பெண்களின் சாதனைக்கு பக்கபலமாக மாறிய கருத்தடை மாத்திரைகள்!

கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கருத்தடை மாத்திரைகளால் பெரிய அளவிலான சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உணர்வதோடு, அது மறுக்க முடியாத உண்மையாகவும் உள்ளது.

அமெரிக்காவில், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் கருத்தடை மாத்திரைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், பாலியல் கல்வியாளருமான மார்கரெட் சாங்கர் கேட்டுக்கொண்டார். ஆண்களுக்கு சரிநிகரான அதிகாரத்தை பெண்களும் பெற, பெண்களுக்கு சமூக சுதந்திரமும், பாலியல் சுதந்திரமும் தேவை என்பது சாங்கரின் திண்ணமான எண்ணமாக இருந்தது.

கருத்தடை மாத்திரைகள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கவனமற்ற உடலுறவால் கருவுறுவது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த பிரச்சனையை சமாளிக்க, காதலர்கள் காலங்காலமாக பல்வேறு வித்தியாசமான உபாயங்களை கடைபிடித்து வந்தனர்.

முதலையின் மலம்

பண்டையகால எகிப்தில், கருத்தரிப்பதை தவிர்க்க விரும்பிய பெண்கள், கருத்தடையாக முதலையின் மலத்தை பயன்படுத்தினார்கள். பிறப்புறுப்பில் நோய்தொற்று ஏற்படுவது மற்றும் கருவுறுவதை தடுப்பதற்காக முதலையின் மலம் பயன்படுத்தப்பட்டதாக கி.மு.1850 ஆம் ஆண்டின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. முதலையின் மலத்தில் விந்தணுக்களை அழிக்கக்கூடிய அமிலத்தன்மை இருப்பது இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.

எலுமிச்சம் பழச்சாறு

அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து, அதிலிருந்து கிடைக்கும் சாறை விந்தணுக்கொல்லியாக பயன்படுத்துவது பல கலாசாரங்களில் பின்பற்றப்படும் வழக்கம்தான். கருத்தடைக்காக எலுமிச்சை சாறு பயன்படுத்துவதைப் பற்றி காஸனோவா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆட்டின் மூத்திரத்தில் இருந்து உருவாக்கப்படும் ஆணுறையில், அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து பயன்படுத்துவதால், கர்ப்பப்பை வாயில் தற்காலிக தடை ஏற்படும்.

பட மூலாதாரம், MANAGED (PROJECT-LICENSE

எலுமிச்சம்பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் விந்தணுக்கொல்லியாக வேலை செய்திருக்கலாம். ஆனால், காதலில் கட்டுப்பாட்டோடு இல்லாதவர்களுக்கு, இந்த உத்தியும் கட்டுப்பாடான பலனையே அளித்திருக்கும். எலுமிச்சம்பழத்தை கருத்தடையாக பயன்படுத்தும் பழக்கம் தற்போதும் சில இடங்களில் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற சிக்கலான முறைகளை கைவிட்டு, கர்ப்பம் ஏற்படாமல் தடுக்க ஆணுறை (காண்டம்) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆணுறையை சரியாக பயன்படுத்தாதது, அது நழுவி விடுவது மற்றும் சில சமயங்களில் ஆணுறை கிழிந்து போய்விடுவதாலும் அது பயனற்றதாகிவிடுகிறது.

ஓர் ஆய்வின்படி, உடலுறவின்போது கருத்தடைக்காக ஆணுறை பயன்படுத்தும் 18 சதவிகிதத்தினருக்கு அது பலனளிக்கவில்லை, அதாவது உடலுறவின் போது நூறு பேர் ஆணுறை பயன்படுத்தினால் அதில் 82 சதவீதமே பலனளித்தது, மீதமுள்ள 18 பெண்கள் கர்ப்பம் தரித்தனர்.

ஆனால், ஆணுறையை விட கருத்தடை மாத்திரைகள் சிறப்பாக செயல்படுகின்றன. கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்களில் வெறும் ஆறு சதவிகித பெண்களுக்கு தான் அது பலனளிக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆணுறையை விட கருத்தடை மாத்திரைகள் மூன்று மடங்கு அதிக பாதுகாப்பானவை என்று சொல்லலாம்.

பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பு!

கருத்தடை மாத்திரைகள், பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கருத்தடை மாத்திரை வாங்குவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதை, பயன்படுத்துவதை, பெண்கள் தங்கள் பாலியல் துணையிடம் சொல்வது கூட அவசியமில்லை என்பதும், கரு தரிப்பது குறித்து சுயமாக முடிவெடுக்க உதவுவதும் இதன் சிறப்பு.

1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில்தான் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதற்கான அனுமதி உலகிலேயே முதன்முறையாக வழங்கப்பட்டது. அதன்பின், ஐந்து ஆண்டுகளில், திருமணமான பெண்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் கருத்தடைக்காக மாத்திரைகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகாத பெண்களும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியது தான் உண்மையான புரட்சி என்று சொல்லலாம். ஆனால் இதற்காக அவர்கள் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

1970 களின் மத்தியில் அமெரிக்காவில் 18 முதல் 19 வயது பெண்கள், கர்ப்பத்தை தவிர்க்க, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது பரவலானது. அதன்பிறகு, கருத்தடை புரட்சி, பொருளாதார புரட்சியாக புதிய பரிமாணத்தில் பயணித்தது.

ஆர்வம் பிறந்தது!

1970 ஆம் ஆண்டு வரை, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற கல்விகளை கற்பதில் ஆண்களின் ஆதிக்கம் தான் இருந்துவந்தது.

ஆனால் அதன்பிறகு நிலைமையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டது. கருத்தடை மாத்திரைகள் பரவலான பிறகு, பெண்களும் இந்தத் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள்.

பட மூலாதாரம், MANAGED (PROJECT-LICENSE)

இந்தத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு 20 சதவிகிதமாக இருந்த நிலையில், கருத்தடை மாத்திரைகள் புழக்க்த்திற்கு வந்தபிறகோ 25 சதவிகிதமாக அதிகரித்து, 1980 களில், மூன்றில் ஒரு பங்காக உயர்ந்தது.

அதற்கு முன்பும் பெண்கள் கல்லூரிக்கு சென்றுக் கொண்டுதான் இருந்தார்கள், ஆனால் அதிக கவனமும்,உழைப்பும் தேவைப்படும் இதுபோன்ற துறைகளை பெண்கள் தேர்ந்தெடுக்க தொடங்கியது கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி, குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தான். அனைத்துத் துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வந்தாலும், மருத்துவத் துறையை மிக அதிக அளவிலான பெண்கள் தேர்ந்தெடுத்தது அனைவருக்கும் அதிசயமளிப்பதாக இருந்தது.

கருவை சுமப்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை பெண்களுக்கு கொடுத்தது கருத்தடை மாத்திரைகள் தான். அதனால் தான் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில் பெண்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க முடிந்தது. கர்ப்பம் தரிப்பதை இயற்கையின் கையில் இருந்து, பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது தான் மிகப் பெரிய புரட்சி.

குறைந்தது முப்பது வயது வரை பெண்கள் கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை. அதற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொண்டால், தொழிலுக்கு போதுமான நேரம் ஒதுக்கமுடியாமல், பெண்களால் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்க முடிவதில்லை.

மருத்துவம், பொறியியல், வழக்குரைஞர், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பெண்கள் தாங்கள் விரும்பும் கல்வியை கற்க, குழந்தை பிறப்பை காரணமாக காட்டும் போக்கு குறைந்துவிட்டது.

பட மூலாதாரம், MANAGED (PROJECT-LICENSE)

கருத்தடை மாத்திரைகள் அறிமுகமாவதற்கு முன்பு பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்யும் நடைமுறை பரவலாக இருந்தது. ஒரு பெண் 30 வயது வரை திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தால், அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பது அரிதாக இருந்தது. ஏனெனில், வழக்கமாக அந்தப் பெண்ணின் வயதுக்கு ஏற்ற ஆண் துணை கிடைப்பது அரிதாகும்.

கருத்தடை மாத்திரைக்கு முன், பின் என பெண்களின் வாழ்க்கையில், சமூக நிலையில் தான் மாற்றம் இருந்ததே தவிர, ஆண்களின் வாழ்க்கையில் இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால், கருத்தடை மாத்திரை என்பது, "கர்ப்ப பயம்" என்ற பரிணாமத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. திருமணமாகாத ஒரு பெண், எந்த பயமும் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது ஒருபுறமிருக்க, திருமண அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. சிறு வயது திருமணம் என்பது சிறுகச் சிறுக குறுகி அருகுகிறது.

அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டில் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதற்கு கருத்தடை மாத்திரைகள் மட்டுமே காரணமா? இல்லை வேறு சில முக்கியமான காரணங்களும் உள்ளது. கருக்கலைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டதும், பாலினரீதியாக பாகுபாடு பார்ப்பது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டதும் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவை.

பெண்ணியச் சிந்தனைகளும், பெண்களுக்கான இயக்கங்களும் தொடங்கியதும் அதே காலகட்டத்தில் தான். வியட்னாம் போருக்காக இளைஞர்களை அமெரிக்கா அனுப்பியது. அந்த சமயத்தில் தான் பெண்களுக்கு வெளியுலகில் வேலைவாய்ப்புகளுக்கான கதவு விரிவாக திறக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்களும், அனைத்துத் துறைகளிலும், பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கத் தொடங்கின.

எனவே, பெண்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தி, தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகுத்ததில் கருத்தடை மாத்திரை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மறுபுறத்தில், கருத்தரிப்பை தவிர்க்க, காதலர்கள் தங்கள் மனதின் ஆசைகளை பூரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்த நிலை மாறியதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. தங்கள் வாழ்க்கையை முடிவு செய்வது உடலுறவின் விளைவாக ஏற்படும் கர்ப்பம் அல்ல, தாங்களே தான் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாதது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்