கிறித்துவர் - முஸ்லிம் திருமணம் இங்கு ஏன் சவாலானது?

காப்டிக் கத்தோலிக்க திருமணப் பெண்

வட எகிப்தில் காப்டிக் தேவாலயங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நாட்டின் சிறுபான்மையின கிறித்துவர்கள் எதிர்கொண்டுவரும் ஆபத்துக்களை கோடிட்டு காட்டியுள்ளது.

ஆனால், நைல் நதியின் மேல் பகுதியில் வாழும் பழங்கால நாடான நூபியன்ஸ் மத்தியில், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் பெரும்பாலும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

நிகோலா கெல்லி முஸ்லிம் - கிறித்துவ திருமணம் ஒன்றில் பங்கெடுத்துள்ளார். தெற்கு நகரான அஸ்வானில் இரவைத்தாண்டி மிக ரகசியமாக இத்திருமணம் கொண்டாடப்படுகிறது.

''எல்லோரும் என்னிடம் என்னுடைய சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தினார்கள். ஆனால், அது இயலாத காரியம்,'' என்று அக்ரம் தன் கண்களை சிமிட்டியபடி சொல்கிறார்.

அக்ரம் திருமணத்தின் காலை நேரம் அது, நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள கிராமத்தில் திருமணம் நடைபெற உள்ளது. மசூதிக்கு சென்று தன்னுடைய உறுதி மொழிகளை எடுக்க அக்ரம் பரபரப்பாக தயாராகி வருகிறார்.

இது ஒரு பாரம்பரிய விழாவாக இருக்காது. அக்ரம் தனியாகத்தான் தன்னுடைய உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வார். அதே நேரம் மணப்பெண் சாலி தன் வீட்டில் அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்.

தான் ஒரு கிறித்துவர் என்பதை சாலி வெளிப்படையாக தன்னை அடையாளம் காட்டமாட்டார். தான் பாதுகாப்பற்றது போல உணருகிறார் அவர். ஆனால், சாலி உடன் ஆயர் ஒருவர் இருக்கிறார். கிறித்துவ மரபுகளை கடைப்பிடிக்கிறார். மேலும், தனக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவேன் என்கிறார்.

''சொந்த மதத்தை விட்டு திருமணம் செய்துகொள்ளும் முதல் ஜோடி நாங்கள்தான். இது கடினமானது, முக்கியமாக என்னுடைய பெற்றோர்களுக்கு,''என்கிறார் அக்ரம்.

சுமார் ஏழு ஆண்டுகள், இந்தக் காதலர்கள் ஒருவரையொருவர் பார்ப்பதற்கும் தங்களது பெற்றோர்களால் தடைவிதிக்கப்பட்டனர்.

இருவரின் சந்திப்பையும் மதத்தலைவர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தடுத்தனர். ஆனால், அதையும் மீறி சில சுருக்கமான ரகசிய சந்திப்புகளை இருவரும் நடத்தினார்கள்.

சாலி மற்றும் அக்ரம் போன்ற நூபியன் தம்பதியினருக்கு பிற மதத்திலிருந்து திருமணம் செய்வது தடை செய்யப்பட்டதல்ல. ஆனால், அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவதை கூச்சத்துக்குரிய விடயமாகக் கருதுகிறார்கள்.

அதனால் பகல் பொழுதை தனியாக கழிக்கும் தம்பதியினர், இரவு வந்தவுடன் இருவரும் சந்தித்து தங்களது திருமண வாழ்க்கையின் முதல் தருணங்களை நடனம் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

எகிப்தில் எங்கு நடைபெற்றாலும் அக்ரம் மற்றும் சாலியின் திருமணம் ஓர் ஆபத்தான காரியமாக இருக்கும்.

2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சியில், எகிப்தில் உள்ள கிறித்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், இரு காப்டிக் தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், அக்ரம் இதைப்பற்றி எல்லாம் நினைத்து கவலை அடைந்ததாக தெரியவில்லை.

திருமணத்திற்காக உறவுகள், நட்புக்களை அழைப்பது குறித்து கடந்த வாரம் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைகள் அக்ரம் ஆலோசனை நடத்திவிட்டார். இது நூபியன் பாரம்பரியம்.

மசூதியின் ஒரு மூலையில் இமாம் முஹமது ஷோபி இருந்தார்.

''சுமார் 800 ஆண்டுகளுக்கும் அதிகமாக இங்கு கிறித்துவ மதம் இருந்து வருகிறது'' என்கிறார் அவர். ''என்னை பொறுத்தவரை கலப்புத் திருமணம் செய்வது ஒரு பெரிய விஷயமல்ல. ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் அமைதியாக வாழ முடியும் என்றார்.

பின், அக்ரம் முதுகை ஆசையாக தட்டுகிறார் முகமது ஷோபி.

''எங்களது சமூகத்தில், விவாகரத்து என்பது சகஜமான விடயம் அல்ல. மேலும், ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதென்பதும் அனுமதிக்கப்படாதது. எங்கள் இளைஞர்களுக்கு கிறித்துவம் என்பது மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்றார் அவர்.

ஷ்தீத்தின் மற்றொரு பக்கத்தில், சாலி தான் பிறந்த வீட்டில் திருமண நடுக்கத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார். அவருடைய தோழிகள் குதுகலமாக அடிக்கடி கண்ணாடிமுன் அலங்காரம் செய்வதும், செல்ஃபிகளை எடுப்பதுமாக உற்சாகமாக இருக்க, சாலி மட்டும் அமைதியாக இருக்கிறார்.

''உறுதிமொழி பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. அது மற்றவர்களுக்குதான், எங்களைப்போன்ற தம்பதியினருக்கு அல்ல. அது என்னுடைய முன்னுரிமையும் அல்ல,'' என்கிறார் அவர்.

மணப்பெண்ணை பொறுத்தவரை, இந்த நிலைக்கு அவர்களுடைய உறவை எடுத்துவர தன் கணவராகப் போகும் காதலரிடம் அமைதியான விவாதங்களையும், பெற்றோரிடம் கொஞ்சம் காரசாரமான விவாதங்களையும் பல ஆண்டுகளாக செய்ய வேண்டி இருந்தது.

''நான் அவரை எப்போதும் விரும்பினேன், ஆனால் எங்களை திருமணம் முடிக்க அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய அப்பா பல நாட்களாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனால், இப்போது மதகுருவும், ஆயரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.''

இரவு வந்தவுடன், நைல் நதிக்கரைக்கு அமைந்துள்ள சிகை அலங்கார நிபுணரிடம் படகு மூலம் செல்கிறார் சாலி.

சிலமணி நேரம் கழித்து அழகு நிலையத்தை விட்டு வெளியே வந்த சாலி, பதற்றம் நிறைந்த 18 வயது நிரம்பிய பெண்ணிடமிருந்து மாறுபட்டிருந்தார்.

''நான் மிகவும் நம்பிக்கையுடன் உணர்கிறேன். தற்போது மிகவும் அழகாக இருக்கிறேன்'' என்கிறார் சாலி உறுதியாக.

நடு இரவு வருவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு, அக்ரமின் கார் திருமண மண்டபம் அருகே வந்து நிற்கிறது.

''அவர் மூன்றுமணி நேரம் தாமதமாக வருகிறார்! '' என்று தன் தோழிகளிடம் கத்துகிறார் சாலி.

வெளியே, தன்னுடைய கழுத்தில் உள்ள டையை சரிப்படுத்தி முடியை சரி செய்கிறார் அக்ரம்.

ஆட்டுத்தோல் கொண்ட மேளம் தம்பதியினரின் நண்பர்களுக்கு வழங்கப்பட ஒழுங்கான வட்டத்தில் அவர்கள் கூடுகிறார்கள்.

பின், சில நிமிடம் அமைதி நிலவ, அக்ரம் திருமண மண்டபத்துக்குள் செல்கிறார்.

எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தது. உற்சாகம் கரைபுரள, வாழ்த்துக்கள் வானை முட்ட, இருவரும் கரம் கோர்த்தார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்