பட்டுப்பூச்சியின் மூலம் புரதத்தை பெறலாம்: சீனத் தொழில் முனைவர் யோசனை

சீனாவின் உணவு பழக்கத்தை முன்னேற்றுவதற்கான பிரசாரத்தில், சீனத் தொழிலதிபர் ஒருவர் பூச்சிகளை உண்பது குறித்தும், இணைய வழி விவசாய சந்தையையும் பிரபலப்படுத்தி வருகிறார்.

படத்தின் காப்புரிமை RYAN LASH/TED

மடில்டா ஹோ என்னும் அவர், டெட் (தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைத்தல்) மாநாட்டில் ஆரோக்கியமான உணவு பழக்கம் தொடர்பான செய்தியை பரப்பும் தேவை குறித்து பேசினார்.

பட்டுப்பூச்சியிலிருந்து வரும் புரதத்தை விற்பனை செய்யும் நிறுவனம் உட்பட, புதியதாக தொடங்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு ஆதரவு தருகிறார் மடில்டா.

உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் சீனாவில் அதிகரித்து வருகிறது.

"உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் சீனர்கள் ஆவர்; ஆனால் 7 சதவீத நிலம் தான் சாகுபடிக்குரிய நிலமாக உள்ளது" என பிபிசியிடம் கூறுகிறார் மடில்டா

"நீரிழிவு நோயுள்ள நால்வரில் ஒருவர் சீனராகவும் உடல் பருமன் கொண்ட ஐவரில் ஒருவர் சீனராகவும் உள்ளனர்".

57 விவசாயிகள் தயாரிக்கும் 240 புதிய உணவுப் பொருட்களை வழங்கும் இணைய விவசாய சந்தையைக் கொண்டு இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சித்து வருகிறார் மடில்டா.

18 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட அந்நிறுவனம், 40,000 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

"விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மத்தியில் இருக்கும் இடைவெளியை தொழில்நுட்பத்தின் மூலம் குறைக்க விரும்புகிறேன்"

"உங்களின் உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது, மேலும் அது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும்".

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உணவுகள் மின்சார வாகனங்கள் மூலமாகவும், மக்கும் தன்மை கொண்ட பெட்டிகள் மூலமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.

சீனாவில் நடுத்தர குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன; மேலும் விருந்தினர்களுக்கு உணவகத்திலிருந்து அதிகப்படியான உணவை வழங்குவது ஒரு கலாசாரமாக அங்கு கருதப்படுகிறது.

இதனை சரி செய்ய ஒரே ஒரு இணைய நிறுவனம் மட்டுமே போதாது என உணர்ந்த மடில்டா, உணவுச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் பலவற்றை பிரபலப்படுத்தும் நிறுவனத்தை தொடங்கினார்.

அதில் பட்டுப்பூச்சியை புரதத்திற்கான, நிலையான ஆதாரமாக பயன்படுத்தும் நிறுவனமும் அடங்கும்.

"சீனாவில் பட்டுப்பூச்சிகள் நெசவுத் தொழிலில், முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவதால் அதனை வாங்குவது மிகவும் எளிது" என விளக்குகிறார் மடில்டா ஹோ.

"பட்டுப்பூச்சிகள் பிற பூச்சிகளை போன்று சத்தத்தை எழுப்பாது மேலும் அதனை உண்பது பூச்சியை உண்பது போல அருவருப்பானதாகவும் இருக்காது. குழந்தை பருவத்தில் நாம் பட்டுப்பூச்சியை வளர்த்துள்ளோம்".

பூச்சிகளை உணவாக உட்கொள்வது சீன வரலாற்றில் உள்ள போதிலும் சட்டப்படி பட்டுப்பூச்சியை மட்டும் தான் உணவாக பயன்படுத்த முடியும்.

சுவர்க் கோழி என்ற பூச்சியை உண்ணுவதையும் சட்டரீதியானதாக்க வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. ஆனால் அது சட்டமாக இயற்றப்படுவதற்கு மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்