வடகொரியாவின் புதிய ஏவுகணை முயற்சி தோல்வி; சில நொடிகளில் வெடித்துச் சிதறியதாகத் தகவல்

வடகொரியாவின் ஏவுகணை முயற்சி தோல்வியடைந்திருப்பதாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முயற்சி தோல்வி

பட மூலாதாரம், Reuters

அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தின் இடையில், அமெரிக்காவை வடகொரியா எச்சரித்த அடுத்த நாள், கிழக்கு கடற்கரைப் பகுதியில் நடத்திய சோதனை தோல்வியில் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏவப்பட்ட சில நொடிகளில் அந்த ஏவுகணை வெடித்துச்சிதறிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தனது ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை தனது அணிவகுப்பில் காட்டியது வடகொரியா.

ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிராக, வடகொரியா ஏற்கெனவே ஐந்து அணு ஆயுத சோதனைகளையும், வரிசையாக ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விவாதிக்க அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தென்கொரியா செல்லும் நிலையில், சமீபத்திய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Reuters

சின்போ என்ற கிழக்கில் உள்ள துறைமுகத்தில் இருந்து புதிய வகை ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்க்க வடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூடுதல் விவரங்களைப் பெற விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாக அது கூறியுள்ளது.

வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை என்று நம்பப்படும் ஏவுகணையை கண்டுபிடித்து பின்தொடர்ந்ததாகவும் அது தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் அமெரிக்காவின் பசிபிக் படைப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஏவுகணை ஏவப்பட்டவுடனேயே வெடித்துச்சிதறிவிட்டது என அமெரிக்க கடற்படை கமாண்டர் டேவ் பென்ஹத்தை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தோல்வியில் முடிந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்க வாய்ப்பில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருந்தாலும் விசாரணை தொடர்வதாக அவர் கூறினார்.

வடகொரியாவின் தந்தை என்று அறியப்படும் கிம் இரண்டாம் சங்கின் 105-வது பிறந்த நாள் விழாவை ஒட்டி நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில் தனது படைபலத்தைக் காட்டியது அந்த நாடு. அதே நேரத்தில், புதிய அணு ஆயுத சோதனைக்கும் அதன் தலைவர் கிம் ஜாங் உத்தரவிடுவார் என்று ஊகங்கள் எழுந்தன.

அந்த அணிவகுப்பில், கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணையும் கொண்டிருந்ததாகவும், தனது பலத்தைப் பறைசாற்றும் நோக்கத்துடன் அது செய்யப்பட்டிருப்பதாகவும் பார்க்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்