வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா

  • 26 ஏப்ரல் 2017

அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஏவுகணை தடுப்பு சாதனங்கள் ராணு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன

தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும்.

தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்பு சாத்தனங்கள் வரத் துவங்கியவுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்தப் பிராந்தியத்தில், பாதுகாப்பு சமநிலையை சீர்குலைக்கும் என்று இந்த பாதுகாப்பு முறைக்கு சீனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வடகொரியா இன்னும் கூடுதலாக ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற அச்சங்களுக்கிடையில், அமெரிக்கா சமீப நாட்களில் கொரிய தீபகற்பப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது.

வடகொரியா வாலாட்டக்கூடாது என்று எச்சரிக்குமாறு அதன் கூட்டாளி நாடான சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

திறன் என்ன?

இதற்கிடையில், வடகொரிய நிலவரம் தொடர்பாக, அமெரிக்க செனட்டர்களுக்கு வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பிற்பகுதியில் ரகசிய விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலை எப்படி மாறக்கூடிய வாய்ப்பு உண்டு, அமெரிக்கா எந்தெந்த வழிகளில் எல்லாம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் விளக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்துக்கு எதிரான போராட்டம்

தற்போது, தென்கொரியாவின் தென் பகுதியில் அமெரிக்கா நிறுவிவரும் தாட் (Terminal High-Altitude Area Defense) என்ற முறை, பாலிஸ்டிக் ரக குறுகிய மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் அதன் கடைசிக் கட்டத்தை அடையும்போது, அதை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.

வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், தாட் ஏவுகணை தடுப்பு தொழில்நுட்ப முறையை விரைவில் நிறுவுவதற்கான நடவடிக்கைகலை அமெரிக்காவும் தென் கொரியாவும் எடுத்து வருவதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த முறை, வரும் 2018-ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னதாக பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் முயற்சி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வடகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க மிச்சிகன் நீர்மூழ்கி

அந்தப் பிராந்தியத்தில், சீனா தனது பாதுகாப்பு பிரசன்னத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்த தாங்கி போர்க் கப்பலை களமிறக்கும் நிலையில், இந்த புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில், பயன்படுத்தப்படாத கோல்ஃப் மைதானத்துக்கு புதன்கிழமை காலை, ராணுவ பாதுகாப்பு சாதனங்களை ஏற்றிய நீண்ட ராணுவ டிரெய்லர்கள் வருவதை தொலைக்காட்சி செய்திகள் அறிவித்தன.

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு நின்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சிலர் தண்ணீர் பாட்டில்களை அந்த வாகனங்கள் மீது வீசியெறிந்தனர்.

போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

அந்த பாதுகாப்பு சாதனங்களை அங்கிருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும், தென்கொரியாவின் புதிய அரசு தனது முடிவை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டரக்காரர்களில் ஒருவரான கிம் ஜாங்-க்யூங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

எச்சரிக்கை

வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை தொடர்பாக வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையை சமீப நாட்களில் வார்த்தைப் போர் அதிகரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

அதிபர் டிரம்பின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என துணை அதிபர் மைக் பென்ஸ் வடகொரியாவை எச்சரித்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிச்சிகன் என்ற நீர்மூழ்கி, விமானந் தாங்கி போர்க்கப்பல் வசதியுடன், கொரிய தீபகற்பப் பகுதியை வந்தடைந்தது.

அமெரிக்காவின் அத்துமீறலுக்கு எதிராக சூப்பர் சானிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்த முடியும் என்றும், அதன் போர்க் கப்பல்களை மூழ்கடிக்க முடியும் என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது.

பொறுமை காக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கோரிக்கை கடந்த திங்கள்கிழமை டிரம்புடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது கோரிக்கை விடுத்தார்

உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள்

`எங்களது பாணியில் அணு ஆயுத தாக்குதல் பதிலடி' - மிரட்டுகிறது வடகொரியா

அமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா

எங்கள் அணு சோதனையை நியாயப்படுத்துகிறது அமெரிக்காவின் சிரியா தாக்குதல்: வடகொரியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்