உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள்

அமெரிக்காவின் குண்டு

பட மூலாதாரம், PUBLIC DOMAIN

"வெடிகுண்டுகளின் தாய்" என்று கருதப்படும் வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை பயன்படுத்தப்படாத, தன்னிடமுள்ள அணு ஆயுதமில்லாத மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது.

விமானத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஜிபியு-43/பி என்ற மிகப்பெரிய வெடிகுண்டுதான் "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என்று அறியப்படுகிறது.

2003ல் முதன்முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, இதுவரை எந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை.

மேலும், எம்.ஒ.ஏ.பி மட்டுமே அமெரிக்க ராணுவத்தில் உள்ள மிகப்பெரிய அணு ஆயுதமில்லா வெடிகுண்டு அல்ல.

மாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியது அணுகுண்டுகள் என்று அறியப்பட்டாலும், இவற்றைத் தவிர வேறுவிதமான வெடிகுண்டுகளும் மிகப் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தக் கூடியவை தான். இவற்றை மாபெரும் வெடிகுண்டுகள் என்று சொல்லலாம்.

அவற்றின் சக்தியை தெரிந்துக்கொண்டால், அவை பயன்படுத்தப்படும் போது ஏற்படும் பேரழிவை பற்றி அனுமானிக்கமுடியும்.

உலகிலேயே மிகப்பெரிய ஐந்து பெரிய வெடிகுண்டுகள் பற்றி பார்ப்போம்.

1. அனைத்து வெடிகுண்டுகளின் தாய் (ஜி.பி.யு-43/பி)

பட மூலாதாரம், Getty Images

இதுதான் ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டது. 300 அடி (9 மீட்டர்) நீளமும், 9800 கிலோ எடையும் கொண்ட ஜி.பி.யு-43/பி, ஜி.பி.எஸ் மூலம் இயக்கப்படுகிறது. எம்.சி-130 என்ற போக்குவரத்து விமானத்தின் சரக்குகளை கையாள்வதற்கான கதவின் வழியாக வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, பூமியில் விழுந்தபின் வெடிக்குமாறு வடிவமைக்கப்பட்டது. எம்.ஓ.ஏ.பி விமானத்தில் இருந்து, ஒரு விமானி இந்த வெடிகுண்டை வீசினார்

இந்த வெடிகுண்டு வீசப்படும்போது, எந்தத் தடையும் ஏற்படாமல் இருக்க, பாராசூட் மூலம் அழுத்தம் தரப்படுகிறது. நான்கு கட்டமாக வழிநடத்தப்படும் இந்த வெடிகுண்டு, பெருமளவிலான தூசி மண்டலத்தை ஏற்படுத்தக்கூடியது. 18 ஆயிரம் பவுண்டு எடை கொண்ட இது, மெல்லிய அலுமினிய கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.

2. பதுங்குகுழி தகர்ப்பான் (எம்.ஓ.பி)

பட மூலாதாரம், Getty Images

இதுவும் அமெரிக்காவின் மிகப்பெரிய அணு அல்லாத வெடிகுண்டு ஆகும். பெரும் வெடிக்கிடங்குகளை தகர்ப்பதால் இதற்கு எம்.ஓ.பி (Massive Ordinance Penetrator) என்று பெயரிடப்பட்டுள்ளது. பதுங்குக்குழி தகர்ப்பான் என்றும் இது அழைக்கப்படுகிறது. 14,000 கிலோ எடை கொண்ட இது, சுமார் 20.5 அடி நீளம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உலகில் அணுகுண்டில்லாத பல ஆயுதங்கள் இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். பூமிக்குள் அமைந்திருக்கும் சுரங்கங்கள் மற்றும் பதுங்குக்குழிகளை தகர்க்க இவை பயன்படுத்தப்படுகின்றன. பி-2 பாம்பரில் இருந்து பிரயோகப்படுத்தப்படும் இவை, சூப்பர்சானிக் வேகத்தில் நிலத்தை தாக்குகின்றன. இந்த வெடிகுண்டு 200 அடி ஆழம் வரை ஊடுருவக்கூடியது, 60 அடி வரையிலான கான்கிரீட் தளத்தை தகர்க்கும் திறன் கொண்டது.

3. அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை (ஏ.டி.பி.ஐ.பி)

பட மூலாதாரம், AFP

ராட்சத வடிவிலான மற்றும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகளை அமெரிக்கா மட்டும் தயாரிக்கவில்லை, ரஷ்யாவும் இதில் ஆர்வம் காட்டிவருகிறது. விமானத்தின் மூலம் பயன்படுத்தும் சக்திவாய்ந்த உயரழுத்த வெடிகுண்டை (ATBIP), தயாரித்திருக்கும் ரஷ்யா, அமெரிக்காவிற்கு மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து வெடிகுண்டுகளுக்கும் தந்தை என்று இதை ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை.

ரஷ்யாவின் பொதுப்பணியாளர் துறைத் தலைவர் இந்த வெடிகுண்டைப் பற்றி இப்படிச் சொல்வதாக வார் ஹிஸ்ட்ரி ஆன்லைன் இதழ் கூறுகிறது, "உயிரோடு எஞ்சியிருப்பவர்கள் ஆவியாகி, மேலே சென்றுவிடுவார்கள்". எஃப்.ஓ.ஏ.பி என்பது ஒருவிதமான எரிவாயு வெடிகுண்டாகும். தொழில்நுட்பரீதியாக உயரழுத்தம் கொண்ட ஆயுதமான இது, 7100 கிலோ எடை கொண்டது. இதில் 40 டன் டி.என்.டி பயன்படுத்தப்பட்டிருக்கும்.

4. ஜி.பி.யூ-28 கடின இலக்கு ஊடுருவி

பட மூலாதாரம், VIDEO GRAB

இஸ்ரேல் மற்றும் தென்கொரியாவின் விமானப் படைகளிடம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட, 2300 கிலோ எடை கொண்ட ஜி.பி.யூ-28 பதுங்குகுழி தகர்ப்பான் வெடிகுண்டுகள் உள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. 1991 ஆம் ஆண்டில், இராக்கின் பதுங்கு குழிகள், இராணுவ நிலைகள், முக்கியமான மையங்களை அழிப்பதற்காக, அமெரிக்க விமானப்படை இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தியது.

ஜி.பி.யூ-28 பேவ்வே III வெடிகுண்டுக்கு மாற்றான இது, ஆறு மீட்டர் தடிமன் கொண்ட கான்கிரீட்டையும் துளைக்கக் கூடிய திறன் பெற்றது.

5. ஸ்பைஸ் வெடிகுண்டு

பட மூலாதாரம், AFP

இப்போது இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த, அணுவாற்றல் அல்லாத வெடிகுண்டைப் பற்றி பார்க்கலாம். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இது, துல்லியமாக தாக்கவல்லது, செலவு குறைவானது. இந்திய விமானப்படையில் உள்ள மிகப்பெரிய மரபு சாரா வெடிகுண்டான இது, ரஃபேலின் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட மிராஜ் 2000 போர் விமானங்களில் இருந்து செலுத்தப்படுவது.

இது 900 கிலோகிராம் எடை கொண்டது. இதைத் தவிர சீனாவிடம் 250 முதல் 1350 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான வெடிகுண்டுகளும் உள்ளன.

பிற செய்திகள்

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :