மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி

வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையில் மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்த ஆயிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி விவாகரத்து பெற்றவர். அவருடன் பணியாற்றிய சக தொழிலாளி இந்தியாவில் நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை காட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சக தொழிலாளியின் மேல் வைத்த நம்பிக்கையை பெற்றோரின் மீது வைக்காத ஆயிஷா, ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டார். பெற்றோருக்குத் தெரியாமல், மும்பைக்கு வந்த ஆயிஷாவிற்கு வேலை வாங்கித் தருவதற்கு பதிலாக, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நேபாளப் பெண் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார் தரகர்.

பாலியல் தொழிலில் ஆயிஷாவும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டார். அதுமட்டுமா? மும்பை, பெங்களூரு என பல்வேறு நகரங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கொண்டு செல்லப்பட்டு, வெவ்வேறு நபர்களின் பிடியில் சிக்கிய ஆயிஷா, இறுதியில் புணே சிவப்பு விளக்குப் பகுதியை வந்தடைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அங்கு காவல்துறையினரின் அதிரடிச் சோதனையில் மீட்கப்பட்ட ஆயிஷா, தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டார். மும்பையில் உள்ள பங்களாதேஷ் ராஜீய அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, ஆயிஷாவின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை கூறியது தொண்டு நிறுவனம்.

விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு, ஆயிஷாவை தனது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நன்றாக நடந்தால் ஆயிஷா மே மாதம் 15 ஆம் தேதியன்று தாயகம் திரும்புவார்.

ஆயிஷாவின் கதை, பங்களாதேஷில் இருக்கும் ஆயிரக்கணக்கான திக்கற்ற பெண்களின் கதையை ஒத்ததாகவே இருக்கிறது. இந்தியாவில் வேலை வாங்கித்தருவதாக ஆசைகாட்டி, மோசம் செய்து அவர்களை இருண்ட வாழ்க்கைக்குள் தள்ளிவிடும் மோசடி கும்பல்கள், இரையைச் சுற்றும் பருந்தாய் திரிகின்றன.

ஆனால் ஆயிஷாவின் கதை மட்டும் ஏன் குறிப்பாக பேசப்படுகிறது? அவர் இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் செல்வதற்கு முன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, இதயத்தை தொடும்படி உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை எழுதியிருப்பது தான் காரணம். வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் (வெகுமதி) ஆக பெற்ற தொகையை கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கிறார். ஆனால் அதில் இந்திய அரசு செல்லாதது என்று அறிவித்த ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருப்பதால், அவற்றை மாற்றிக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த உணர்ச்சிபூர்வமான கடிதத்தை, ரெஸ்க்யூ ஃபவுண்டேஷனின் ரூபாலி ஷிபார்கர் ஹிந்தியில் மொழிபெயர்த்து, ஆயிஷாவின் சார்பில் பிரதமமந்திரி நரேந்திரமோதிக்கும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் டிவிட்டர் செய்தியாக அனுப்பியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை @RESQ_FOUNDATION
Image caption டிவிட்டர் செய்தி

காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட ஆயிஷா

மோதியும், சுஷ்மாவும் டிவிட்டர் செய்திகளை தொடர்ந்து பார்ப்பவர்கள். சுஷ்மா ஸ்வராஜ் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு உடனடியாக உதவி செய்பவர் என்பதால் பிரதமருக்கு எழுதிய கடிதம் அவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

செய்தி ஊடகங்களில் இந்த கடிதம் குறித்த சர்ச்சை பரவலாகிவிட்டது. "காவல்துறையினரின் உதவியுடன் ஆயிஷாவை மீட்டோம். அந்த சந்தர்ப்பத்தில் உடுத்திய உடையுடன் எங்களுடன் வந்த அவர் வேறு எதையும் கொண்டு வரவில்லை. பிறகும், கோர்ட்-கச்சேரி என பலவிதமான அலைச்சல்களில், அதற்கு பிறகும் அதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை" என்று ரெவென்யூ ஃபவுண்டேஷனின் தலைவர் திரிவேணி ஆசார்யா, பிபிசியிடம் தெரிவித்தார்.

"சிறிது பணத்தை ஒளித்து வைத்திருப்பதாக ஆயிஷா சொன்னார், அங்கு சென்று பார்த்தபோது, ஒரு டிரங்க் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12-13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் கிடைத்தது."

படத்தின் காப்புரிமை Getty Images

"பெங்களூரு சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்தபோது, விபச்சார விடுதியின் உரிமையாளர் எங்கள் கையில் பணமே தரமாட்டார். ஆனால், வாடிக்கையாளர்கள் கொடுத்துச் செல்லும் வெகுமதியை உள்ளாடைகளில் மறைத்து வைத்து பாதுகாத்தேன். அதில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே அதிகம்" என்று ஆயிஷா அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

பணவிலக்கத்தின் தாக்கம்

ஆனால், டிசம்பர் 31-ஆம் தேதியுடன் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசு விலக்கிக்கொண்டதும், அவை செல்லாக்காசாகிவிட்டன. புணே நகர காவல்துறை ஆணையர் ரஷ்மி சுக்லாவின் தனிப்பட்ட ஆர்வத்தினால் கட்ராஜ் காட்டில் இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து ஆயிஷாவை மீட்கும் நடவடிக்கை சாத்தியமானது.

"ஆதரவற்ற பங்களாதேஷ் பெண், மிகுந்த நெருக்கடிக்கு இடையில் சேமித்து வைத்த பணம் செல்லாதது என்று தெரிந்ததும் அவர் முகத்தில் தென்பட்ட ஆதங்கத்தைப் பார்த்து வருத்தப்பட்டேன்.. இந்தக் கடிதத்தை பார்த்து, மத்திய அரசு ஏதாவது செய்தால் நல்லது. இல்லாவிட்டாலும், ஆயிஷா பங்களாதேஷ் திரும்பிச் செல்வதற்கு முன்னதாக அவருக்கு நிதியுதவி செய்வதற்கான சாத்தியங்களை ஆராய்ந்துவருகிறேன்" என்கிறார் ரஷ்மி சுக்லா.

படத்தின் காப்புரிமை AFP

பத்தாயிரம் ரூபாய் என்பது பலருக்கு மிகச்சிறியத் தொகையாக இருக்கலாம். ஆனால் ஆஷா போன்ற ஒரு பெண்ணுக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது.

அவர் தாயகத்திற்கு செல்வதற்கு முன், செல்லாத நோட்டுகளை மாற்றி செல்லத்தக்க நோட்டுகளாக வழங்கினால் அது, அவரின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதோடு, கேள்விக்குரிய அவரது எதிர்காலத்திற்கு ஒரு நல்ல பதிலை உருவாக்கவும் உதவிபுரியலாம். செல்லாக்காசு செல்லுமா, செல்லாதா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

பிற முக்கிய செய்திகள் :

ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள்-3

பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்