ஓய்வறியா உழைப்பால் மரணிக்கும் ஜப்பானியர்கள்

  • 2 மே 2017

ஓய்வில்லாமல் உழைக்கும் ஜப்பானின் மற்றொரு பக்கமாக, சில ஜப்பானியர்களின் மரணத்திற்கு காரணமே அவர்கள் அதிகமாக உழைப்பதுதான் என்று தெரியவந்துள்ளது.

Image caption தமிழர் திருவிழாக்களில் பங்குபெறும் ஜப்பானியர்கள்

வேலைப்பளு காரணமாக அதிகரிக்கும் மரணங்களை குறைப்பதற்கு, பணிநேரத்தை தாண்டி, ஒரு ஊழியர் அதிகபட்சம் ஒரு மாதத்தில் 100 மணிநேரம் மட்டுமே வேலைசெய்யலாம் என ஜப்பான் அரசாங்கம் சமீபத்தில் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

அதாவது, ஒரு மாதத்தில் மொத்த 720 மணிநேரத்தில், அலுவலக வேலை நேரம் 240 மணிநேரமாக இருந்தாலும் (30 நாட்கள் X 8 மணி நேரம்), அதிக நேர வேலையை சேர்த்து அதிகபட்சம் 340 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வில்லாமல் வேலை செய்து இறந்துபோனால் அந்த மரணங்களை 'கரோஷி' (karoshi)என்று குறிப்பிடும் சொல்லாடல் ஜப்பானில் உள்ளது என்பது அந்த மரணங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்குகிறது.

உலகின் அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாக உள்ள ஜப்பானியர்களில் சிலர் அதிக நேரம் வேலை செய்து இறந்துபோவதற்கான காரணங்கள், மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் நிலை குறித்து ஜப்பானில் வசிக்கும் தமிழர்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

கடந்த 14 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்துவரும் வேலூரை சேர்ந்த சதீஷ் டோக்கியோவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வர்த்தக நடவடிக்கைக்கான மேலாளராக பணிபுரிகிறார்.

Image caption ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருவிழா

பிபிசி தமிழிடம் வேலைச்சுமை பற்றி பேசிய சதீஷ், ''ஜப்பானியர்களுக்கு அதிக நேரம் வேலை செய்வது மிகவும் சாதாரணமான விஷயம். அலுவலகத்தில் அதிக நேரம் இருப்பது, கடைசி ரயிலில் வீடு வந்து சேர்வது போன்றவை வாடிக்கையான ஒன்றுதான். ஜப்பானியர்களோடு சமமாக வேலைசெய்வதற்கு தமிழர்கள் படும்பாடு சொல்லமுடியாதது,'' என்கிறார்.

''என்னை போன்ற பெயர் பெற்ற நிறுவனங்களில் மேலிட பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பிரச்சனை குறைவு. ஒப்பந்த முறையில் ஜப்பானுக்கு வரும் நம் நாட்டினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பதால், வீடு திரும்பாமல் மூன்று நாள் தொடர்ந்து வேலை செய்யும் நிலைகூட உண்டு என்கிறார்.

தனிப்பட்ட முறையில் பொறுப்புகள், வேலை திட்டங்கள் என்பது குறைவு. பெரும்பாலும், எல்லா நிறுவனங்களிலும் வேலை என்பது குழு வேலையாகத்தான் இருக்கும். சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் குழுக்களை கண்காணிக்க குழு மேலாளர் இருப்பார். அதிக வேலை காரணமாக எந்தக் குழு அல்லது குழு உறுப்பினர் சிரமப்படுகிறாரோ, அவரை எவ்வாறு சரிபடுத்துவது என்று திட்டம் வகுப்பார் என்றார்.

குழு மேலாளர்கள் மன அழுத்தத்தில் இருந்து பணியாளர்களை விடுவிப்பது தொடர்பான பயிற்சியை பெற்றவராகவும் தொடர் பயிற்சிகளையும் அவர் மேற்கொள்வர் என்கிறார் சதீஷ்.

Image caption ஜப்பானிய நண்பருடன் முத்து

''அலுவலகக் கேளிக்கை விருந்துகள் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படும். இந்த விருந்துகளில் எவ்வாறு வேலைதிட்டங்களை விரைவில் முடிப்பது போன்றவை விவாதிக்கப்படும்,'' என்கிறார் அவர்.

சமீபத்தில், ஜப்பானில் அதிக வேலை நேரம் காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றது என சர்வதேச தொழிலாளர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளது.

அதே அறிக்கையில் சமீபத்தில் இறந்துபோன ஒருவரின் நிலையை விளக்கியது. 2015ல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 34 வயதான நபர் ஒருவர், மாரடைப்பு காரணமாக இறந்தார். அவர் ஒரு வாரத்தில் உள்ள 168 மணிநேரத்தில், 110 மணி நேரம் வேலை செய்திருக்கிறார், அதனால் அவர் இறந்துபோனார் என்று செய்திகள் வெளியாகின. இவரது மரணத்தை ஜப்பானின் தொழிலாளர் துறையும் வேலை காரணமாக மரணம் என்று அங்கீகரித்துள்ளது.

அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் சுமார் 2,000 நபர்கள் தற்கொலைகள் செய்துகொள்வதற்கு அவர்கள் செய்யும் வேலைதான் காரணம் என்று ஜப்பான் அரசின் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கை கண்டறிந்துள்ளது (2015) குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் சட்டப்படி, இந்தியாவில் உள்ளது போல எல்லா நிறுவனங்களிலும் வேலை நேரம் என்பது 8 மணி நேரம்தான். இதைத் தாண்டி அதிக நேரம் வேலை செய்வதற்கு எவ்வாறு ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள் என்று ஜப்பானில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்யும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தத்திடம் கேட்டோம்.

இதையும் படிக்கலாம்:

மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருக்க தடை

பெரும்பாலும் இங்கு வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பே, பணிக்கான இலக்குகள் தீர்மானிக்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறையில் சிலசமயம் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப, அவர்களின் தேவையை பொறுத்து ப்ராஜெக்ட் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்,'' என அதிக நேரம் வேலை செய்வதற்கான காரணங்களை கூறுகிறார் சிவானந்தம்.

Image caption ஜப்பானிய தோழியின் குடும்பத்துடன் தமிழர் சிவானந்தத்தின் குடும்பம்

இந்தியாவில் இருந்து ஜப்பானிற்கு வேலைக்கு வந்த சில தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்கள், இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வேலை பார்த்ததால், உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டு, தங்களது மேலாளர்களிடம் பேசி மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்றார் சிவானந்தம்.

ஜப்பானில் குடும்பத்துடன் வசிக்கும் நபர்கள் அவர்களின் நிர்வாகத்திடம் பேசி,தங்களது சம்பளத்தை பெற்று வேலையை விட்டு நின்றுவிட்ட கதைகளும் உண்டு என்கிறார் அவர்.

இதற்கிடையில், அதிக வேலை நேரத்தால், மனம் மற்றும் உடல் சோர்வை குறைக்க, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எல்லா அலுவலகங்களிலும் வேலைநேரத்திற்கு முன்னதாகவே கிளம்ப அனுமதிக்கப்படும். சில அலுவலகங்களில் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் என இரண்டு நாட்கள் அளிக்கப்படுகின்றன என்கிறார் சிவானந்தம்.

களைப்பைக் குறைக்க தமிழர்களுக்கு இருப்பது அரசு அங்கீகரிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் பொங்கல் விழா, உணவு மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழா போன்றவை என்கிறார் ஜப்பானிய தமிழர்கள்.

Image caption தமிழர் திருவிழாவில் கோலப்போட்டி

தமிழர்கள் ஒன்று கூடி பேசி, சிரித்து பேசி, குழந்தைகள் விளையாடுவது, பெண்களின் வில்லுப்பாட்டு என கலாசார நிகழ்வுகள் ஊருக்கு போனது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக இருப்பதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக வேலை நேரம் காரணமாக இறந்துபோனவர்களின் குடும்பங்கள் இணைந்து இந்த இறப்புகளுக்கு எதிராக குரல் எழுப்பிவரும் அதே நேரத்தில் அரசின் புதிய 100 மணிநேர அதிக பட்ச வேலைநேரத்தைக் குறைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இவையும் படிக்கலாம்

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

`தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்`

வாக்கைக் காப்பாற்றினாரா அதிபர் டிரம்ப்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்