500 கிலோ பெண்ணின் எடை குறைப்பு நிஜமா? சர்ச்சையைக் கிளப்புகிறார் சகோதரி

  • 26 ஏப்ரல் 2017

உலகிலேயே மிகவும் எடை அதிகமான பெண்ணாக கருதப்பட்ட ஏமான் அஹ்மத் அப்த் அல் ஏதி, இந்தியாவில் உடல் பருமனை குறைத்துகொள்ள அறுவை சிகிச்சை செய்த பின்னர், எடை குறைந்து வருவதாக மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அவருடைய சகோதரி ஷாய்மா செலிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Saifee hospital

மும்பையின் சாய்ஃபீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அப்த் அல் ஏதி, முன்பு இருந்த எடையை விட பாதியாக அதாவது 500இல் இருந்து 250 கிலோ எடையுடையவராக குறைந்து விட்டதாக கடந்த வாரம்தான் மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆனால், அப்த் அல் ஏதியின் சகோதரியோ, இது பொய் என்றும், பக்கவாதம் ஏற்பட்டதைபோல தன்னுடைய சகோதரி இக்கட்டான ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு கோபமாக பதிலளித்து, மருத்துவமனை அனைத்தையும் மறுத்துள்ளது.

இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பாதி எடை குறைந்த 500 கிலோ பெண்

500 கிலோ எடை கொண்ட எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை

திங்கள்கிழமையன்று அஹ்மத் அப்த் அல் ஏதியின் சகோதரி ஷாய்மா செலிம் சமூக ஊடகங்களில் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதால் இது தொடர்பான சர்ச்சை வளர ஆரம்பித்துள்ளது.

தன்னுடைய சகோதரியால் இன்னும் பேச அல்லது நகர முடியவில்லை என்றும் இந்த மருத்துவமனை கூறுவதுபோல பெரியளவில் தன்னுடைய சகோதரி உடல் எடை இழந்துவிடவில்லை என்றும் அதில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Saifee hospital

தன்னுடைய சகோதரியின் எடை குறைந்துவிட்டதாக மருத்துவமனை பொய் சொல்வதாக செவ்வாய்க்கிழமை ஷாய்மா செலிம் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

"அவர் (இந்த அறுவை சிகிச்சைக்கு தலைமையேற்று நடத்திய மருத்துவர் முஃபாஸால் லாக்டாவாலா) என்னுடைய சகோதரியை முன்னரோ, பின்னரோ எடை பார்க்கவில்லை. என்னுடைய சகோதரி எடை குறைந்துள்ளதற்கான சான்று இருந்தால், அறுவை சிகிச்சைக்கு முன்னரும், பின்னரும் இருக்கும் எடை பற்றிய காணொளி பதிவை மருத்துவர் எங்களுக்கு வழங்கட்டும்" என்று அவர் கோரியுள்ளார்.

'500 கிலோ' பெண்மணி சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்

500 கிலோ பெண்ணுக்கு அறுவை சிகிச்சையால் 100 கிலோ குறைப்பு

தன்னுடைய சகோதரி இக்கட்டான ஆரோக்கியத்தோடு இருப்பதாக விவரித்துள்ள அவர், "என்னுடைய சகோதரியின் உடலில் ஆக்ஸிஜன் அளவு இன்னும் இயல்பாகவில்லை. எப்போதும் அவர் ஆக்ஸிஜன் சுவாசிக்கும் முகமூடியை அணிய வேண்டியுள்ளது. உணவு வழங்குமாறு அவருடைய மூக்கு வழியாக வயிற்றுக்கு செல்லும் குழாய் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. காரணம் அவருடைய வாயால் நன்றாக சாப்பிட அல்லது குடிக்க முடியவில்லை" என்று ஷாய்மா செலிம் கூறியுள்ளார்.

ஆனால், அப்த் அல் ஏதிக்கு மீண்டும் திங்கள்கிழமை எடை பார்க்கப்பட்டதாகவும், அவர் தற்போது 172 கிலோ எடையுடன் இருப்பதாகவும் அந்த மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மருத்துவர் லாக்டாவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

11-ஆவது வயதில் பக்கவாத்ததால் பாதிக்கப்பட்ட ஏமான் அஹ்மத் அப்த் அல் ஏதி, அதன் பின்னர் உடல் எடை அதிகரித்து 25 ஆண்டுகளாக அவருடைய அறையை விட்டு வெளிவர முடியாத நிலையில் இருந்தார்.

சிறப்பு விமானம் மூலம் மும்பையிலுள்ள சாய்ஃபீ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர், மருத்துவர் லாக்டாவாலாவின் தலைமையில் நடைபெற்ற உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை மார்ச் மாதம் செய்து கொண்டார்.

தற்போது அவரால் சக்கர நாற்காலியில் அமரலாம் என்றும், நீண்டநேரம் எழுந்து உட்கார முடியும் என்றும் மருத்துவமனை தெரிவிக்கிறது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அப்த் அல் ஏதியின் புதிய புகைப்படங்களையும் இந்த மருத்துவமனை வெளியிட்டது.

உலகின் பருமனான எகிப்திய பெண்ணிற்கு இந்தியாவில் சிகிச்சை

அப்த் அல் ஏதியின் சிசிச்சை ஏறக்குறைய முடிந்து விட்டதால், அவர் விரைவில் அலெக்ஸாண்டிரியா அனுப்பப்படலாம் என்பதால் அவருடைய சகோதரி சலெம் மகிழ்ச்சியாக இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

"இதுபோன்ற நிலைமைகள் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளன. அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் அதிக உடல் எடையுடைய மனிதர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் எடையைக் குறைத்து, சாதாரணமாக மாற ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மருத்துவமனைகளில் செலவிடுகின்றனர்.

படத்தின் காப்புரிமை DR MUFFAZAL LAKDAWALA

"ஆனால், ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு பிறகு இங்கு, நான் என்னுடைய சகோதரியை அழைத்து கொண்டு திரும்பி செல்லலாம் என்று கூறுகின்றனர். அவர் இன்னும் அதிக எடையுடன் இருப்பதால், நான் எவ்வாறு அழைத்து செல்ல முடியும் என்று மருத்துவர்களிடம் கேட்டேன். எகிப்தில் இருக்கும்போது எனது சகோதரிக்கு ஏதாவது நிகழ்ந்தால், நான் எப்படி அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்?

"அவ்வாறு செய்து மிகவும் கடினமானது. எகிப்தில் யாரும் எனக்கு உதவ மாட்டார்கள். அப்த் அல் ஏதி உடல் எடையை குறைத்துகொள்ள உதவுவதற்கு தயவுசெய்து அவரை நீண்டகாலம் மருத்துவமனையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று நான் சொன்னேன்" எனவும் சலெம் கூறியுள்ளார்.

"மிகவும் ஆபத்தான" உடல் பருமனோடு விளங்கும் மனிதருக்கு சிகிச்சை அளிக்க இந்த அறுவை சிகிச்சை கடைசி முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது..

காணொளி: 500ல் இருந்து 250கிலோவாக எடை குறைந்த எகிப்திய பெண்மணி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
500ல் இருந்து 250கிலோவாக எடையை குறித்த எகிப்திய பெண்மணி (காணொளி)

பின்வரும் செய்திகளில் நீங்கள் ஆர்வம் காட்டலாம்:

முன்னாள் கணவரை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்

இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தார், பின்னர் மூன்றாவதும் சேர்ந்தது

வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

காஷ்மீரின் “கல்வீசும் பெண்கள்” (புகைப்படத் தொகுப்பு)

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி ஆபத்தானது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்