பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர். இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் இந்து மதக் கும்பல் ஒன்றால் தன்னுடைய குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டதை கண்ணால் கண்டவர்.

15 ஆண்டுகாலம் நீதி கிடைக்க அவர் நடத்தி வந்த போராட்டத்திற்கு கடந்த வாரம் தான் பலன் கிடைத்திருக்கிறது. பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளாக 11 பேருக்கு ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

விசாரணை நீதிமன்ற விசாரணையில் முன்னதாக விடுவிக்கப்பட்டிருந்த 5 போலீஸார் மற்றும் 2 மருத்துவர்களும் சாட்சியங்களை அழித்துவிட்ட வகையில் இந்த நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியுள்ளது.

தீர்ப்பினால் மகிழ்ச்சி

"இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது" என்று டெல்லியில் பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த பில்கிஸ் பானுவுக்கு அமைதிக்கான நம்பிக்கையை இது வழங்கியிருக்கிறது.

குஜராத் கலவரம்: 31 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் குல்பர்க் சொசைட்டி கலவரங்களில் ஈடுபட்ட 24 பேர் குற்றவாளிகள் -- நீதிமன்றம் தீர்ப்பு

"நீதித்துறை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. இந்த தீர்ப்பை வழங்கிய மும்பை நீதிமன்றத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவொரு மிகவும் நல்ல தீர்ப்பு. இதனால் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பில்கிஸ் பானு தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாலியல் வல்லுறவிலும், கொள்ளையிலும் ஈடுபட முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தனர் என்பதால், மாநில அரசும், போலீஸூம் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளன என்று நான் எண்ணுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

போலீஸாருக்கும், மருத்துவர்களுக்கும் இந்த நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதால், உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். எனக்கு நீதி கிடைத்துள்ளது".

நீதிக்கான தனது போராட்டம் மிகவும் நீண்டதாவும், கெட்ட கனவாகவும் இருந்தது என்று கூறும் பில்கிஸ் பானு, முயற்சியை கைவிடுவது ஒரு தெரிவாக எப்போதும் அமையக்கூடாது என்கிறார்.

கோத்ரா ரெயில் எரிப்பு: தலைமறைவாக இருந்த சந்தேக நபர் கைது

குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் ; 11 பேருக்கு ஆயுள் தண்டனை

சில போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அவரை மிரட்ட முயன்றனர். சாட்சியங்களை அழித்துவிட்டனர். பிரோத பரிசோதனை இல்லாமல் இறந்தோரை அடக்கம் செய்துவிட்டனர். பில்கிஸ் பானுவை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று கூறினர். கொலை மிரட்டல்களும் அவருக்கு வந்தன.

பெருங்குற்றமாக இருந்தபோதிலும், அவர் தாக்குதல் தொடுத்தவரை அடையாளம் காட்டிய நிலையிலும், இந்த வழக்கின் முதல் கைது 2004 ஆம் ஆண்டு, இந்திய உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வு துறையான சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைத்த பின்னர்தான் நடைபெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் நீதிமன்றங்கள் அவருக்கு நீதி வழங்காது என்ற பில்கிஸ் பானுவின் முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றியது.

சீர்குலைந்த குடும்பம்

நீதிக்கான இந்த போராட்டம் பில்கிஸ் பானுவின் குடும்பத்திற்கு பெரும் சீர்குலைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த 15 ஆண்டுகளில், பானுவும், அவருடைய கணவர் யாகுப் ரசூலும் 10 முறை வீடு மாறிவிட்டனர். குஜராத்துக்கு உள்ளேயும், வெளியுமாக ஐந்து குழந்தைகளோடு வீடு மாறிமாறி கஷ்டப்பட்டனர்.

குஜராத் கலவரம்: 32 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

"நாங்கள் இன்னும் எங்களுடைய வீட்டுக்கு போக முடியாது. எங்களுக்கு பயமாக இருக்கிறது. போலீஸூம் அரசு நிர்வாகமும் எப்போதும் தாக்குதல் தொடுத்தோருக்கு தான் உதவியுள்ளன. நாங்கள் குஜராத்தில் இருக்கின்றபோது, முகங்களை மூடிகொண்டு போவதோடு, முகவரியை யாருக்கும் வழங்குவதில்லை" என்று ரசூல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின்போது நிகழ்ந்த மிகவும் மோசமான குற்றங்களில் பில்கிஸ் பானு மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஒன்றாகும். கோத்ரா நகரில் பயணியர் ரயில் ஒன்று தீ வைக்கப்பட்டதில் 60 இந்து புனிதப் பயணியர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரயிலுக்கு தீ வைத்த குற்றத்தை முஸ்லிம்களின் மீது சுமத்திவிட்டு இந்து மத கும்பல், முஸ்லிம்களின் சுற்றுப்புறங்களை தாக்கியும், உடைமைகளை சேதப்படுத்தியும் வன்முறை தாக்குதலில் ஈடுப்பட்டது.

அரசு நிர்வாகமும், போலிஸூம் கண்டுகொள்ளாத நிலையில், மூன்று நாட்கள் கலவரக்காரர்கள் எந்தவித தடையுமில்லாமல் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.

அப்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்த, தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது இந்த வன்முறையை தடுப்பதற்கு போதியளவு செயல்படவில்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது.

குஜராத் கலவரத்தில் முதல்வருக்கு எதிராக ஆதாரமில்லை

முதல்வர் மீது குற்றச்சாட்டு

தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று அவர் எப்போதும் மறுத்து வந்துள்ளார். இந்த கலவரம் நிகழ்ந்தற்கு அவர் மன்னிப்பும் கோரவில்லை.

போதிய சாட்சியங்கள் இல்லை என்று தெரிவித்து உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்றும் மோதியின் மீதான குற்றச்சாட்டை மறுத்துவிட்டது.

ஆனால், அவருடைய ஆட்சியின்போது நடைபெற்ற இந்த கொலைகளுக்கு அவரே பொறுப்பு என்ற கருத்தை பலர் கொண்டிருந்த நிலையில். இந்த விமர்சனத்தை முழுமையாக தவிர்த்துவிடும் வகையில் மோதியால் எதுவும் செய்ய இயலவில்லை.

இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக டஜன் கணக்கானோருக்கு ஆண்டு முழுவதும் நீதிமன்றங்கள் தண்டனை அளித்தன. 2012 ஆம் ஆண்டு மோதியின் ஆட்சியின் முன்னாள் அமைச்சரும், மோதியின் நண்பருமானவர் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால், பிறர் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கண்ணீரை வரவழைக்கும் கொடூரம்

15 ஆண்டுகளுக்கு பிறகு, அன்றைய கொடூரமான நிகழ்வை விவரித்தபோது பெருக்கெடுத்த கண்ணீரை அடக்க பில்கிஸ் பானு முற்படுகிறார்.

அவர் ரான்திக்பூர் கிராமத்தில் வாழ்ந்து வந்த தன்னுடைய பெற்றோரை சந்திக்க வந்திருந்தார். இந்த கிராமம் கோத்ராவில் இருந்து வெகுதொலைவில் இல்லை.

அப்போது 19 வயதாக இருந்த அவர் 3 வயது குழந்தைக்கு தாயாகவும், இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி இருந்தார்.

"அப்போது ரயில் தீ வைக்கப்பட்ட பின்னர் காலை நேரம். நான் சமையலறையில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய அத்தையும், அவருடைய குழந்தைகளும் ஓடி வந்தனர். அவர்களுடைய வீடுகள் தீ வைத்து கொளுத்தப்படுவதாகவும், உடனடியாக இவ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டும்" என்றும் அவர்கள் கூறினர்.

"உடுத்தியிருந்த துணிகளோடு உடனடியாக கிளம்பினோம். எங்களுடைய செருப்புகளை அணிந்துகொள்ள கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை".

சில நிமிடங்களில், சுற்றுப்புறங்களிலுள்ள எல்லா முஸ்லிம்களின் வீடுகளும் வெறுமையாகிவிட்டன. சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றுவிட்டன.

தன்னுடைய மூன்று வயது மகள், தாய், கர்ப்பிணி உறவினர், அவருடைய இளையோர், உடன் பிறந்தவர் மகன்கள் மற்றும் மகள்கள், வயது வந்த ஆண்கள் இருவர் என மொத்தம் 17 பேர் குழுவில் பில்கிஸ் பானு இருந்தார்.

அடைக்கலம் தேடி

"பாதுகாப்பு அளிக்ககி கோரி முதலில் இந்து மதத்தை சேர்ந்த கிராம கவுன்சில் தலைவரிடம் சென்றோம். ஆனால், முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவரையும் கொலை செய்வதாக அந்த கும்பல் மிரட்டியதால். நாங்கள் அவ்விடத்தைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று".

அடுத்த சில நாட்கள், இந்த 17 பேர் குழு, மசூதி, அல்லது இந்த மதத்தவரின் இரக்கத்தால் வாழ்வதற்காக கிராமம் கிராமமாக பயணித்து அடைக்கலம் தேடியது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் நேரங்கடந்துவிட்டது. மார்ச் 3ஆம் நாள் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் எண்ணிய அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு புறப்பட தயாரானபோது, இரண்டு ஜீப்புகளில் வந்த குழுவினர், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அரங்கேறிய கொடூரம்

"அவர்கள் எங்களை வாளாலும், தடியாலும் தாக்கினர். என்னுடைய மடியில் இருந்து எனது மகளை பறித்து கொண்ட ஒருவர், ஒரு கல்லில் நன்றாக மோதும்படியாக தரையில் வீசி எறிந்தார்".

பில்கிஸ் பானுவின் கைகளிலும், கால்களிலும் வெட்டுகாயங்கள்.. அவர்களை தாக்கியோர் சிறு வயதில் அவர் வளருகின்றபோதே ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் பார்த்து வளர்ந்த கிரமத்திலுள்ள அண்டைவீட்டுக்காரர்கள்தான்.

அவருடைய ஆடைகளை கிழித்தெறிந்து, அவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்.

தான் ஐந்து மாத கர்ப்பிணி என்றும், இரக்கம் காட்டுமாறும் பில்கிஸ் பானு அவர்களிடம் மன்றாடினார். அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது.

தாங்கள் பாதுகாப்பான இடத்தை தேடி செல்கிறபோது, இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றேடுத்த இவருடைய உறவினரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இரண்டு நாள் பச்சிளம் குழந்தையும் கொல்லப்பட்டது.

பில்கிஸ் பானு சுயநினைவிழந்து போனதால், அவர் இறந்துவிட்டார் என்று நம்பி தாக்குதலாளர்கள் சென்றுவிட்டதால், இவர் பிழைத்துகொண்டார். ஏழு மற்றும் நான்கு வயது இரு சிறுவர்கள் மட்டுமே இந்த படுகொலையில் இருந்து தப்பித்தவர்கள்.

மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி கைது

சுயநினைவுக்கு வந்தபோது, ரத்தம் தோய்ந்த தன்னுடைய உடலை உள்ளாடையால் மூடிக்கொண்டு பக்கத்திலுள்ள குன்றில் ஏறி, ஒரு குகையில் ஒருநாள் மறைந்து இருந்தார்.

"அடுத்த நாள், தாகம் எடுத்ததால், கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று பார்க்க பக்கத்திலுள்ள பழங்குடியின கிராமத்திற்கு கீழிறங்கி வந்தார்.

முதலில் என்னை கண்டு சந்தேகமாக பார்த்த அந்த கிராமத்தினர் தடிகளோடு வந்தனர். ஆனால், பின்னர் அவர்கள் எனக்கு உதவினர். என்னுடைய உடலை மூடிக்கொள்ள பிளவுஸ் மற்றும் துப்பட்டா ஒன்றையும் வழங்கினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

குற்றவாளிகளுக்கு துணைபோன போலீஸார்

ஒரு போலீஸ் ஜீப்பை பானு கண்டார். அவர்கள் பானுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தனக்கு நேர்ந்த அவலம் அனைத்தையும் போலீஸிடம் பானு விளக்கினார்.

"நான் படிக்காதவர். அவர்கள் எழுதிய புகாரை வாசித்து காட்ட கேட்டுகொண்டதை அவர்கள் மறுத்துவிட்டனர். என்னுடைய கைரேகையை வாங்கிகொண்ட அவர்கள், தாங்கள் நினைத்ததை எல்லாம் அதில் எழுதி கொண்டனர். எங்களை தாக்கிய அனைவரையும் எனக்கு தெரியும். பெயர்களை சொல்லி புகார் எழுத சொன்னேன். ஆனால், அந்த பெயரில் ஒன்றைகூட அவர்கள் புகாரில் சேர்க்கவில்லை" என்று அவர் கூறினார்.

அடுத்த நாள் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்காக கோத்ராவில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு வைத்து 15 நாட்களுக்கு பின்னர் அவருடைய கணவர் அவரோடு சேர்ந்துகொண்டார். அங்கு அடுத்த நான்கு மாதங்களை கழித்தனர்.

அவருடைய வயிற்றில் இருந்த குழந்தை இந்த பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதல்களிலும் தப்பித்து கொண்டது. பின்னர் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

பழிவாங்குவதில் நம்பிக்கையில்லை

இந்த 15 ஆண்டுகளும் மிகவும் கடினமாக இருந்தன. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்த கஷ்டத்திற்கு முடிவு கட்டியுள்ளதாக இந்த தம்பதியர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக, பில்கிஸ் பானுவின் வழக்கிற்கும், 2012 ஆம் ஆண்டு டெல்லியில் 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கிற்கும் ஒப்புமைகள் வெளியாகி வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை SEBASTIAN D'SOUZA/AFP/Getty Images

பில்கிஸ் பானுவின் வழக்கில் தீர்ப்பு அளித்த அடுத்தநாள், உச்ச நீதிமன்றம் டெல்லி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நால்வருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தது.

பில்கிஸ் பானு வழக்கில் இந்த குற்றவாளிகளுக்கு ஏன் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டிருந்தனர்.

ஆனால், பழிக்கு பழி வாங்குவதில் நம்பிக்கை இல்லை என்கிறார் பில்கிஸ் பானு.

"இரண்டு குற்றங்களும் மிகவும் கொடூரமானவை. யாருடைய உயிரையும் எடுத்துகொள்வதில் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதையும் விரும்பவில்லை" என்று பில்கிஸ் பானு கூறியுள்ளார்.

"அவர்கள் தங்களின் முழு வாழ்க்கையையும் சிறையில் கழிப்பதையே விரும்புகிறேன். சிறுவர்களை கொல்வது, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தின் கொடூரத்தை அவர்கள் ஒருநாள் உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்".

"பழிவாங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. தாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறேன்".

இதையும் படிக்கலாம்:

உள்ளாடைக்கும் அனுமதி மறுப்பு? நீட் தேர்வில் கிளம்பிய சர்ச்சை!

மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி

இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன?

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்