கண்மூடித்தனமாக பேருந்து ஓட்டிய டிரைவர்கள் கைது

  • 1 மே 2017

அதிவேகமாகவும், போட்டி போட்டுக்கொண்டும் இரண்டு தனியார் பேருந்துகள் ஓட்டிச்செல்லப்படும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து, அதை செலுத்திய வாகன ஓட்டுனர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

படத்தின் காப்புரிமை Social

கைதாகியுள்ள அந்த இரண்டு வாகன ஓட்டுனர்களின் உரிமங்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

அத்தோடு இந்த வாகனங்கள் செலுத்தப்பட்ட பொள்ளாச்சி- கோயம்பத்தூர் இடையேயான சாலையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசியிடம் பேசிய பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஓட்டுனர் இல்லா 'பாட்' வாகனங்கள்

மேலும் நாளை செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தப்போவதாகவும் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

இந்த கூட்டத்தின் போது, பேருந்துகளை செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள் குறித்து அறிவுரை வழங்கப்படும் என்றும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தேவையான எச்சரிக்கை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Social

அந்த குறிப்பிட்ட சாலையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற வரும் காரணத்தால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் பலகைகள் போதுமான அளவு வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறிய காயத்ரி கிருஷ்ணன், அங்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் தேவையான இடங்களில் தடை அரண்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படலாம்

மேலும் இந்த சாலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தொடங்கப்பட்ட காலத்திலிருந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய காயத்ரி கிருஷ்ணன், கடந்த இரண்டு மாதங்களில் வாகன விபத்துகள் பெருமளவில் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

பொள்ளாச்சி கோயம்பத்தூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வரும் தீவிர கண்காணிப்பில், இந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காணொளி: ரூபாய் நோட்டுக்கள் தடையால் தடுமாறும் பொது போக்குவரத்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரூபாய் நோட்டுக்கள் தடையால் தடுமாறும் பொது போக்குவரத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்