அழிவை ஏற்படுத்தியதா அமெரிக்காவின் மாபெரும் குண்டு? பிபிசியின் நேரடித் தகவல்கள்

  • 28 ஏப்ரல் 2017

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் பயன்படுத்தப்படும் குகை வளாகத்தின் மீது அணு ஆயுதமல்லாத குண்டுகளில் மாபெரும் குண்டு ஒன்றை ஏப்ரல் 13 ஆம் நாள் அமெரிக்கா வீசி தாக்கியது.

படத்தின் காப்புரிமை PUBLIC DOMAIN

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் மீது இந்த குண்டு தாக்குதல் எதாவது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா? அந்த இடத்திற்கு நேரில் சென்ற பிபிசியின் அயுலியா அட்ராஃபி இதுபற்றி விவரிக்கிறார்.

குன்றுப் பகுதியில் இருந்து மமான்ட் பள்ளத்தாக்கை பார்த்தால் மிகவும் அழகாக தோன்றுகிறது. பசுமை போர்த்திய விளைநிலங்களும், மரங்களும் இந்த பள்ளத்தாக்கின் தரையை மூடியுள்ளன. அதை நோக்கி சென்றால், பள்ளத்தாக்கு சுருங்குகிறது. குன்றுகள் மலைகளாகின்றன. தொலைவில் வெள்ளை நிறத்தில் தோன்றும் ஸ்பின்-கார் மலை கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. இந்த மலை தான் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையை அடையாளப்படுத்துகிறது.

அமெரிக்காவின் மாபெரும் குண்டு: 36 தீவிரவாதிகள் பலி

நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள இந்த பகுதியை பிபிசி செய்தியாளர் அயுலியா அட்ராஃபி பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அமைதியான சிந்தனை செய்வதற்கான வாய்ப்பே இருக்கவில்லை. மேலே 3 வகையான அமெரிக்க தாக்குதல் விமானங்கள் சுற்றிச்சுற்றி குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தன.

ஒரு குண்டு அந்த பள்ளத்தாக்கின் குறுகிய பகுதியை தாக்கியது. அங்குதான், "எல்லா குண்டுகளுக்கும் தாய்" என்று அறியப்படும் ஆயுதமான பெரிய வெடிகுண்டு வீசப்பட்டதாக இளம் சிப்பாய் ஒருவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய அரசு ஆயுதப்படையினர் சிதறடிக்கப்பட்டனரா?

அட்ராஃபிக்கு குழப்பம் தான் மேலிட்டது. இஸ்லாமிய அரசு வலுவிடத்தை முற்றிலும் அழித்து விட்டதாக இந்த குண்டு தாக்குதல் தொடர்பாக அச்சின் மாவட்டத்தில் இருந்து வெளியான தகவல்கள், தெரிவித்திருந்தன.

எனவே, இந்த பகுதியை அமெரிக்க மற்றும் ஆப்கன் படைப்பிரிவுகள் முற்றிலும் மூடி இஸ்லாமிய அரசு (அல்லது டயேஷ் என்று உள்ளூரில் அறியப்படும்) என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் முற்றிலும் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள் என்று அட்ராஃபி எண்ணியிருந்தார்.

ஆப்கனில் 9,800 கிலோ எடையுள்ள குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்

உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள்

ஆப்கன் அதிகாரி ஒருவர் அட்ராஃபியின் எண்ணத்தை திருத்தினார். "நீங்கள் நினைப்பதுபோல, முதல்முதலாக வீசப்பட்டுள்ள இந்த பெரிய குண்டு அவ்வளவு சக்தியுடைதாக இருக்கவில்லை" என்று அவர் கூறினார்.

"இந்த குண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்னும் பச்சை நிற மரங்கள் காணப்படுகின்றன".

"எல்லா குண்டுகளுக்கும் தாய்" என்ற இந்த குண்டு தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், எத்தனை பேர் என்பதை உறுதியாக அறிந்து கொள்வது மிகவும் கடினம். அச்சின் மாவட்ட ஆளுநர் இஸ்மாயில் ஷின்வாரி குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடர்கிறது.

"டயேஷ் (இஸ்லாமிய அரசுஅ தீவிரவாதிகள்) வேறு எங்கும் சென்றுவிடவில்லை. அமெரிக்கா குண்டுவிசி தாக்கியதைபோல, அங்கு நூற்றுக்கணக்கான குகைகள் காணப்படுகின்றன" என்று தெரிவித்த அதிகாரி அந்த பெரிய குண்டு வீசப்பட்ட பின்னரும், மோதல்கள் தொடர்து வருகின்றன. இவ்வாறு இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை ஒழித்துவிட முடியாது" என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் மகா குண்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது?

தொடரும் சண்டை

இந்த மலைத்தொடரிலுள்ள பெரியதொரு பகுதியில் இந்த சண்டை நடைபெறுவதாக தோன்றுகிறது. குண்டுவீச்சு தொடர்ந்து நடைபெறுவதால், இந்த பள்ளத்தாக்கு புகையாலும் இரைச்சலாலும் நிறைந்துள்ளது.

ஆனால், இஸ்லாமிய அரச தீவிரவாதிகள் இறந்து வருகின்றனர். இறந்த இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் புகைப்படங்களை மாவட்ட போலிஸ் தலைவர் மேஜர் முகமது சாபாய், அட்ராஃபிக்கு காட்டினார். அவர்கள் தாடியையும் நீண்ட முடியையும் வைத்திருந்தனர்.

குதிரை சவாரி செய்வது, அவர்களின் கறுப்பு கொடியை பிடித்து செல்வது அல்லது உள்ளூர் ஷின்வாரி மக்களை குண்டுகளின் மீது அமர செய்வது. பின்னர் அந்த குண்டுகளை வெடிக்க செய்வது என்று பரப்புரை ஒளிப்படங்களில் அவர்கள் தோன்றுவதற்கு நேர்மாறாக, இந்த இறந்த புகைப்படங்களில் அவர்கள் பரிதாபமாக தோற்றமளித்தனர்.

அவர்களில் சிலர் வெளிநாட்டவர் என்று மேயர் காயிர் தெரிவித்தார். ஆனால், அவர்களின் சிதறிய, குப்பை-மூடிய முகங்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் காண்பதே மிகவும் கடினமாக இருந்தது.

ரோந்து நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட கையால் எழுதப்பட்ட ஆப்கன் தொலைபேசி எண்களை அவர் காட்டினார். அந்த பட்டியலில் இருந்த சில பெயர்கள் அரேபிய அல்லது பாகிஸ்தானிய பெயர்களாக இருந்தன.

"மக்களின் எழுச்சி" படை

இந்த மேயர் கூறுபவை எல்லாவற்றையும் ஹாகிம் கான் முகமதுவும், அவருடைய நண்பர்களும் ஏற்றுகொள்கின்றனர். இவர்கள் "மக்களின் எழுச்சி" என்று அழைக்கப்படும் அமைப்பின் உறுப்பினர்கள். அந்த பகுதிக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் உள்ளூர் மக்களால் உருவாக்கப்பட்ட புதிய ஆயுதப்படைதான் இவர்கள். நாட்டின் பாதுகாப்பு படைப்பிரிவுகளோடு அவர்கள் ஒத்துழைக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் பலவீனமான மற்றும் நிலையற்ற தன்மையின் அறிகுறியாகத்தான் இவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

தாடி வளர்த்துள்ள இவர்கள் சிறிய கட்டில்களில் தூங்குகின்றனர். இஸ்லாமிய அரசு ஆயதப்படையினர் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுவீசுவதை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.

"உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், அரேபியாவை சேர்ந்தோர் மற்றும் குனார் மாகாணத்தின் வாகாபிஸ் என பலதரப்பட்டோர் அவர்களில் காணப்படுகின்றனர். அவர்களுக்கு செல்ல எந்த இடமும் இல்லை. அவர்கள் ஒளிந்திருக்கும் குகைகளில் புதைந்துபோவதே மிகவும் நல்லது என்று ஹாகிம் கான் தெரிவித்திருக்கிறார்,

இன்னும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மமான்ட் பள்ளத்தாக்கில்தான் இவருடைய வீடு உள்ளது.

கடவுள் நினைத்தால், டாயேஷ் ஆயுதப்படையினரை இந்த பள்ளத்தாக்கில் இருந்து முழுவதும் அழித்து விடுவதாக அமெரிக்கர்கள் எங்களுக்கு வாக்கு கொடுத்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தங்களுடைய முக்கியமான இடங்களில் பல ஆதரவாளார்களை கொண்டிருக்கும் தலிபான்களைவிட, இஸ்லாமிய அரசு குழுவினர் மக்கள் பலரை கோபமூட்டியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் குண்டு தாக்குதல் பற்றி சிலர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் தோன்றுகிறது.

இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் இயல்புநிலை

இந்த முன்னிலை அரங்கிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் சாதாரண வாழ்க்கை தொடர்கிறது. பெண்கள் நீர் சுமந்து செல்கிறார்கள். சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். மக்கள் தங்களுடைய அன்றாட கடமைகளில் மூழ்கியிருக்கின்றனர்.

இருப்பினும், அங்கு கவலை நிறைந்துள்ளது. உள்ளூர் மக்கள் அமெரிக்காவின் விளையாட்டுக்கு இரையாவதாக காலெட் என்பவர் தெரிவிக்கிறார்.

"(பெரிய குண்டு வீசி தாக்குதல் நடத்தியது) அவர்களுடைய படை நடவடிக்கை நன்றாகவே நடந்து வருகிறது என்பதாக உலகிற்கு காட்டுவதற்கு நடத்தப்பட்டதொரு சூழ்ச்சி. ஆனால், ஊடகங்களில் காட்டப்பட்ட வெடிகுண்டு இங்கு வீசப்படவில்லை. அந்த வெடிகுண்டு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இஸ்லாமிய அரசு குழு திரும்ப வருமா?

"ஆம். அரசு படை சென்றவுடன், உள்ளூர் மக்கள் இஸ்லாமிய அரசு ஆயுதப்படையை எதிர்த்து போரிட முடியாது. அரசு இங்கு நிரந்தர தளத்தை அமைந்து தந்து எங்களுக்கு உதவினால்தான் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்" என்று அவர் தெரிவித்தார்.

சற்று வலிமையான படைக்கு எதிராக இஸ்லாமிய அரசு ஆயுதப்படை எதையும் செய்துவிட முடியாது என்று இன்னொரு உள்ளூர்வாசி தெரிவித்தார்.

"அமெரிக்கர்கள் இன்னும் பெரிய வெடிகுண்டை கொண்டு தாக்குதல் நடத்தட்டும். இது சிறியது" என்று அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய அரசு குழுவினரை ஒட்டுக்கேட்டல்

குன்றுப் பகுதியில், ஹாகிம் கானும் அவரது நண்பர்களும் தங்களுடைய வானொலியை பயன்படுத்தி இஸ்லாமிய அரசு குழுவினர் வாக்கி-டாக்கிகளில் தொடர்பு கொள்வதை ஒட்டுக்கேட்கிறார்கள். அண்டை மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய அரசு குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு தங்களின் நிலைகளை பற்றி உறுதி செய்து கொள்கிறார்கள்.

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளால் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை ஒடுக்க முடியுமா? என்று எல்லை காவல்துறை அதிகாரி ஒருவர் ஆய்வு செய்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"நாம் எவ்வளவுக்கு அதிகமாக அவர்களை கொன்று அழிக்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக அடுத்தப் பக்கத்தில் இருந்து, அதாவது பாகிஸ்தானிலுள்ள டுரான்ட் கோட்டிலிருந்து அதிகமானோர் வருகிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

ஜலாலாபாத்தில் இருந்து இரவு வந்த பின்னர், அடுத்த நாள் காலை அங்கு மீண்டும் சென்றோம்.

அங்கு சண்டை எதுவும் நடைபெறவில்லை. குண்டு வீசி பாதிப்பு நிகழ்ந்த இடத்திற்கு முன்னால் நிறுத்தும் வரை பள்ளத்தாக்கில் தொடர்ந்து சென்றார்கள். அவர்களை தடுத்து நிறுத்திய ஆப்கன் சிறப்பு படைப்பிரிவுகள் அவ்விடத்தை சுற்றிக்காட்ட ஒப்புக் கொண்டனர்.

இஸ்லாமிய அரசு குழுவினரின் மாவட்டம்

இந்த மாவட்டத்தை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் தங்களுடையதாகவே பார்த்தனர். உள்ளூர் மக்கள் பெரும்பாலோர் தப்பியோடிய பின்னர், கசகசா பயிரிடுவதை தடை செய்த இஸ்லாமிய அரசு குழுவினர் கோதுமையை பயிரிட்டு அந்த பள்ளத்தாக்கையே பசுமையானதாக மாற்றினர்.

அவர்கள் ஒதுங்கி வாழ்ந்த இடங்கள் எல்லாம் அவர்களின் போர்க்களமாக மாறின. இந்த ஆயுதப்படையினர் உள்ளே தூங்கி வந்த வெற்று மரங்களுக்கு பக்கத்தில் அவர்களின் உடல்கள் கிடக்கின்றன.

"இஸ்லாமிய அரசு ஆயுதப்படையினர் பித்துபிடித்தவர் மற்றும் மிகவும் அர்ப்பணம் உடையவர்" என்கிறார் கடுமையான தோற்றத்துடன் காணப்படும் சிறப்பு படைப்பிரிவு சிப்பாய் ஷீர்.

படத்தின் காப்புரிமை AFP

தொழில்நுட்ப செயல்திறனோடு போரிடுதல்

"அவர்களின் பெரும்பாலான ரஷ்ய துப்பாக்கிகளை அவர்களே தயார் செய்கிறார்கள். அவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போரிடுபவர்கள்" என்று அவர் கூறுகிறார்.

"அவர்கள் மலைகளில் வருகின்றபோது, சப்தத்தை நீங்கள் கேட்க முடியாது. அவர்கள் 6 காலுறைகளை அணிந்திருப்பர். நீங்கள் அவர்கள் வருகின்ற சப்தத்தை கேட்க முடியாத அளவில் தாக்குதல் தொடுக்கின்ற அளவுக்கான இடைவெளியில் அவர்கள் வருவர்".

"மலைகளில் அவர்கள் ஒருவராகவோ, இரண்டு அல்லது மூவராகவோ போரிடுவர். அவர்கள் தங்களில் நிலைகளை விட்டு செல்வதில்லை. எனவே நீங்கள் அவர்களை கொன்றாக வேண்டும். அவர்களுடைய உடலை எடுத்துசெல்ல அவர்களின் நண்பர்கள் யாரும் வருவதில்லை. அவர்கள் எங்கு இறந்தார்களோ, அங்கேயே அவர்களின் உடல் கிடக்கும்"

நாங்கள் இந்த பெரிய குண்டு தாக்குதலின் பாதிப்பு இடத்தை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்க காத்திருந்தோம். அந்த இடம் விமானங்களில் இருந்து விநியோகிக்கப்படும் ஆயுதப் பேழைகளால் சூழப்பட்டிருந்தது.

முதலில் சிறியதொரு இஸ்லாமிய அரசு கட்டளை தளத்தையும், சிறையையும் எங்களுக்கு காட்டிய ஒரு ராணுவ தொகுதியின் தளபதியான ஹாஜி பியெஸ் என்பவர்தான் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்.

படத்தின் காப்புரிமை BBC Sport

குகையும், சிறையும்

ஒரு கதவை திறந்ததும் அது மிகவும் விசாலமான வளாகத்திற்கும், ஓர் அறைக்கும் இட்டுச்சென்றது. அந்த அறையில் இருந்து சுமார் 10 பேர் தங்கக்கூடிய ஒரு சிறியதொரு குகைக்கு சென்றது.

இது பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகவும் உறுதியாக இருந்தது. இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை கண்டறிவதற்கும், கொல்வதற்கும் ஏன் இவ்வளவு நேரமும், சக்தியும் தேவைப்பட்டது என்பது அப்போது தெளிவாகியது.

அந்த குகையின் நுழைவாயிலில் கம்பிவலையால் மேம்படுத்தப்பட்ட கூண்டு ஒன்று இருந்தது. இரண்டு இறுகிய இடைவெளி இருந்த அந்த இடம் தான் சிறை அறைகளாக பயன்படுத்தப்பட்டதாக ஹாஜி பியெஸ் தெரிவித்தார்,

"தசாப்த காலத்திற்கு மேலாக முஜாஹிதீன் முதல் தாலிபன, சமீபத்தில் இஸ்லாமிய அரசு குழு என பல தீவிரவாத குழுக்காளால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த குகைகளை எல்லா குண்டுகளுக்கும் தாய் என்று கருதப்படும் பெரிய வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியது மிக நல்ல முடிவு" என்று நம்புவதாக அவர் கூறினார்.

"இந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் இந்த இடத்தை சுற்றி 20 உடல்களை நாங்கள் கண்டெடுத்தோம். இந்த குகை அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது. இறந்தோரில் பலர் இந்த குகைக்குள் புதைந்திருக்கும் சாத்தியக்கூறு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப்போரில் கலக்கிய லான்காஸ்டர் போர் விமானம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இரண்டாம் உலகப்போரில் கலக்கிய லான்காஸ்டர் போர் விமானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்