காட்டுப் பன்றியின் திடீர் சந்திப்பால் திணறிப்போன பிரிட்டன் தூதரின் `திகில்’ அனுபவம்

தூதர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்வது சகஜமானதுதான், இருந்தாலும், அரசியல்ரீதியான, ராஜாங்கரீதியான சிக்கல்களைத்தான் அவர்கள் வழக்கமாக எதிர்கொள்வார்கள். கோபமுற்ற காட்டுப் பன்றியை எதிர்கொள்வது என்பது இதுவரை கேள்விப்படாத சம்பவம்.

படத்தின் காப்புரிமை SHUTTERSTOCK

ஆஸ்திரியாவில் உள்ள பிரிட்டன் தூதர் லீ டர்னர், தன்னை நோக்கி மிகுந்த வேகத்தோடு வந்த ஒரு மிருகத்தின் சப்தத்தைக் கேட்டு, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார்.

ஆனால், தன்முன் நிற்பது மூர்க்கத்தனமான காட்டுப்பன்றி என்று தெரிந்ததும் அவர் முன் இருந்தது ஒரே ஒரு வாய்ப்பு ஓட்டமெடுப்பதுதான்.. ஒரு மரக்கிளை கிடைக்கும் வரை அவர் ஓடினார்.

"பன்றி தாக்கிய முன் அனுபவம் இல்லாத நிலையில், என் முன் இருந்த ஒரே வாய்ப்பு ஓடுவது தான்" என்று தனது வியன்னா பூங்கா அனுபவம் குறித்து, வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் ஒரு வலைப்பதிவில் லீ டர்னர் எழுதியிருக்கிறார்.

அவர் அந்த வலைப்பதிவில் எழுதியுள்ளபடி, சம்பவ தினத்தன்று அவர் தனது தினசரி வேலைகளை முடித்துக் கொண்டு, பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். மழை பெய்திருந்ததால், வழக்கமாக வருபவர்களைத் தவிர பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லை.

கடந்த ஆண்டு ஆஸ்திரியாவில் தூதராக பதவி ஏற்றுக்கொண்ட லீ டர்னர் பூங்காவில் நடந்துக் கொண்டிருந்தபோது, சுமார் 100 மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றி கூட்டம் ஒன்று பாதையை கடந்து, காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததை பார்த்தார், அற்புதமான காட்சி என்று வியந்தார்.

"ஜெர்மனியில் ஒன்பது ஆண்டுகளும், ஆஸ்திரியாவில் நான்கு ஆண்டுகளும் இருந்திருந்தாலும், இவ்வளவு அருகில் காட்டுப் பன்றிகளை பார்த்ததே இல்லை" என்று டர்னர் கூறுகிறார்.

பன்றிகளின் முதல் தரிசனம் மகிழ்ச்சியளித்தாலும், சற்று நேரத்தில் கிடைத்த இரண்டாவது காட்டுப் பன்றி கூட்டத்தின் தரிசனம் சிராய்ப்பையும், காயத்தையும் கொடுத்தது துரதிருஷ்டவசம்தான்.

படத்தின் காப்புரிமை FCO/LEIGH TURNER
Image caption தன் கையில் உள்ள காயத்தை காண்பிக்கிறார் டர்னர்

காட்டை நோக்கி நடக்கலாம் என்று முடிவு செய்து முன்னேறிய டர்னர், காட்டுப் பன்றிகளின் இரண்டாவது கூட்டத்தை பார்த்தார். அவற்றின் கவனத்தை திருப்பவேண்டாம் என்று நினைத்து, வந்த வழியிலேயே திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்கினார்.

தங்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்ற அவரது நல்ல எண்ணம் ஒரு பன்றிக்கு புரியவில்லை.

"சில நொடிகளில் என் பின்னே குதிரை கனைக்கும் சப்தம் கேட்டது, திரும்பிப் பார்த்த நான் திடுக்கிட்டுப் போனேன், ஒரு பெரிய காட்டுப் பன்றி, தலையை சாய்த்து, என்னை தாக்குவதற்கு தயாராக நின்றது" என்று கூறியுள்ளார் டர்னர்.

"என்னை விட அது மிகவும் வேகமாக ஓடும் என்பது தெரியும், ஆனால் என்னால் ஓடுவதைத் தவிர என்ன செய்ய முடியும்?" என டர்னர் வினவினார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கோப்புப் படம்

அங்கிருந்த தாழ்வான கிளையின் மூலமாக அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. பன்றியை விட மனிதனால் வேகமாக மரம் ஏற முடியும் என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.

"மரக்கிளையில் ஏற முயற்சித்தேன், ஈர மரம், வழுக்கியது, சிராய்த்தது, காயத்தை ஏற்படுத்தியது. ஆனால் நான் பத்திரமாக இருந்தேன்," என்று நினைவுகூர்கிறார் டார்னர். "பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பன்றி இருக்கும் இடத்தைப் பார்த்தேன், அது வேகமாக நடந்து சென்று தனது கூட்டத்துடன் இணைந்து காட்டை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது " என டர்னர் தெரிவித்தார்

அதிர்ஷ்டவசமாக, மரத்தில் ஏறும்போது ஏற்பட்ட சொற்ப சிராய்ப்புகளுடன் டர்னர் தப்பித்துவிட்டார், பன்றியுடன் மோதியிருந்தால் அவர் நிலைமை என்ன ஆகியிருக்கும்?

பன்றியுடன் எதிர்பாராத சந்திப்பு குறித்த தனது அனுபவங்களை, பன்றியை எதிர்கொண்டால் எப்படி சமாளிப்பது என்று நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆஸ்திரியாவுக்கான பிரிட்டன் தூதர் லீ டர்னர்.

படத்தின் காப்புரிமை TWITTER/@LEIGHTURNERFCO
Image caption டிவிட்டர் பதிவு

இதையும் படிக்கலாம்:

உங்கள் கணினி `சைபர்' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா?

ஓய்வுக்குப் பின் `ஓவியரான` பந்தயக் குதிரை மெட்ரோ

உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோளை வடிவமைத்துள்ள தமிழக மாணவன்

வாடகைக்கு வீடு, வாடகையாக ''செக்ஸ்"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்