ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறக்கிறார் மக்ரோங்கின் மனைவி

ஃபிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான்வெல் மக்ரோங், மனைவியுடன் மேடையில் தோன்றியபோது "பிரிகெட்டி! பிரிகெட்டி! பிரிகெட்டி!" என்று மக்கள் முழங்கினார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

யார் இந்த பிரிகெட்டி?

வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான தம்பதியினர் மக்ரோங்-பிரிகெட்டி.

"பொதுவான, சாதாரண ஜோடி அல்ல நாங்கள்" என்று தனது திருமண நாளின்போது, அவரே தங்களைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தம்பதியின் வயது வித்தியாசத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தம்பதியின் வயது வித்தியாசத்திலும் ஒரு ஒற்றுமை உண்டு. 24 ஆண்டுகள் என்பதுதான் அது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , மெலினாவை விட 24 ஆண்டுகள் மூத்தவர், பிரான்சு அதிபரோ, மனைவியை விட 24 வயது இளையவர் என்பது தான் ஒரே வித்தியாசம்.

இமான்வெல் 15 வயது சிறுவனாக இருந்தபோது, புத்திசாலியாகவும், படுசுட்டியாகவும் இருப்பாராம். அமியென்ஸில், ஜெஸ்யூட் தனியார் பள்ளியில் மாணவராக இருந்தபோது, பிற பெரியவர்களுடன் சமமான நட்பை கொண்டிருந்ததாக சொல்கிறார், அவரது முன்னாள் நாடக ஆசிரியரும், இன்னாள் மனைவியுமான பிரிகெட்டி. அப்போதே அந்த புத்திசாலி மாணவனால் கவரப்பட்டேன் என்கிறார் அவர்.

அண்ட்ரே ஒளஜைர் என்ற வங்கியாளரை திருமணம் புரிந்து, மூன்று குழந்தைகளுக்கு தாயான பிரிகெட்டி ட்ரோங்னெக்ஸ், பிரபல சாக்லேட் நிறுவன குடும்ப வாரிசு ஆவார்.

தனது மகன் காதல்வயப்பட்டிருப்பது தெரிந்தாலும், காதலி யார் என்று தெரியாமல் இருந்த மக்ரோங்கின் பெற்றோருக்கு, அது பிரிகெட்டி என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. வேறு வழியில்லாத நிலையில் மக்ரோங்குக்கு 18 வயதாகும்வரை ஒதுங்கியிருக்குமாறு பிரிகெட்டியை கேட்டுக்கொண்டனர். மக்ரோங்குக்காக எந்த உறுதியும் அளிக்க தயாராக இருந்தேன் என்கிறார் பிரிகெட்டி.

சக மாணவியான லாரன்ஸ் ஒளஜைரின் மீது மக்ரோங்குக்கு காதல் இருக்கலாம் என்று பிறர் ஊகித்திருந்த நிலையில், மக்ரோங் காதலிப்பது அவரின் தாயார் பிரிகெட்டியை என்பது ஆச்சரியமாக இருந்தது என்று, மக்ரோங்கின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக்கியுள்ள அனே ஃபுல்டா குறிப்பிட்டுள்ளார்.

17 வயதாக இருந்தபோது, ஒருநாள் நாம் இருவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்வோம் என்று தனது காதலிக்கு வாக்களித்த மக்ரோங், 2007 இல் அந்த வாக்கை பூர்த்திசெய்தார்.

பிரிகெட்டி எனது மருமகள் என்பதைவிட சிறந்த தோழி என்று மக்ரோங்கின் தாயார் சொல்கிறார்.

மக்ரோங்கின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர், சக மாணவியாய் இருந்து மக்ரோங்குக்கு மகளான லாரன்ஸ் ஒளஜைரும், அவரது உடன்பிறப்பும், வழக்கறிஞருமான 32 வயது டிபைனும் அதிபர் தேர்தலுக்கான பாரீஸ் தேர்தல் பேரணியில் (இறுதி) முக்கிய பங்குவகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தபோது, குடும்பத்தினர் அனைவரும் ஒரே மேடையில் கூடி, வெற்றியை கொண்டாடினார்கள்.

இமான்வெல் மக்ரோங்குக்கு பிரிகெட்டியின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகளும், ஏழு பேரப்பிள்ளைகளும் பரிசாக கிடைத்தது.

மக்ரோங், பிரான்சின் பொருளாதார அமைச்சராக பதவியேற்றபோது, பிரிகெட்டி தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி, கணவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாறினார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

படத்தின் காப்புரிமை AFP

அரசியலில் பெண்களுக்கு உரிய பங்களிப்பு தரவேண்டும் என்ற கருத்தை மக்ரோங்கிற்கு ஏற்படுத்தியதற்காக பிரிகெட்டி பாராட்டப்படுகிறார். ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், "என் மார்சே" என்ற மக்ரோங்கின் புதிய இயக்கம், தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களில் பாதி பேர் பெண்களாக இருப்பார்கள் என்று மக்ரோங் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதல் பெண்மணியின் பங்கை முறைப்படுத்த விரும்புவதாக ஒரு பேட்டியில் கூறிய மக்ரோங், "நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மன்னிக்கவும், நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கும் முக்கியமான பொறுப்பும், இடமும் உறுதியானது" என்றும் குறிப்பிட்டார்.

"முதல் பெண்மணியின் பொறுப்புக்கு சம்பளம் கிடையாது, அவர் அந்த பதவிக்கு மதிப்பை ஏற்படுத்துவார், குரல் கொடுப்பார், விஷயங்களின் மேல் கருத்து கொண்டிருப்பார், எனது பக்கத்தில் எப்போதுமே இருந்தாலும், பொதுத்தளத்திலும் பங்காற்றுவார்" என இமான்வெல் மக்ரோங் கூறுகிறார்.

மாணவரான மக்ரோங், பிரிகெட்டியிடம் இருந்து அறிவுரைகளை கேட்பது போன்ற கார்ட்டூன்கள் இப்போது பிரான்சில் பிரபலமாகியிருக்கிறது. அதிபர் தேர்தலில் மக்ரோங்குடன் இறுதிச்சுற்று போட்டியில் இருந்த மரைன் லெ பென் மிகவும் ஜாக்கிரதையாக மக்ரோங்-பிரிகெட்டியின் உறவின் தோற்றம் குறித்து கிண்டலடித்திருந்தார்.

"மக்ரோங்… ஆசிரியர்-மாணவர் விளையாட்டை என்னுடன் விளையாட நீ முயல்வது தெரிகிறது. ஆனால், அது எனக்கு ஒத்துவராது" என்று ஏளனப் புன்னகையுடன் கூறியிருந்தார் மரைன் லெ பென்.

திருமதி மக்ரோங் தனது கணவருடனான வயது வித்தியாசம் குறித்த பிறரின் விமர்சனத்தை புன்னகையுடன் எதிர்கொள்கிறார். ஒரு புத்தகத்தில் அவர் என்ன குறிப்பிட்டிருக்கிறார் தெரியுமா? "2017 தேர்தலை மக்ரோங் சந்திக்க வேண்டும். ஏனென்றால், 2022-இல் எனது முகத்தோற்றமே அவருக்கு சவாலாக இருக்கும்".

இது தொடர்பான பிற செய்திகள்:

அதிபர் தேர்தலில் மக்ரோங் வெற்றியின் 5 ரகசியங்கள்

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்

பிற முக்கிய செய்திகள்:

திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்

அமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்