ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன்

  • 19 மே 2017
படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கைவிடலாம் என ஸ்வீடனின் பொது வழக்குகளுக்கான இயக்குனர் முடிவு செய்திருக்கிறார்.

அசாஞ் மீது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட கைது வாரண்டை திரும்பப் பெறுவதாக, ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றத்தில் மேரியானே நேய் கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.

45 வயதான அசாஞ், தம்மை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பதற்காக, 2012 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் உள்ள எக்கவடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாக அசாஞ்ஜே அஞ்சுகிறார்.

அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ஆவணங்களை கசியவிட்டதற்காக அமெரிக்காவில் அசாஞ் விசாரணையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

இந்த செய்தி அறிவிக்கப்பட்ட பிறகு, அசாஞ்சை கைது செய்ய கடமைப்பட்டிருப்பதாக லண்டன் மெட்ரோபாலிட்டன் போலிஸ் சர்வீஸ் கூறியுள்ளது. மேலும், அவர் நீதிமன்றத்திற்கு சரணடைய தவறியதான சிறிய குற்றச்சாட்டில் எக்கவடார் தூதரகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

'இங்கிலாந்து மீது கவனம்'

வெள்ளிக்கிழமை பிற்பகலில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அரசு வழக்கறிஞர், "ஜுலியன் அசாஞ் பாலியல் பலாத்காரம் செய்ததான சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கும் வழக்கில் புலன்விசாரனையை நிறுத்திவிட ஸ்வீடனின் பொது வழக்குகளுக்கான இயக்குனர் மேரியானே நேய் முடிவுசெய்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அசாஞ் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்னர் ஸ்வீடன் அதிகாரிகளால் அவர் லண்டன் தூதரகத்தில் விசாரிக்கப்பட்டார்.

ஆனால், அசாஞ் தூதரகத்தில் இருந்து வெளியேறினால், லண்டன் போலீசால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆகஸ்ட் 2020க்குள் ஜூலியன் அசாஞ் ஸ்வீடனுக்கு வந்தால் வழக்கு மீண்டும் தொடர வாய்ப்புள்ளது : மேரியானே நேய்

வெள்ளிக்கிழமையன்று இந்த செய்தி அறிவிக்கப்பட்டதும், "தற்போது இங்கிலாந்தின் மீது கவனம் செலுத்தப்படுகிறது" என்று தனது டிவிட்டர் செய்தியில் கூறிய விக்கிலீக்ஸ், "ஜூலியன் அசாஞ்சை ஒப்படைக்கவேண்டும் என்ற வாரண்ட், அமெரிக்காவிடம் இருந்து கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இங்கிலாந்து மறுத்துவிட்டது" என்றும் குறிப்பிட்டுள்ளது.

"மிகவும் கடுமையான குற்றத்திற்கான ஐரோப்பிய கைது உத்தரவு" என்பதன் அடிப்படையில் தனது நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக லண்டனில் உள்ள மெட்ரோபாலிடன் போலீஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மேலும், "இப்போது நிலைமை மாறிவிட்டது, ஸ்வீடன் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தங்கள் விசாரணையை நிறுத்திவிட்டார்கள், ஆனால் ஒரு சிறிய குற்றம் செய்தது தொடர்பாக அசாஞ் அவர்களுக்கு தேவைப்படுகிறார். அந்த குற்றத்திற்கு தேவையான அளவு தகவல்களை மெட்ரோபாலிடன் போலீஸ் வழங்கும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை" என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அசாஞ்சின் ஸ்வீடன் வழக்கறிஞர் கடந்த மாதம் தாக்கல் செய்த ஒரு மனுவில், அசாஞ்சின் கைது வாரண்ட் நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

அசாஞ்சை கைது செய்ய "முன்னுரிமை" தரப்படும் என்ற அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செசெஸின் கருத்தை சாமுவெல்ஸன் மேற்கோள் காட்டுகிறார்.

அகென்ஸ் ப்ரான்ஸ்-பிரெஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சாமுவெல்ஸன், " அமெரிக்கா நடவடிக்கை எடுக்க விருப்பப்படுவதை நாம் இப்போது நிரூபிக்கமுடியும். இதன் மூலம், கைது வாரண்டை ரத்து செய்யக் கோரலாம். பிறகு, அசாஞ்ஜே ஈக்வடர் நாட்டிற்கு சென்று அரசியல் அடைக்கலம் பெறமுடியும்" என்று சொல்கிறார்.

பிற செய்திகள் :

மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் - ஆய்வு

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: ஓ.பி.எஸ்

714 கோடி ரூபாய்க்கு விலைப்போன ஓவியர் ஷான் மிஷெலின் படைப்பு

நல்ல தலைவர்கள், ஆனால் அமைப்பு கெட்டுப்போயிருக்கிறது - ரஜினிகாந்த்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்