கலப்புப் பாலின குழந்தைகளை காப்பாற்றிய செவிலித்தாய்

  • 9 மே 2017

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கென்யாவிலுள்ள செவிலித்தாய், கர்ப்பிணி பெண்ணொருவரின் பிரசவத்தில் உதவியபோது, ஆண் மற்றும் பெண் குறிகள் இரண்டும் கொண்டிருந்த குழந்தை பிறந்தது.

படத்தின் காப்புரிமை CHARLOTTE EDEY

அதனுடைய தந்தை அக்குழந்தையை கொன்றுவிட சொன்னார். ஆனால், இந்த செவிலித்தாயோ அந்த குழந்தையை மறைத்து வைத்துகொண்டு தன்னுடைய குழந்தைபோல வளர்க்க தொடங்கினார்,

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் அவ்வாறே நிகழ்ந்தது. அந்த குழந்தைகளின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக அவர் கணவரை விட்டு பிரிய வேண்டியதாயிற்று.

கலப்புப் பாலின குழந்தை

ஸாய்நேப் என்பவர் குழந்தைகளை பெற்றேடுக்க உதவி செய்கிற செவிலித்தாய். கென்யாவின் மேற்கு பகுதியிலுள்ள கிராமப்புறத்தில் பாரம்பரிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்யும் ஒரு செவிலித்தாயாக அவர் பல ஆண்டுகளாக டஜன் கணக்காக குழந்தைகளை பெற்றெடுக்க உதவியுள்ளார்.

ஆனால், அவர் முன்னால் இருக்கின்ற குழந்தையை போல வேறு எந்த குழந்தையும் இவர் உதவிய பிரசவங்களில் பிறக்கவில்லை.

இந்த குழந்தையின் பிறப்பே சிக்கலானதாக இருந்தது. ஆனால், ஸாய்நேப்பால் கையாள முடியாத அளவுக்கு சிக்கல் பெரிதாகயில்லை. தொப்புள் கொடி குழந்தையின் தலையை சுற்றி, சிக்கி கிடந்தது. ஒரு மர கரண்டி வைத்து அந்த சிக்கலை எடுத்துவிடுவதற்காக, மிக விரைவாக அவர் சிந்தித்து செயல்பட வேண்டியிருந்தது.

குழந்தை சுவாசிப்பதை சீராக்கி, அதனை கழுவிய அவர், தொப்புள் கொடியை வெட்டி முடிச்சு போட்டுவிட்டார்.

அதன் பின்னர்தான் ஸாய்நேப், அவர் இதுவரை கண்டிராத ஒன்றை கண்டார்.

"குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்"

"குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று பார்க்க முற்பட்டபோது, அதற்கு ஆண் மற்றும் பெண் குறிகள் இரண்டும் இருந்ததை கண்டேன்" என்று அவர் கூறுகிறார்.

"இது ஆண் குழந்தை" அல்லது "இது பெண் குழந்தை" என்று அவர் வழக்கமாக சொல்வதற்கு பதிலாக, "உங்களுடைய குழந்தை இதோ" என்று கூறி அந்த தாயிடம் இந்த குழந்தையை வழங்கினார்.

படத்தின் காப்புரிமை CHARLOTTE EDEY

குழந்தையை கொல்ல விரும்பிய பெற்றோர்

சோர்வுற்று படுத்திருந்த அந்த தாய் குழந்தையின் பாலினம் தெளிவாக இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், அவருடைய கணவர் வந்து சேர்ந்ததும் அடுத்து அந்த குழந்தையை என்ன செய்ய வேண்டும் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

"நாங்கள் இந்தக் குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. இந்த குழந்தையை கொன்று விட விரும்புகிறோம்" என்று இந்த குழந்தையின் தந்தை என்னிடம் தெரிவித்தார்.

தீவிரவாத அமைப்புகளுக்கு இரையாகும் குழந்தை அகதிகள்: ஆய்வில் தகவல்

"இந்த குழந்தை கடவுளின் படைப்பு. அதனை கொல்லக்கூடாது" என்பது ஸாய்நேப்பின் பதிலாக அமைந்தது.

ஆனால், குழந்தையின் தந்தை முடிவில் இருந்து மாறுவதாக இல்லை.

இறுதியில், "இந்த குழந்தையை என்னிடம் விட்டு செல்லுங்கள். இதனை உங்களுக்காக நான் கொன்று விடுகிறேன்" என்று ஸாய்நேப் கூறினார்.

ஆனால், ஸாய்நேப் அந்த குழந்தையை கொல்லவில்லை. நன்றாக கவனித்து வளர்த்து வந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸாய்நேப் வாக்களித்தப்படி அந்த குழந்தையை கொன்றுவிட்டாரா? என்று சோதித்து அறிந்துகொள்ள அந்த குழந்தையின் தந்தை பலமுறை வந்து விசாரித்தார்.

அந்த குழந்தையை கொன்றுவிட்டதாக ஸாய்நேப் வலியுறுத்தினார். ஆனால், இவ்வாறு ஏமாற்றுவது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

"ஓராண்டுக்கு பின்னர் தங்களுடைய குழந்தை உயிருடன் இருப்பதை கேள்விப்பட்டு அந்த பெற்றோர் என்னை பார்க்க வந்தனர்" என்று ஸாய்நேப் தெரிவிக்கிறார்.

கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்

"இந்த குழந்தை தங்களுடையது என்று ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டனர். நானும் அதற்கு ஒப்பு கொண்டேன். அதுமுதல் அந்த குழந்தையை என்னுடைய குழந்தைபோல வளர்த்து வருகிறேன்" என்று ஸாய்நேப் தெரிவிக்கிறார்.

இதுவொரு அசாதரணமான மிகவும் ஆபத்தான தெரிவாக அமைந்தது.

கலப்புப் பாலின குழந்தை குடும்பத்திற்கு சாபம்

ஸாய்நேப்பின் சமூகத்திலும், கென்யாவிலுள்ள பல சமூகங்களிலும், கலப்புப் பாலின குழந்தைகள் அதனுடைய குடும்பத்திற்கும், அண்டைவீட்டாருக்கும் சாபத்தை கொண்டு வருகின்ற கெட்ட சகுணமாக பார்க்கப்பட்டன.

அத்தகைய ஒரு குழந்தையை தத்தெடுத்து கொண்டதன் மூலம், பாரம்பரிய நம்பிக்கைகளை மீறிய ஸாய்நேப், எந்தவொரு கெட்டவை நடந்துவிட்டாலும் அதற்கு அவரே காரணம் என்ற அவப்பெயருக்கும் ஆளானார்.

இது 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இன்னொரு கலப்புப் பாலின குழந்தை பிறந்ததை கண்டு ஸாய்நேப் மிகவும் ஆச்சரியடைந்தார்.

இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தார், பின்னர் மூன்றாவதும் சேர்ந்தது

கென்யர்களில் எத்தனை பேர் கலப்பு பாலினத்தவராக இருக்கின்றனர் என்பதற்கு நம்பகரமான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், பிற நாடுகளில் இருப்பது போலவே 1.7 சதவீதத்தினர் கலப்பு பாலினத்தவராக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.

மீண்டுமொரு குழந்தை

"இந்த வேளையில், குழந்தையை கொல்ல அதன் பெற்றோர் வேண்டிக்கொள்ளவில்லை. தனியாக இருந்த தாய், குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு ஓடிவிட்டார்" என்கிறார் ஸாய்நேப்.

அந்த குழந்தையையும் வீட்டுக்கு எடுத்துசென்ற ஸாய்நேப் தன்னுடைய குழந்தையை போல வளர்க்க தொடங்கினார். ஆனால், இவருடைய இந்த செயலால், மீனவரான அவரது கணவர் மகிழ்ச்சியடையவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

கணவனை பிரிதல்

"அவர் ஏரிக்கு மீன் பிடிக்க சென்று மீன் சரியாக கிடைக்காவிட்டால், இந்த குழந்தைகளை தான் கணவர் குறை சொல்வார்" என்று ஸாப்நேப் குறிப்பிடுகிறார்.

"இந்த குழந்தைகள் குடும்பத்திற்கு சாபத்தை கொண்டு வந்ததால்தான் இவ்வாறு நடக்கிறது என்று அவர் கூறினார். இந்த குழந்தைகளை அவரிடம் கொடுத்து விடவும், அவர்களை அவர் ஏரியில் மூழ்கிவிட செய்வதாகவும் தெரிவித்தார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். இதை நடக்கவே விடமாட்டேன் என்று அவரிடம் உறுதியாக கூறிவிட்டேன். மிகவும் ஆத்திரமடைந்த அவர், எப்போதும் சண்டையிட தொடங்கிவிட்டார்"

கணவரின் இந்த நடத்தையை பார்த்து ஸாய்நேப் மிகவும் கவலையடைய தொடங்கினார். குழந்தைகளை எடுத்துகொண்டு அவரை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தார்.

"அதுவொரு மிகவும் கடினமாக முடிவாக எனக்கு இருந்தது. பொருளாதார ரீதியில் என்னுடைய கணவரோடு மிகவும் வசதியான வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேன். வளர்ந்த குழந்தைகள், பேரக்குழந்தைகள் கூட எங்களுக்கு இருந்தன. ஆனால், இத்தகைய மிரட்டல், சண்டையிடுதல் போன்ற சூழ்நிலையில் சேர்ந்து வாழ முடியாது" என்கிறார் ஸாய்நேப்.

உறைநிலை திசுக்களிலிருந்து உயிர்பெற்ற உலகின் முதல் குழந்தை

மாறிவரும் குழந்தை பிறப்பு

கென்யாவில் குழந்தை பிறப்பு மாறிவருகிறது. கிராமங்களில் குழந்தைகள் பிறப்பதைவிட மருத்துவமனைகளில் குழந்தைகளை பெற்றெடுப்பது அதிகரித்து வருகிறது. ஆனால் சமீபத்திய காலம் வரை பாரம்பரிய முறையிலான குழந்தை பிறப்பு தான் வழக்கமாக இருந்துவந்துள்ளது.

இத்தகைய கலப்பு பாலின குழந்தைகளை கையாள்வது பற்றிய மறைமுக அனுமானம் இருந்து வந்துள்ளது.

சீனா: குழந்தை பெறுவதற்காக தலைமறைவாகும் பெற்றோர்

"இத்தகைய கலப்பு பாலின குழந்தைகளை அவர்கள் வழக்கமாக கொன்றுவிடுவார்கள்" என்று பாரம்பரிய குழந்தை பிறப்பு முறைக்கு உதவுகின்றவரின் குழுவான 'டென் பிலவட் சிஸ்டர்ஸ்' அமைப்பின் தலைவரும், கென்யாவின் கிழக்குப் பகுதியை சேர்ந்தவருமான செலினி ஒகிகி விவரிக்கிறார்.

"ஒரு கலப்பு பாலின குழந்தை பிறந்துவிட்டால், தானாகவே சாபம் கிடைத்து விட்டதாக பார்க்கப்படுகிறது. அந்த குழந்தை வாழ அனுமதிக்கப்படுவதில்லை. அந்நேரத்தில் பாரம்பரிய பிறப்பு முறையில் பிரசவத்திற்கு உதவும் செவிலித்தாய், அந்த குழந்தையை கொன்றுவிட்டு, குழந்தை இறந்தே பிறந்துவிட்டது என்று தாயிடம் சொல்லிவிடுவார்"

படத்தின் காப்புரிமை Getty Images

குழந்தை கொலையை குறிக்க மங்கல வழங்கு

லுவோ மொழியில் இந்த குழந்தை எப்படி கொல்லப்பட்டது என்பதை குறிப்பதற்கு மங்கல வழங்கு உள்ளது. பாரம்பரிய முறையில் குழந்தை பிறப்புக்கு உதவி செய்யும் செவிலித்தாய் தான் "சர்க்கரை வள்ளிக்கிழங்கை உடைத்துவிட்டதாக" தெரிவிப்பார். கடினமான சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி குழந்தையின் மென்மையான மண்டை ஓட்டை சேதப்படுத்திவிட்டதாக இது பொருள்படும்.

"இந்த விடயத்தில் பெற்றோருக்கு எந்த பொறுப்பும் கிடையாது" என்று தெரிவிக்கிற இந்த குழுவின் செயலர் அன்ஜெலின் நாலோக், "இந்த குழந்தை அழக்கூடிய அளவுக்கு கூட நீண்டகாலம் உயிர்வாழ்ந்திடக் கூடாது" என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது.

'குழந்தை' ரோபோக்களால் ஜப்பானில் சர்ச்சை

இப்போதெல்லம், 'டென் பிலவட் சிஸ்டர்ஸ்' அமைப்பினர் பிறக்கின்ற குழந்தைகளை எல்லாம் மருத்துவமனை செவிலித்தாய்களிடம் கொடுத்து விடுகின்றனர்.

மாறாக, கருத்தரித்துள்ள மற்றும் புதிய தாய்மார்களுக்கு அவர்கள் ஆதரவளிப்பதோடு, ஹெச்ஐவி தொற்று பற்றிய விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை YASUYOSHI CHIBA/AFP/Getty Images

தொடரும் அவலம்

ஆனால், மருத்துவமனைகளை சென்றடைவது கடினம் என்ற நிலையில், மிகவும் வெகுதொலைவில் இருக்கின்ற பகுதிகளில், பாரம்பரிய முறையில் குழந்தை பெற்றெடுக்க உதவுகின்ற செவிலித்தாய்மார் பழைய முறையிலேயே இன்னும் உதவி வருகின்றனர். இப்போதும் குழந்தைகளை கொன்றுவிடுவது நிகழ்வதாக 'டென் பிலவட் சிஸ்டர்ஸ்' அமைப்பினர் நம்புகின்றனர்.

ஒரு குழந்தை மூன்று பெற்றோர்

"இது ரகசியமாக நடைபெறுகிறது. முன்பை போல வெளிப்படையாக அல்ல" என்கிறார் அன்ஜெலின் நாலோக்.

பேசக்கூடாத தலைப்பு

"கலப்பு பாலின குழந்தைகள் என்ற இந்த தலைப்பு இன்னும் பேசக்கூடாததாக உள்ளது" என்று கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள கலப்புப் பாலின மக்களை சுற்றியுள்ள முத்திரையை குறைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற 'சேரிட்டி வாய்ஸஸ் ஆப் வெஸ்டன் கென்யா" அமைப்பின் செயல் இயக்குநர் ஜார்ஜினா அதியம்போ தெரிவிக்கிறார்.

"கலப்புப் பாலின மக்கள் உண்மையிலேயே யார் என்பதை நாங்கள் விளக்குகின்றோம். இதுவொரு மத நம்பிக்கை சார்ந்த சமூகம். எனவே, இத்தகைய கலப்புப் பாலின குழந்தைகளும் கடவுளின் படைப்புகளே என்று விளக்குகின்றோம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை CHARLOTTE EDEY

அணுகுமுறையில் மாற்றம்

இந்த தலைமுறை மருத்துவர்களில் ஒருவரும், பாலின வளர்ச்சியில் சீர்குலைவுகளை சிறப்பாக கையாள்பவருமான குழந்தை உட்சுரப்பியல் நிபுணர் ஜாய்ஸ் மபோகோ, "கலப்புப் பாலின மக்கள் மீதான அணுகுமறை மாறிவருகிறது" என்று குறிப்பிடுகிறார்.

"புதிய பெற்றோர் இதற்கான உதவியை தேடுகின்றனர். கிராமப்புறங்களிலும் இணைய வசதி உள்ளது. ஏதாவது தவறு என்று தெரியவந்தால், என்ன பிரச்சனை என்று அவர்களால் தேடி அறிந்துகொள்ள முடிகிறது."

42,000 அடி உயர விமானத்தில் பிரசவம் பார்த்த விமானக் குழு

இதற்கான சிகிச்சை முறை வேறுபடுகின்றன. சில நோயாளிகளுக்கு சிகிச்சையே தேவையில்லை. பலருக்கும் மருத்து எடுத்துகொள்வது அல்லது ஹார்மோன் சிகிச்சை மற்றும் சரிசெய்யும் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. பெரும்பாலும் இந்த குழந்தைகள் வயதுவரும் வரை சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன. அப்போது யாராக இருக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை ROBERTO SCHMIDTAFP/Getty Images

எனது குழந்தைகள், நான் அவர்களின் தாய்

ஸாய்நேப் இந்த கலப்புப் பாலின குழந்தைகளை தத்து எடுத்து நீண்டகாலம் கடந்துவிட்டது. அவர்கள் ஆரோக்கமானவர்களாக, மகிழ்சியாக உள்ளனர். அவர்களை பற்றி பேசுகிறபோது, ஸாய்நேப்பின் முகம் மலர்கிறது. அந்த குழந்தைகளுக்காகவும், தனக்குத்தானே அமைத்து கொண்ட வாழ்விலும் பெருமிதம் அடைபவராகவே தோன்றுகிறார்.

தேவைப்படும்போது, இப்போதும் குழந்தைகள் பிறப்புக்கு உதவியாளராக ஸாய்நேப் பணிபுரிகிறார். ஆனால், துணிகளையும், காலணிகளையும் வாங்கி விற்பதில்தான் தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான நிதி ஆதாரத்தை திரட்டி வருகிறார்.

ஒரு டென்னிஸ் வீராங்கனை தாயாகிறார்

"நாங்கள் நன்றாகவே சாப்பிடுகிறோம். சாதாரண குழந்தைகளைபோலவே அவர்களை நான் பார்க்கிறேன். என்னுடைய வீட்டு வேலைகளில் அவர்கள் உதவுகிறார்கள். என்னுடைய மகன், அவனுடைய குழந்தைகளை போல இவர்களை எண்ணுகிறார். அவர்கள் எல்லோரும் என்னுடைய குடும்பத்தினர். இது கடவுளின் அற்புதம்"

தான் எடுத்த முடிவுக்காக வருந்துகிறாரா? என்று கேட்டபோது, இதுவொரு கேலிக்குரிய கேள்வி என்பதுபோல அவர் சிரிக்கிறார். "நான் அவர்களை வெளியே அனுப்பிவிட வேண்டுமா? இல்லை. முடியாது. நான் அவர்களின் தாய். அவர்கள் மனிதர்கள். நான் கடவுளின் படைப்பை கவனித்து பராமரிக்க வேண்டும்" என்று உறுதியுடன் கூறுகிறார் ஸாய்நேப்

காணொளி: குழந்தை பராமரிப்பின் அங்கமாகும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குழந்தை பராமரிப்பின் அங்கமாகும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்