90 ஆண்டுகள் தினமும் 3 முட்டை: 117 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பெண்ணின் ஆயுள் ரகசியம்

உலகின் மிக மூத்த நபர் தனது 117-ஆவது வயதில் இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Image copyrightAFP
Image caption உலகின் வயதான நபர் மொரானோ மரணம்

இத்தாலியில் உள்ள பீட்மோண்ட் பகுதியில் 1899-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதியன்று எம்மா மொரானோ பிறந்தார். கடந்த 1800-களில் பிறந்தவர்களில் அதிகாரப்பூர்வமாக இன்னமும் உயிர் வாழ்ந்த கடைசி நபர் எம்மா மொரானோதான்.

தான் நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததற்கு தனது மரபணுவும், ஒரு நாளில் மூன்று முட்டைகள் உண்ணும் தனது உணவுப்பழக்கமும் தான் காரணம் என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார். இரண்டு முட்டைகளை வேக வைக்காமல் பச்சையாக தான் உண்டு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

தன்னுடன் உடன்பிறந்த 8 சகோதர சகோதரிகளில் மூத்தவரான மொரானோ, அனைவரையும் விட நீண்ட காலம் உயிர் வாழ்ந்துள்ளார்.

இத்தாலியின் வடக்குப் பகுதி நகரான வெர்பானியாவில் உள்ள தனது வீட்டில் மொரானோ காலமானார். மூன்று நூற்றாண்டு காலங்களில் இவரது வாழ்க்கை அமைந்திருந்தது. ஒரு மோசமான திருமண வாழ்க்கையை சந்தித்த மொரானோ, தனது ஒரே மகனின் இழப்பு என்ற பெருந்துயரையும், இரண்டு உலகப் போர்களையும், 90-க்கும் மேற்பட்ட இத்தாலி அரசாங்கங்களையும் தன் வாழ்வில் கண்டுள்ளார்.

போதை மருந்துக்கு அடிமையான மலைப்பாம்பு!

நீண்ட ஆயுளுக்கு காரணம் என்ன?

தனது நீண்ட ஆயுளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தனது குடும்ப மரபணு காரணமாக அமைந்ததாக மொரானோ தெரிவித்தார். அவரது அம்மா 91 வயது வரை வாழ்ந்த சூழலில், மொரானோவின் சகோதரிகளில் பலர் நூறு வயதை எட்டினர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தனது இளம்வயது புகைப்படத்தை உற்றுநோக்கும் மொரானோ

ஆனால், மொரானோவின் நீண்ட ஆயுளுக்கு பொதுவான வழக்கத்தில் இல்லாத ஒரு வித்தியாச உணவு முறையை அவர் பின்பற்றியதும் காரணமாக கூறப்படுகிறது. 90 ஆண்டுகளுக்கு மேலாக, தினமும் மூன்று முட்டைகளை உண்டு வந்த மொரானோ, அதில் இரண்டு முட்டைகளை பச்சையாக உண்டது குறிப்பிடத்தக்கது.

முதல் உலகப் போருக்கு பின்னர், அவர் ரத்த சோகையாக இருப்பதை மருத்துவர் கண்டறிந்த பின்னர் தனது இளம் வயதில் இருந்து அவர் இந்த உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளார்.

27 ஆண்டுகளாக மொரோனோவுக்கு மருத்துவராக இருந்து வந்த கார்லோ பாவா, ஏஃஎப்பி செய்தி முகமையிடம் தெரிவிக்கையில், மிக அபூர்வமாகத்தான் மொரோனோ காய்கறிகள் அல்லது பழங்களை உண்பார் என்று தெரிவித்தார்.

''அவரை நான் சந்தித்த காலங்களில், தினமும் மொரோனோ மூன்று முட்டைகளை உண்பது வழக்கம். அதில் 2 முட்டைகளை அவர் பச்சையாக காலை வேளைகளில் உண்பார். நண்பகலில் ஒரு முட்டை ஆம்லெட் உண்பார். மேலும் , இரவில் சிக்கன் உணவை அவர் உண்பார்'' என்று மருத்துவர் கார்லோ பாவா தெரிவித்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்த மொரானோ

மேலும், தனது நீண்ட ஆயுளுக்கு, கடந்த 1938-ஆம் ஆண்டு தனது கணவனை விட்டு பிரிந்திட எடுத்த முடிவும் காரணம் என்று மொரானோ தெரிவித்தார். தனது ஆறு மாத மகன் உயிரிழந்த ஓர் ஆண்டுக்குள் மொரானோ அவரது கணவரை பிரிந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கடந்த ஆண்டு தனது 117-வது பிறந்தநாளை கொண்டாடிய மொரானோ

தனது திருமண வாழ்க்கை எப்போது ஆரோக்யமாக இருந்ததில்லை என்று மொரானோ குறிப்பிட்டார். முதலாம் உலகப் போரின் போது, ஒரு இளைஞன் மீது மொரானோவுக்கு காதல் இருந்தது. அந்நபரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய அவர் விரும்பவில்லை.

''எனது 26-ஆவது வயதில் நான் திருமணம் செய்து கொண்டேன்'' என்று மொரானோ தெரிவித்தார். இறுதியாக, அவரது மண வாழ்க்கை கசந்தது. 1938-ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டாலும், மொரானோவின் கணவர் கடந்த 1978-ஆம் ஆண்டில் இறக்கும் வரை அவரது திருமண பந்தம் முறியவில்லை.

தனக்கு 75 வயதாகும் வரை பணியாற்றிய மொரானோ, மீண்டும் தன் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தார்.

''என்னை யாரும் அதிகாரம் செய்யக்கூடாது என்று நான் விரும்பினேன்'' என்று மொரானோ நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மொரானோ காலமாகிவிட்டதால், கடந்த 1900 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதியன்று பிறந்த ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன்தான், தற்போது உலகின் வயது முதிர்ந்த நபர் என்று அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஜிஆர்ஜி என்ற மூப்பியல் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

இந்த செய்திகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:

வாடகைக்கு வீடு, வாடகையாக ''செக்ஸ்"

"காஷ்மீரிகளை சித்ரவதை செய்யும் காணொளியை பார்த்தும் கோபம் வரவில்லையா?"

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வீட்டுவாசலுக்கே ஓட்டல் சாப்பாட்டைக் கொண்டுவரும் ரோபோக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்