இந்திய அதிகாரிகள் தன் மனைவியை கடத்தியதாக குற்றம் சாட்டும் பாகிஸ்தான் பிரஜை

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டவர், தனது இளம் மனைவியை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கடத்திவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை इमेज कॉपीरइटMUHAMMAD TAHIR
Image caption மருத்துவர் உஜ்மா

மே மாதம் மூன்றாம் தேதியன்று, பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வாவில் மொஹம்மத் தாஹீருக்கும், புதுதில்லியில் வசிக்கும் மருத்துவர் உஜ்மாவுக்கும் திருமணம் நடந்தது.

மலேஷியாவில்தான் உஜ்மாவை சந்தித்ததாக சொல்லும் தாஹீர், திருமணம் செய்துக் கொள்ள முடிவு எடுத்த நிலையில், இந்திய-பாகிஸ்தான் எல்லை வழியாக மே மாதம் முதல் தேதியன்று உஜ்மா பாகிஸ்தான் வந்ததாக சொல்கிறார்.

இந்திய தூதரகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் விசா கிடைப்பதற்கான உதவிகளை செய்வார்கள் என்று மனைவியின் சகோதரர் தொலைபேசியில் கூறியதை நம்பி இஸ்லாமாபாதில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தானும், மனைவியுடன் சென்றதாக தாஹீர் அலி சொல்கிறார்.

தன் மனைவி மட்டும் தூதரகத்திற்குள் சென்ற நிலையில், நான்கு மணி நேர காத்திருப்புக்கு பிறகு தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, மனைவியோ, அவரது கைப்பேசியோ அங்கில்லை என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டதாக கூறும் தாஹீர் அதன் பிறகு காவல்துறையில் புகார் அளித்ததாக சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை MUHAMMAD TAHIR

தூதரக அதிகாரிகள் தொடர்பான விவகாரம் என்பதால், இந்தப் புகார் குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, வெளியுறவு அமைச்சகத்திற்கு புகார் அனுப்பப்பட்டது, பிறகு அதன் சட்டப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

மருத்துவர் உஜ்மா, இந்திய தூதரகத்தில் இல்லை என்று தங்களிடம் கூறப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜக்ரியா உள்ளூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். புகார் குறித்த நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், உஜ்மா சுயவிருப்பத்துடன் இந்திய தூதரகத்திலிருப்பதாகவும், மே எட்டாம் தேதியன்று பாஸ்போர்ட்டுடன் தன்னை இந்தியத் தூதரகத்திற்கு அதிகாரிகள் வரச்சொன்னதாக தாஹீர் கூறினார். இருவரும் சந்தித்துப் பேசிய பிறகு, பாகிஸ்தானில் இருப்பதா, இந்தியாவிற்கு செல்வதா என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியதாக தாஹீர் தெரிவித்தார்.

தூதரக அதிகாரிகளின் அணுகுமுறையால் வருத்தம் அடைந்திருக்கும் தான், இனி இந்தியா செல்லப்போவதில்லை என்றும் உறுதியாக சொல்கிறார் தாஹிர்.

படத்தின் காப்புரிமை इमेज कॉपीरइटMUHAMMAD TAHIR
Image caption மே 3-ஆம் தேதியன்று, பாகிஸ்தானின் மொஹம்மத் தாஹீருக்கும், புதுதில்லியில் வசிக்கும் மருத்துவர் உஜ்மாவுக்கும் திருமணம் நடந்தது

மனைவியை சந்திக்க தாஹீர் இந்தியத் தூதரகம் சென்றால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் காவல்துறை கூறுகிறது.

ஆனால் எந்தவொரு விசயத்திற்கும் மற்றொரு பக்கம் இருக்கிறது.

உண்மையில் நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கணவருடன் வாழ முடியாது என்று கூறும் இந்தியர் உஜ்மா, கணவன் வீட்டார் தன்னை அடித்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

கணவர் மொஹம்மத் தாஹிர் அலி மற்றும் அவரின் உறவினர்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாக இஸ்லாமாபாதில் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் முறையிட்ட உஜ்மா, துப்பாக்கி முனையில் தனக்கு கட்டாயத் திருமணம் நடந்ததாகவும் கூறியிருக்கிறார்.

உறவினர்களை சந்திப்பதற்காகவே தான் பாகிஸ்தான் வந்ததாகவும், மொஹம்மத் தாஹீரை திருமணம் செய்துக்கொள்வதற்காக அல்ல என்றும் சொல்கிறார் உஜ்மா. மேலும் தனது குடியேற்ற ஆவணங்களை கணவன் வீட்டார் பறித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் பாகிஸ்தானில் அவர் சந்திக்க வந்த உறவினர்கள் யார் என்பது வெளியாகவில்லை. தான் இந்தியா திரும்பச் செல்வது உறுதியாகும் வரையில், இந்திய தூதரகத்தில் இருந்து வெளியே வரபோவதில்லை என்றும் உஜ்மா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை TAHIR ALI

இதில் தலையை சுற்ற வைக்கும் விஷயம் என்னவென்றால், தாஹீர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறதாம், இது உஜ்மாவுக்கு தெரியும் என்று தாஹீரின் தந்தை நஜீர் சொல்கிறார்.

பாகிஸ்தான் விசாவிற்காக தகவல்கள் கொடுத்தபோது, உறவினர் என்று தன்னைத்தான் உஜ்மா கூறியிருப்பதாக தஹீரின் தந்தை நஜீர் ரஹ்மான் சொல்கிறார்.

தன் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றே, மகனும், மருமகளும் இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் சென்றதாக அவர் கூறுகிறார்.

மே மாதம் முதல் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்குள் பல நம்பமுடியாத சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பயணம், உறவினர் சந்திப்பு, சந்திக்கச் சென்ற உறவினர்கள் யார்? திருமணம் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்டதா? இந்தியத் தூதரக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவது சரியா? என விடை தெரியாத வினாக்களை கொண்ட பட்டியல் நீள்கிறது.

உண்மையில் நடந்தது என்ன? இதற்கான பதில், திரைக்கு பின் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவந்தால் தான் தெரியும்.

பிற முக்கிய செய்திகள்:

திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்

ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி?

அதிபர் தேர்தலில் மக்ரோங் வெற்றியின் 5 ரகசியங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்