புலம்புகின்ற மனிதர் ஒருவரின் மடிமேல் இறந்த சிறுவனின் உடல் கிடக்கிறது. வாகனம் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதும் தெரிகிறது. அங்கு ஃபெய்ஸான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்கின்றனர்.

ஃபெய்ஸானின் இறுதிச் சடங்கும் இன்னொரு செல்பேசியில் காணாளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை துணியால் மூடப்பட்ட அவருடைய உடல், மருத்துவமனை கட்டில் ஒன்றில் சற்றே மேலும் கீழமாக அசையும் நிலையில், மக்களின் கண்ணீர் கடலின் மத்தியில், தங்களுடைய சமீபத்திய தியாகியை கிளர்ச்சியாளர்கள் புகழ்ந்த வண்ணம் கொண்டு செல்லப்படுவது இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், Abid Bhat

மாலை வேளையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கு அருகில் இருந்த வாக்குசாவடி மையங்களில் இந்திய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது, ஞாயிற்றுக்கிழமை துணை ராணுவ படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் பெல்லட் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 8 பேரில் ஃபெய்ஸானும் ஒருவர்.

100 பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட சுமார் 170 பேர் கல்லெறிதலிலும், வன்முறை மோதல்களிலும் அன்றைய தினம் காயமடைந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

காஷ்மீர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்

  • பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றிதிலிருந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
  • ஒட்டுமொத்த காஷ்மீரின் நிலப்பரப்பிற்கும் உரிமைகோரும் இரு நாடுகளும் அதன் ஒரு பகுதி நிலப்பரப்பையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
  • இவ்விரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள மூன்றில் இரண்டு போர்கள் காஷ்மீரை மையமாக வைத்து நிகழ்ந்துள்ளன.
  • 1989 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக அங்கு ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, போராட்டக்காரர்களையும், போராடும் கிளர்ச்சியாளர்களையும் இந்திய பாதுகாப்பு படையினர் கடுமையாக கையாளும் தந்திரம் பற்றிய புகார்கள் இந்த பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாக்குப்பதிவு மந்தம்:

ஞாயிற்றுக்கிழமை வாக்களித்தோரின் மொத்த எண்ணிக்கை வெறும் 7.1 சதவீதம் மட்டுமே. பத்தாண்டுகளில் மிகவும் குறைவான வாக்குப்பதிவு இது. இந்த பிரதேசத்தின் முக்கிய கட்சிகளுக்கு மிக பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Abid Bhat

பிரிவினைவாத குழுக்கள் இந்த தேர்தலை நிராகரித்ததோடு, இந்திய அரசால் நடத்தப்படும் மக்களுக்கு எதிரான நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வாக்காளர்களை அவை வலியுறுத்தியிருந்தன.

கடந்த தேர்தலில் ஆர்வமாக வாக்களிக்க வந்த டால்வான் போன்ற ஓரளவு அமைதியான இடங்களில் கூட வெறுப்படைந்த வாக்காளர்கள் பொதுவாக வராமலேயே இருந்துவிட்டனர்.

கொடூர புள்ளிவிரத்தில் ஒருவராகும் ஃபெய்ஸான்

வாக்காளாகள் தாங்கள் வாக்களிப்பதை நிராகரித்த அன்று ஃபெய்ஸான் ஏன் கொல்லப்பட்டார் என்று தெளிவாக தெரியவில்லை.

அவர் கல்லெறியவில்லை அல்லது படையினரை இழித்துரைக்க வில்லை என்று எல்லா தகவல்களும் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்களை வெறுமையாக இருந்த வாக்குச்சாவடிகளில் இருந்து அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை போலீஸ் சுட்டதாகவும், ஆனால், படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Abid Bhat

பிற மாநிலங்களில் இருந்த கொண்டு வரப்பட்ட படையினர் காஷ்மீரின் சிக்கலான மோதல் பிரதேசங்களில் போராட்டங்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை கையாளுவதற்கு தயார்படுத்தப்படாதவர்களாக இருந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு துணை ராணுவப்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலும் உள்ளது.

எது எப்படி இருந்தாலும், காஷ்மீரின் முடிவுறாத சோகத்தில் பயங்கரமானதொரு புள்ளிவிவரமாக ஃபெய்ஸான் மாறியுள்ளார்.

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்