நியூசிலாந்து மலைமீது பிளேபாய் மாடல் நிர்வாணப் படம் எடுத்ததால் சர்ச்சை

  • 19 மே 2017

ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பதிவிட சிறப்பான காட்சியை படமெடுக்க தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஒரு மலையுச்சியை அடைந்து அக்காட்சியை படமெடுப்பது ஒரு சிறந்த காட்சியைத் தரக்கூடும்.

படத்தின் காப்புரிமை Instagram

ஆனால் நீங்கள், `பிளேபாய்` கவர்ச்சி சஞ்சிகையின் மாடல், உங்களுக்கு சமூக ஊடகங்களில் சுமார் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள் என்றால், ஏன் இந்த இந்த இடத்தில் உங்கள் புகைப்படக் கருவிகளை வைத்துவிட்டு, காட்சியின் பிரேமுக்குள்ளேயே சென்று விடக்கூடாது ? - உங்கள் பின் புறத்தை நிர்வாணமாகக் காட்டியபடி ?

நியூசிலாந்தில் தரானாகி மலை மீது இவ்வாறுதான் ஜெய்லீன் குக் என்ற மாடல் போஸ் கொடுத்தார்.

ஆனால் ஜெய்லீன் குக்கின் இந்த செய்கை கலாசார ரீதியாக முற்றிலும் மோசமானது என்று உள்ளூரை சேர்ந்த மாவோரி இன ஆதிவாசிகள் குறிப்பிடுகிறார்கள்.

எரிமலையின் உச்சியை மாவோரி மக்கள் புனிதமாக கருதுகின்றனர்.

`பொருத்தமற்ற நடவடிக்கை`

''வத்திக்கான் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவுக்கு சென்று நிர்வாணமாக படம் எடுத்துக்கொள்வதற்கு ஒப்பானது இது,'' என்று மாவோரி இனக்குழு மக்களின் செய்திதொடர்பாளர் டென்னிஸ் காவேர் பிபிசியிடம் தெரிவித்தார்.

''இது ஒரு புனிதமான இடம். இது போன்ற செயல் மிகவும் பொருத்தமற்ற ஒன்று,'' என்றார் அவர் .

குக்கும் நியுசிலாந்தைச் சேர்ந்தவர்தான். அவர் சில நாட்களுக்கு முன்னர் அவரது ஆண் நண்பருடன் இந்த மலை மீது ஏறியபோது இந்தப் படம் எடுக்கப்பட்டது.

அவரது பிரபலமான இன்ஸ்டாகிராம் கணக்கில் , அவர் இந்த 2518 மீட்டர் உயரமுள்ள சிகரத்தின் மீது ஏறி தொலை தூரத்தைப் பார்க்கும் வகையிலான இந்தப் படத்துக்கு சுமார் 10,000 லைக்குகள் விழுந்தன.

`` இது ஒரு பாறைகளும், மண்ணும் சேர்ந்த ஒரு இடம்தான், இதை எப்படி அவமதிக்க முடியும் என்று சிலர் கேட்கலாம்`` , என்றார் காவாரே.

பழங்குடியினரின் புனித மலை

ஆனால் உள்ளூர் மாவோரி சமூகத்தைப் பொறுத்தவரை, இந்த எரிமலை அந்தப் பழங்குடியின மக்களின் மூதாதையர்களின் இடுகாடாகப் பார்க்கப்படுகிறது; அதையே அவர்கள் தங்கள் மூதாதையராகவேகூடப் பார்க்கிறார்கள்.

பாரம்பரிய வழக்கப்படி, இந்த சிகரத்தின் உச்சியின் மீது ஏறுவதேகூட பொருத்தமற்றதாகவும், வெகு அபூர்வமாக அவ்வாறு ஏறுவது, ஒரு சடங்கு ரீதியானதாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நாடு பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலிருந்து, இந்த மலை பற்றி உள்ளூர் பழங்குடியினருக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லாமல் இருந்தது.

இந்த மலைச் சிகரம், நியுசிலாந்தை முதலில் வரைபடமாக வரைந்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், கேப்டன் ஜேம்ஸ் குக்கால், மவுன்ட் எக்மோண்ட் என்று பெயரிடப்பட்டது.

இப்போது, சுற்றுலாப் பயணிகள் இந்த அழகிய எரிமலை மீது ஏற விரும்புகிறார்கள் என்பதை இந்தப் பழங்குடியினர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

`` சமீப காலமாகத்தான், இந்த மலை மீது என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய முடிவுகளில் எங்கள் கருத்துளை சொல்லி செல்வாக்கு செலுத்த முடிகிறது``, என்றார் அந்த உள்ளூர் மாவோரியினப் பேச்சாளர்.

`` நாங்கள் வரும் மக்களை அந்த மலை பற்றி மரியாதையாக இருக்க மட்டுமே சொல்கிறோம். இந்த மிகச் சமீபத்திய சம்பவம் அங்கு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி ஒருவர் தெளிவாகவே புரிந்து கொண்டிருக்காத ஒரு எரிச்சலூட்டும் மற்றொரு உதாரணம்தான்``, என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை Huw Evans picture agency
Image caption மாவோரி இனக்குழு மக்கள் வணங்கும் மலை

''சமீப காலமாகத்தான் இந்த மலையில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தகவல் தெரிகிறது,'' என்று மாவோரி இனக்குழு மக்களின் செய்திதொடர்பாளர் டென்னிஸ் காவேர் தெரிவித்தார்.

''மக்கள் மரியாதையுடன் இருக்க வேண்டுமென என்று கேட்கிறோம். இந்த இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாமல் இருப்பவர்களின் மோசமான உதாரணங்களுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு,''என்றார் அவர்.

``மனங்களை காயப்படுத்தாது என்று நினைத்தேன்``

இது ஒரு கலாசார ரீதியில் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒரு நடவடிக்கை என்று ஒப்புக்கொள்கிறார், இந்தப் பகுதி இருக்கும் ஸ்ட்ராட்ஃபோர்ட் மாவட்டத்தின் மேயர் நீல் வோல்ஸ்க்.

``இந்தப் படம் புண்படுத்தும் விதமானதாகவோ, அல்லது ஆபாசமானதாகவோ இருக்கிறது என்று நான் கருதவில்லை, ஆனால் அந்தப் பட்த்தை, உள்ளூர் மாவோரி இன மக்கள் பெரிதும் மதிக்கும் இந்த தரனாகி மலை மீது ஏறி நின்று எடுப்பதுதான் பொருத்தமற்றது`` , என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

குக்கின் இந்த நிர்வாணப் படம் குறித்து விமர்சன்ங்கள் எழத் தொடங்கியதும், அவர் இந்தப் படம் எடுப்பதற்கு முன்னர் இது குறித்து ஆராய்ச்சி செய்ததாகவும், இந்தப் படமெடுப்பது யாருடைய மன உணர்வுகளையும் பாதிக்காது என்று நினைத்ததாகவும் கூறி தனது தரப்பை நியாயப்படுத்தினார்.

படத்தின் காப்புரிமை TIM STEWART NEWS LIMITED
Image caption வெளிநாட்டை சேர்ந்த மலை ஏறும் சுற்றுலாவாசிகள் மலேசியாவில் உள்ள கினபாலு மலை மீது ஏறி எடுத்த புகைப்படங்கள்

மேற்குலக யூகங்கள் - உள்ளூர் விழுமியங்கள்

ஆனால் உள்ளூர் மாவோரி இன மக்கள் சற்று திகைப்பில்தான் உள்ளனர்.

``மேற்குலக மக்களின் ஊகங்கள் மற்றும் உள்ளூர் பழங்குடியின மக்களின் விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கிடையே ஒரு மோதல்தான் இது``, என்று காவாரே கூறுகிறார்.

தரனாகி மலையில் முன்பு நடந்த பல சம்பவங்களும் உள்ளூர் மாவோரி இன மக்களை சீற்றமடையச் செய்துள்ளன.

இதில் ,ஒரு முறை, மலையேறச் செல்பவர்கள், மலை உச்சியில் பார்பெக்யூ எனப்படும், திறந்த வெளியில் கரி அடுப்பில் சமைத்து சாப்பிட்ட சம்பவம், பின்னர் மலையெங்கும் கிறுக்கி வைத்துவிட்டு சென்ற சம்பவம் போன்றவைகளும் அடங்கும்.

`இந்த இடம் எல்லா நேரங்களிலும் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படவேண்டிய ஒரு இடம்``, என்றார் மேயர் வோல்ஸ்கே.

ஒரு மலையில் நிர்வாணப் படம் எடுத்து அந்த சம்பவம் உள்ளூர்வாசிகளின் கண்டனத்துக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல.

கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில், மேலை நாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று மலேசியாவின் கினபாலு மலை மீது இதே போன்ற ஒரு செயலில் ஈடுபட்டு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் இந்த புனிதமான மலையை அவமதித்ததால்தான் பின்னர் அங்கு ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் நீதிமன்ற வழக்கு, சில நாட்கள் சிறைவாசம், மற்றும் அபராதம் போன்றவைகளுக்குப் பின்னர்தான் அச்சுற்றுலாப் பயணிகள் மலேசியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்

பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்

கார்த்தி சிதம்பரம்: சர்ச்சைகளின் மத்தியில்

தொலைக்காட்சி 'ரியாலிட்டி ஷோ' தொகுப்பாளராகிறார் கமல் ஹாசன்

மதுவருந்தும் கணவனை தடுக்க மணப்பெண்களுக்கு 'வினோத' பரிசளித்த அமைச்சர்

"திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்