இந்தோனேஷிய அரசியலில் இஸ்லாமிய கடும்போக்கு வளர்கிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனேஷிய அரசியலில் இஸ்லாமிய கடும்போக்கு வளர்கிறதா?

  • 19 ஏப்ரல் 2017

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தா ஆளுநர் தேர்தலில் வாக்கெடுப்பு முடிந்து அதிகாரப்பூர்வமற்ற ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.

அஹோக் என்று பரவலாக அழைக்கப்படும் தற்போதைய ஆளுநரை எதிர்த்து முன்னாள் கல்வி அமைச்சர் அனீஸ் பஸ்வெடன் வென்றிருப்பதாக அவை காட்டுகின்றன.

தன் தோல்வியை அஹோக் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தோனேஷிய ஜனநாயக முதிர்ச்சி மற்றும் அதன் மதசார்பற்ற அரசியலுக்கான முக்கிய உரைகல்லாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில், கடும்போக்கு இஸ்லாமிய மத உணர்வுகள் தூண்டப்பட்டதாக பரவலாக விமர்சனங்கள் வெளியாயின.

தேர்தலில் தான் தோற்றுவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ள ஜகார்தாவின் முதல் கிறிஸ்தவ ஆளுநர், இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்ட குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படவேண்டுமென்று கோரி ஆயிரக்கணக்கானவர்கள் அவரை எதிர்த்து தொடர்ச்சியாக ஆர்பாட்டம் செய்தனர்.

முஸ்லிம் அல்லாத அரசியல் தலைவருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக்கூடாது என்றும் அவருக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அவரது எதிர்தரப்பு வேட்பாளர் அனிஸ் பஸ்வேடன் இந்த ஆர்பாட்டங்களுக்கு பின்னுள்ள இஸ்லாம் பாதுகாப்பு முன்னணி எனும் கடும்போக்கு அமைப்பை இரண்டு முறை பகிரங்கமாக சந்தித்தார். சர்ச்சைக்குரிய அந்த குழுவின் தலைவர் வன்முறை தூண்டிய குற்றச்சாட்டில் இருமுறை சிறையில் அடைக்கப்பட்டவர்.

ஆனால் கடும்போக்கு வாக்காளர்களை கவர தாங்கள் முயலவில்லை என்கிறார் அனிஸின் துணை வேட்பாளர் சாந்தியகா உனோ.

"பேச மறுக்கும் இருதரப்புக்கும் இடையில் பாலமாக இருக்கவே நாங்கள் முயல்கிறோம். இதை நாங்கள் செய்யாவிட்டால் நகரம் பிளவுபட்டே இருக்கும். மக்களை ஒருங்கிணைக்கும் தலைவரே இப்போது நகருக்குத்தேவை” என்கிறார் அவர்.

நாட்டின் அடிப்படையான பன்முக, பல்சமயக் கொள்கைகளை தாங்கள் மதிப்பதாகவும் சந்தியாகா உனோ பிபிசியிடம் வலியுறுத்தினார். தாங்கள் அமைதியை நாடும் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கொள்கையை நம்புபவர்கள் என்றும் கூறினார்.

ஆனால் தனது பிரச்சாரம் நெடுக, துபாயைப்போல, இஸ்லாமிய விழுமியங்களுக்குட்பட்ட இரவு கலாச்சாரத்தை ஜகார்தாவில் கொண்டுவருவேன் என்று இவர் வாக்குறுதியளித்தார். அதேசமயம் ஜகார்தாவில் இஸ்லாமிய சட்டங்களை திணிக்கமாட்டேன் என்றும் வலிறுத்தினார்.

ஷரியா பொருளாதார கட்டமைப்பை தான் நம்புவதாகவும் அது மிகவும் நியாயமானது என்றும் கூறிய சாந்தியகா உனோ, “அதேசமயம் இஸ்லாமிய உள்ளூர் சட்டங்களை அமல்படுத்தமாட்டேன். அதை எங்களால் செய்ய முடியாது”, என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது நூறு கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த கடும்போக்கு இஸ்லாமிய குழுக்களின் கூட்டமைப்பு முயன்றதை ஜகார்தா காவல்துறை கடுமையாக விமர்சித்திருந்தது.

வாக்குச்சாவடிகளில் செய்யப்படும் உடல்ரீதியான அல்லது உளவியல் ரீதியிலான அனைத்துவித அச்சுறுத்தல்களும் சட்டவிரோதமானவை என்று காவல் துறை எச்சரித்திருந்தது.

தேர்தல் பிரச்சாரம் கடுமையாக செல்வதைப்பார்த்து கவலையடைந்த இந்தோனேஷிய அதிபர் அதிபர் ஜோகோ விடோடோ, எல்லா தரப்பையும் அமைதி காக்கும்படி கோரியிருந்தார். "மதத்தில் அரசியலை கலக்கி அதை ஒரு சந்தைப்பொருளாக மாற்றாதீர்கள்”, என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளில் நடக்கவிருக்கும் இந்தோனேஷிய அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த ஜகார்தா தேர்தல் பார்க்கப்பட்டதால் இதன் இன்றைய தேர்தல் முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.