சிரியா தலைநகர் அருகே ராணுவ நிலை மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

  • 27 ஏப்ரல் 2017

சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே ராணுவ நிலை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதாக சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், விமான நிலைய சம்பவம்

எண்ணெய் டேங்கரும், நீரேற்று நிலையமும் பாதிக்கப்பட்டதாக சேனா செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஆனால், அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஹெஸ்புல்லா இயக்கத்தால் நடத்தப்படும் ஆயுத கிடங்கு தாக்குதலுக்கு உள்ளானதாக சிரியா கிளர்ச்சியாளர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெஸ்புல்லா இயக்கத்தினருக்காக, ஈரான் ஆயுதங்களைக் கடத்திச் செல்வதை தடுக்க தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் ஓர் அங்கம்தான் இந்த நடவடிக்கை என இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், அதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று அவர்கள் நேரடியாகக் கூறவில்லை.

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள விமான நிலையம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பு சத்தம் டமாஸ்கஸ் வரை கேட்டதாக பிரிட்டனை மையமாகக் கொண்ட சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை மிரட்டும் வடகொரிய ஏவுகணைத் திட்டம்

விமான நிலையத்துக்கு தென் கிழக்கே ராணுவ நிலை மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் பொருட் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்படும் சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் பகுதியில் நுழைந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசியதாக அரசு ஆதரவு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

யாரை பலவீனப்படுத்தும் முயற்சி?

சிரியா ராணுவத்துடன் இணைந்து செயல்படும் ஹெஸ்புல்லா இயக்கத்தின் சார்பில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படையினர் பயன்படுத்தும் ஆயுதக்கிடங்கு மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கிளர்ச்சிப் பிரிவைச் சேர்ந்த இரு மூத்த அதிகாரிகள் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஹெஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டது. சிரியாவில் அரசு ஆதரவுப் படையாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தீவிரவாத இயக்கத்தினால் கொள்முதல் செய்யப்படும் ஆயுதங்கள் ஆபத்தானவை என்று இஸ்ரேல் கருதுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

ஆயுதப் பரிமாற்றம் தொடர்பான ரகசிய தகவல்கள் கிடைத்தால் அதன் அடிப்படையில் தாங்கள் செயல்படுவது வழக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவத் தரப்வில் இருந்து எந்தவிதத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த மாதத் துவக்கத்தில், சிரியா விமானத் தளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ரஷ்யாவும் சிரியாவும் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அத்தைகை நடவடிக்கை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இஸ்ரேல் கருதுகிறது.

சிரியாவில் கடந்த 2011 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதுவரை, 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

டமாஸ்கஸ் நகர், வன்முறைக்கு இலக்காகாமல் இருந்த வரும் நிலையில், கடந்த சில மாதங்களில், ராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியில் கடும் விமானத் தாக்குதலை சிரியா அரசுப் படைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளையும் படிக்கலாம்:

வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்

வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா

உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள்

தொடர்புடைய தலைப்புகள்