பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தப்படும் வரை ஆணாக நடித்த பெண்

  • 16 மே 2017

வைரத்தை விட ஆயிரம் மடங்கு அரிதானதாக கருதப்படும் விலைமதிப்பற்ற ரத்தினக்கற்களின் மூலம் தனது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைத் பெற்றவர் பிளி ஹுசைன். ஆனால் பெண்ணான அவர் சுரங்கத்திற்குள் அனுமதிக்கப்படாததால் சுமார் பத்தாண்டுகள் ஆணைப்போல நடித்து வேலை செய்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை UN WOMEN/DEEPIKA NATH
Image caption பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தப்படும் வரை ஆணாக நடித்த பெண்

தான்சானியாவில் கால்நடை பரமரிப்பாளர் குடும்பத்தில் பிறந்த பிளி ஹூசைனின் அப்பாவிற்கு ஆறு மனைவிகள், 38 குழந்தைகள். பெரிய குடும்பத்தை சேர்ந்த பிளி ஹூசைன் தனது வாழ்க்கையை பற்றிச் சொல்கிறார்:

"என் அப்பா என்னை ஓர் ஆணைப் போலவே நடத்தினார். கால்நடைகள் பராமரிக்கும் வேலையில் சிறிய வயதில் இருந்தே ஈடுபடுத்தப்பட்டேன், எனக்கு அந்த வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை".

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மாறும் என்று கனவும் பகல் கனவாய் பொய்த்துப்போனது. மோசமான கணவனால் திருமண வாழ்வும் சோகம் நிரம்பியதாகவே இருந்தது. தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய கணவனை விட்டு தனது 31 வது வயதில் பிரிந்தார் பிளி.

வாழ்க்கையை நடத்த வேலை தேடத் தொடங்கினார். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. வைரத்தை விட மிகவும் விலை உயர்ந்த ரத்தினக்கல்லான நீல நிற தன்சானைட் (Tanzanite) தான்சானியாவில் மட்டும் தான் கிடைக்கும். ஆப்பிரிக்காவின் உயரிய மலையான கிளிமாஞ்சாரோவின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நகரான மெரெரானி வரை அவரது வேலை தேடும் படலம் தொடர்ந்தது. அங்கு இருந்ததோ சுரங்கத் தொழில் மட்டும் தான்.

"சுரங்கப்பகுதிகளில் பெண்கள் வேலை செய்வது கடினம் என்பதால் அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. நான் கல்வியறிவு இல்லாதவள், எனக்கு வேலை கிடைக்க வேறு எந்த எந்த வாய்ப்பும் இல்லை," என்று பிளி ஹுசைன் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுரங்கப்பகுதிகளில் வேலை செய்ய பெண்களுக்கு அனுமதி இல்லை

அவர் மேலும் கூறுகையில், "வேறு வழியில்லாமல், தைரியப்படுத்திக்கொண்டு, கடுமையான வேலையை எதிர்கொள்ள ஆணாக மாறினேன். ஆணைப் போல் உடையணிந்து பெயரை ஹுசைன் என்று மாற்றிக்கொண்டேன்" என குறிப்பிட்டார்.

"அங்கிள் ஹுசைன் என்று தான் என்னை அழைப்பார்கள். இப்போது நான் பெண் என்ற ரகசியம் வெளிப்பட்ட பிறகு கூட இங்குள்ளவர்களால் அங்கிள் ஹுசைன் என்றே அழைக்கப்படுகிறேன்" என்று பிளி ஹுசைன் கூறுகிறார்.

நிலப்பரப்பில் இருந்து பல நூறு மீட்டர் ஆழத்தில் இருக்கும் வெப்பமான, இருட்டான, இறுக்கமான அழுக்கான சுரங்கத்தில், நாளொன்றுக்கு 10-12 மணி நேரம் வேலை செய்யவேண்டும். தன்சானைட் (Tanzanite) என்ற ரத்தினக் கல்லைப் பெறுவதற்காக கிராஃபைட் பாறைகளை தோண்டியெடுப்பது, உடைப்பது, சலித்தெடுப்பது போன்ற கடிமான வேலைகளைச் செய்யவேண்டும்.

"சுரங்கத்தில் 600 மீட்டர் ஆழம் வரை செல்லவேண்டியிருக்கும். பிற ஆண்களை விட நான் தைரியமாக இந்த வேலைகளை செய்வேன். ஓர் ஆண் செய்யும் அளவு கடினமான உழைத்தேன், பெண் என்ற சந்தேகமே என் மீது எழாத வகையில் நடந்துக்கொண்டேன்" என்கிறார் பிளி ஹூசைன்.

ஒரு கொரில்லாவைப் போல தான் நடந்துகொண்டதாக சொல்லும் பிளி, "நான் சண்டைபோடுவேன், பேசும் வார்த்தைகள் மோசமாகிவிட்டன, ஒரு பெரிய கத்தி எடுத்து போர்வீரன் போல் சண்டையிடுவேன். நான் ஒரு பெண் என்று யாராலுமே நினைத்துக்கூடபார்க்கவில்லை" என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'தன்சானைட்' ரத்தினக் கல்லைப் பெற பாறைகளை தோண்டியெடுப்பது, உடைப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்யவேண்டும்

ஒரு சில ஆண்டுகளில், இரண்டு விலை உயர்ந்த தன்சானைட் (Tanzanite) ரத்தினக் கற்கள் கிடைத்ததும், பிளி செல்வந்தராகிவிட்டார். பெற்றோருக்காகவும், தனது இரட்டைச் சகோதரிக்காகவும் வீடுகளை கட்டிக் கொடுத்தார். சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் புதிய கருவிகளை வாங்கி, பல சுரங்கத் தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்தார்.

எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது, ஆனால் பிளி பெண் என்பது அம்பலமாகும் சூழ்நிலையும் வந்தது. சுரங்கப் பணியில் ஈடுபட்டவர்கள் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உள்ளூர் பெண் ஒருவர் புகாரளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பிளி ஹூசைனும் ஒருவர்!

"காவல்துறையினர் என்னையும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்," என்கிறார் பிளி.

இந்த சூழ்நிலையில் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவது தவிர வேறு வழி எதுவும் அவர் முன் இல்லாமல் போய்விட்டது.

உண்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டாலும். அவரின் சக தொழிலாளிகளுக்கு அதை நம்பவே முடியவில்லை. நான் பெண் என்று சொன்னதை காவல்துறையினர் கூட முதலில் நம்பவில்லை. 2001 ஆம் ஆண்டு எனக்கு திருமணமாகி, குடும்பம் நடத்தத் தொடங்கியதற்கு பிறகுதான், நான் பெண் என்பதை அனைவரும் நம்பினார்கள்.

படத்தின் காப்புரிமை UN WOMEN/DEEPIKA NATH

ஓர் ஆணாக பார்த்த சமூகத்தில், அவரை திருமணம் செய்ய ஆண் ஒருவர் முன்வருவது சாத்தியமா? சாதாரணமாக சாத்தியமாகாத அசாதரண சம்பவங்கள் எல்லாம் பிளிக்கு சாத்தியமானது.

நான் உண்மையிலேயே பெண் தானா என்ற கேள்வி என் கணவரின் மனதிலும் இருந்தது என்று சொல்லும் பிளி, "என்னிடம் நெருங்குவதற்கு அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது" என்பதையும் வெளிப்படையாகவே சொல்கிறார்.

வெற்றிகரமாக தொழிலை அமைத்துக்கொண்ட பிளி, 70 தொழிலாளிகள் கொண்ட ஒரு சுரங்க நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்துவிட்டார். அதில் மூன்று பேர் பெண்கள் என்றாலும், அவர்களின் வேலை சமைப்பதுதான், சுரங்க வேலை அல்ல. தான் இந்தத் தொழிலில் தான் ஈடுபட்டபோது இருந்ததை விட இப்போது இந்தத் துறையில் பெண்கள் அதிகமாகிவிட்டாலும், இன்றும் அவர்களின் எண்ணிக்கை சொற்பம் தான் என்று பிளி கூறுகிறார்.

"கற்களை சுத்தப்படுத்துவது, தரகர்கள், சமையல் வேலை போன்ற தொழில்களில் சில பெண்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சுரங்கத்திற்குள் சென்று யாரும் வேலை செய்வதில்ல்லை, அங்கு சென்று, நான் செய்த்தைப் போன்ற வேலைகளை செய்வது என்பது சுலபமனதல்ல". என்று பிளி சுட்டிக்காட்டுகிறார்.

பிளி தனது கடின உழைப்பினால் அடைந்த வெற்றியால் தனது உடன் பிறந்தவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு கல்வியளிக்கிறார். ஆனால், தனது சொந்த மகளே தனது வழியை பின்பற்றுவதை பிளி விரும்பவில்லை.

"என்னுடைய கடின உழைப்பு, அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்தது என பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருந்தாலும், அது சுலபமானதில்லை, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும், வேறு யாரும் அதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடாது " என்கிறார் சுரங்கப் பெண்மணி பிளி.

"என் மகள் பள்ளிக்கு போய் கல்வி கற்கட்டும், அதன்பிறகு வாழ்க்கையில் அவள் விரும்பும் எந்த வேலையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும், ஆனால் எனக்கு கிடைத்ததைப் போன்ற அனுபவங்களை அவள் எதிர்கொள்ளவேண்டாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம் :

உங்கள் கணினி `சைபர்' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா?

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது இந்திய சிறுமி கருக்கலைப்பு மனு

ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்தாரா டிரம்ப்?

அரசியலில் ஈடுபடுவாரா? ரஜினிகாந்த் சூசகம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்