ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மையவாத மக்ரோங், லெ பென் தேர்வு

நேற்று நடைபெற்ற ஃபிரான்ஸின் அதிபர் தேர்தலில், மையவாத கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரோங், தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மரைன் லெ பென்னை எதிர்கொள்ளவுள்ளதாக, தேர்தலின் ஏறக்குறைய இறுதி முடிவுகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP/EPA
Image caption தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த லெ பென் மற்றும் மையவாத மக்ரோங்,

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இவ்விரண்டு வேட்பாளர்களும், மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங் மற்றும் தீவிர இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த ஷான் லூக் மெலாங்ஷாங் ஆகியோருடன் கடுமையாக போட்டியிட வேண்டிருந்தது.

இரண்டாம் சுற்றில் யார் வெற்றி பெற்றாலும் ஃபிரான்ஸ் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடிப்பதாக அது அமையும்.

வெற்றிக்கு பிறகு பேசிய மக்ரோங்

ஆதரவாளர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் பேசிய அவர், "ஒரு வருடத்தில் ஃபிரான்ஸின் அரசியலை மாற்றியுள்ளதாகவும், மக்கள் அனைவரும் தேசியவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வங்கியாளரான இவர், தற்போதைய அதிபர் ஒல்லாந்தின் பொருளாதார அமைச்சர் பதவியை விடுத்து புதுக் கட்சியை தொடங்கினார்.

இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. இவர் வெற்றி பெற்றால் நாட்டின் இளம் வயது அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

ஐரோப்பாவிற்கு ஆதரவான கொள்கையை கடைபிடிக்கும் இவர், ஃபிரான்ஸின் பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குப்படுத்த வேண்டும், பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொது முதலீட்டு திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளார்.

"வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி"

"தன்னை மக்களின் வேட்பாளர்" என்றிய கூறிய லெ பென் , "ஃபிரான்ஸின் நிலை மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும்" தெரிவித்தார்.

அதற்கான முதல்படி எடுக்கப்பட்டுவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் வரலாற்று சிறப்புமிக்கவை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரங்கள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும், தேசியவாத முன்னணி கட்சியின் தலைவர் மரைன் லெ பென். தனது கட்சியின் தொனியை சற்று மென்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு 2015 ஆம் ஆண்டு நடந்த பிராந்திய தேர்தலில் வெற்றிகளை பெற்று தந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஃபிரான்ஸின் உறவை மாற்றி அமைக்க நினைக்கும் லெ பென், ஒன்றியத்திலிருந்து வெளியேற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்.

குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் மற்றும் "கடும் போக்கு" மசூதிகள் இடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் தேர்தல் தொடர்பான பிற செய்திகள்:

முதல் சுற்று ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் வேட்பாளர்கள் - ஒரு பார்வை

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கியது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்