”வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கிம் ஜாங்-உன்னின் சித்த பிரமையே காரணம்”

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக, வட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியாவில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள சில நாட்களில் நடைபெற்றுள்ள இந்த ஏவுகணை சோதனை, தென் கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்று எபிசி நியூஸிடம் அவர் கூறியுள்ளார்.

வட கொரியா தொடர்பான விடயங்களில் அமெரிக்கா தன்னுடைய கடும் அணுகுமுறையை தொடரும் என்று ஹேலி தெரிவித்திருக்கிறார்.

குசொங்கின் வட மேற்குப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வட கொரியாவோடு ஆழமான நட்புறவு கொள்ள விரும்புகிற தென் கொரியாவின் புதிய அதிபராக பொறுப்போற்றுள்ள மூன் ஜயே-இன் இந்த ஏவுகணை சோதனையை "பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்" என்று விம்ர்சித்துள்ளார்..

கட்டுப்பாட்டுடன் இருக்க சீனா வலியுறுத்தியுள்ள நிலையில், வட கொரியாவுக்கு எதிராக "வலுவான தடைகளை" விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயார்

"சந்திப்பு கிடையாது"

வட கொரியாவின் ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகள் அவையால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வட கொரியா நடத்தியுள்ள தொடர் ஏவுகணை சோதனைகள், உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவோடு பதட்ட நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மாதம் நடைபெற்ற இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணை ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் ராக்கெட்கள் வெடித்து சிதறியதால் சோதனை தோல்வியில் முடிந்தது.

கிம் ஜாங்-உன்னை நல்லதொரு சூழ்நிலையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்த பின்னர், சூழ்நிலைகள் நல்லதாக அமைந்தால் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று வட கொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இத்தகைய சந்திப்புக்களை உருவாக்குவதற்கு ஏவுகணைகளை அனுப்புவது சரியான வழியாக இருக்காது என்று தெரிவித்திருக்கும் ஹேலி, எம்முடைய நிபந்தனைகளை ஏற்காத வரை அவரோடு நாங்கள் சந்திக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

புதிய வகை ஏவுகணையா?

இந்த ஏவுகணை எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் சோதனை செய்த ஏவுகணைகளை விட அதிக தொலைவு சென்று தாக்கக்கூடியதாக இருக்கலாம் என்பதை இந்த ஏவுகணை சோதனை காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானிய கடலில் விழுவதற்கு முன்னால், இந்த ஏவுகணை ஏறக்குயை 30 நிமிடங்கள் பறந்தது. எனவே புதிய வகை ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஏவுகணை 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவையும், 2 ஆயிரம் கிலோமீட்டருக்கு (1,245 மைல்) அதிகமான உயரத்தையும் அடைந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வட கொரியா ஏவிய இடைநிலை தொலைவு தாக்கும் ஏவுகணையை விட இது அதிக சக்தி வாய்ந்ததாகும் என்று அமைச்சர் டோமோமி ஐனாடா கூறியிருக்கிறார்.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகள், பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் உயரத்தை தொடுகின்ற சக்தியுடையவை.

இவ்வளவு உயரம் சென்றுள்ளதற்கு ராய்டஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிற நிபுணர்கள், பாய்ந்து தாக்கும் தொலைவை குறைத்து, உயரமான இடத்திலிருந்து இது ஏவப்பட்டிருக்கலாம். இதன் தாக்குதல் தொலைவு குறைந்தது 4 ஆயிரம் கிலோமீட்டராக இ.ருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வகையான ஏவுகணை பற்றி ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், இதனுடைய பறத்தல் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகனைகளின் சக்திக்கு இணையானதாக இல்லை. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகள் 6 ஆயிரம் கிலோமிட்ருக்கு மேலான தொலைவில் இருக்கும் அமெரிக்க பெருநிலப்பகுதியை தாக்கும் சக்தியுடையவை என்று அமெரிக்க பசிபிக் கட்டளையகம் தெரிவித்திருக்கிறது.

வட கொரியா இரண்டு வகையான கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை வடிவமைத்து வருவதாக நம்பப்படுகிறது. ஆனால், அத்தகைய எந்த வகையும் இன்னும் சோதிக்கப்படவில்லை.

பதில் நடவடிக்கை

இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து, தன்னுடைய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் ஒன்றை தென் கொரியாவின் அதிபர் மூன் ஐயே-இன் கூட்டியுள்ளார்.

வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா தயாராக உள்ளது. ஆனால், அதற்கு வட கொரியா தன்னுடைய அணுகுமுறையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளையில், சீனாவில் முக்கியமானதொரு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தென் கொரிய ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர், வட கொரிய பிரதிநிதிகளிடம் நேரடியாக இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஏவுகணை சோதனையால் கவலையடைந்துள்ளதாக கிரம்ளின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

வட கொரியாவின் ஒரேயொரு கூட்டாளியாக இருக்கின்ற சீனா, இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

வடகொரியாவுக்கு பதிலடி எப்படி?: தீவிர ஆலோசனையில் அமெரிக்கா - சீனா

இதையும் படிக்கலாம் :

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை

மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்

'நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது' : பாரீஸ் ஜாக்சன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்