இரானின் புதிய அதிபரான ரூஹானி கடந்து வந்த பாதை

  • 21 மே 2017

இஸ்லாமிய அரசியல் வட்டத்தில் முதன் முறையாக தனது ஆட்சியை தொடங்கிய ஹசன் ரூஹானி(68) தற்போது, சீர்திருத்தவாதிகள் மத்தியில் தன்னை நிறுத்திக்கொண்டு, திடமான இடதுசாரி சிந்தனையை நோக்கி நகர்ந்துவிட்டார்.

படத்தின் காப்புரிமை AFP

இரண்டாவது முறை தனது ஆட்சியைக் கைப்பற்ற தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரூஹானி தனது போட்டியாளரும் தீவிர மற்றும் மூத்த மதகுரு, நீதிபதி என பல பதவிகளை கொண்ட எப்ராகிம் ரைசி முன்வைத்த திட்டங்களுக்கு முற்றிலும் மாறான நவீன மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட பொருளாதார திட்டங்களை கொண்ட நாடாக இரானை மாற்ற ரூஹானி உத்தரவாதம் அளித்துள்ளார்.

எதிர்கால அதிபர் எடுக்கும் ஒரு தவறான முடிவு, இரானை போரில் மூழ்கடித்துவிடும் என்று இரானிய மக்களை ரூஹானி எச்சரித்தார்.

உலகின் பலம்படைத்த நாடுகளுடன் அதிபர் ரூஹானி எட்டிய அணுசக்தி ஒப்பந்தத்தால் ஈர்க்கப்படாத ரைசி தெரிவித்த கருத்துக்களை குறிப்பிட்டு, அந்த ஒப்பந்தம்தான், போர் ஏற்படும் அச்சுறுத்தலான நிலையில் இருந்து இரானை காப்பாற்றியது என்றார் ரூஹானி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் ஆகியோர் இரான் மீது அழுத்தம் தரும் வழிகளை எதிர்நோக்கி அல்லது அந்த ஒப்பந்தத்தை ஒதுக்க எண்ணியிருந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடரவேண்டும் என்பதில் அதிபர் ரூஹானி கவனமாக இருந்தார்.

மேலும் ரூஹானி நாட்டின் மந்தமான பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், தனிப்பட்ட மற்றும் அரசியல் சுதந்திரங்களை நீட்டிக்கவும், கடும்போக்காளர்களின் தீவிரவாத சிந்தனையிலிருந்து நாட்டை விலக்கி விட வேண்டும் என்றும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்வதற்காகவும், இணைய அணுகலை நீடிக்கவும், பொதுவாக மாற்றங்கள் மற்றும் வெளிப்படையான சிந்தனை கொண்ட இரானுக்காக வேலை செய்வதாக உறுதி அளித்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலருடன் இரானின் வெளியுறவு துறை அமைச்சர்

அணுசக்திக்கு ஆதரவான பேச்சாளர்

1979ல் புரட்சி நடந்த சமயத்தில் இருந்து இரானின் அரசியல் வாழ்க்கையில் ஹசான் ரூஹானி ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்.

1980-88 வரை நடந்த இரான்-இராக் போரில், இரானின் பாதுகாப்பு நிறுவனத்தில் செல்வாக்கு படைத்த நபராக இருந்த ரூஹானி, அதன் பின்னர் பல முக்கிய அரசியல் பதவிகளை வகித்தவர்.

1989 முதல் 2005 வரை ரூஹானி அதிஉயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும் இருந்தார். இரானில் முடிவெடுக்கும் தலைமை அமைப்பான இந்த கவுன்சிலில் அதி உயர் அதிகாரம் படைத்த தலைவரால் நியமிக்கப்பட்ட மற்றும் அவருக்கு பதில் அளிக்கும் பொறுப்பில் ரூஹானி இருந்தார்.

1996, 2000ம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராவும், 1997ல் சட்டம் மீதான சர்ச்சையை தீர்க்கும் நடுவர் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.

2003ல் இருந்து 2005 வரை, இரானின் அணுசக்திக்கான ஆதரவு தலைமை பேச்சாளராக இருந்த ரூஹானி, யூரேனிய செறிவூட்டலை நிறுத்துவதற்கு ஒத்துக்கொண்டபோது,''தூதர் ஷேக்'' (the diplomat sheikh) என்ற பட்டப்பெயரை பெற்றார்.

படத்தின் காப்புரிமை AP

முதல் முறையாக ஆட்சி பொறுப்பில் ரூஹானி

2013ல் அதிபர் வேட்பாளராக ரூஹானி போட்டியிட்டபோது,தன்னை மிகவும் சந்தேகிக்கும் கடும்போக்காளர்கள் நிறைந்த ஒரு அமைப்புக்கு எதிராக அவர் இருப்பதை அறிந்தார்.

அதிபர் முகமது அஹ்மதிநிஜாத்தின் தலைமையின் கீழ் தங்களது வாழ்க்கைத் தரம் மற்றும் தங்கள் நாட்டின் மதிப்பு ஆகியவை வீழ்ச்சியடைவதை கண்ட பல இரானியர்களுக்கு '' மிதவாத அரசியல் சிந்தனைகள் மற்றும் விவேகம்'' என்ற அவரது பிரச்சார வாசகம் தங்களது கருத்துடன் ஒத்துப்போவதாக உணர்ந்தார்கள்.

அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ரூஹானி பார்க்கப்பட்டாலும், அவர் பொருளாதாரத் தடைகளை அகற்றவும், சிவில் உரிமைகளை மேம்படுத்தவும், "தேசத்தின் கண்ணியத்தை" மீட்டெடுக்கவும் உறுதியளித்ததால், அவரது பிரச்சாரம் அதிக எண்ணிக்கையில் மக்களை ஈர்த்தது.

அதி உயர் அதிகாரம் படைத்த தலைவரான அயத்தொல்லா காமெனியின் முதல் தேர்வாக ரூஹானி இல்லை என்று பலர் நம்பினர். ஆனால், முழு அமைப்பையும் சீர்குலைக்காமல், உலகின் பெரிய அணுசக்தி சக்திகளுடன் உள்ள மோதலை முடிவுக்கு கொண்டுவர ரூஹானி வழியை ஏற்படுத்தமுடியும் என்பதை உணர்ந்தபிறகு, காமெனி ரூஹானியை ஆதரித்தார்.

2013ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற ரூஹானி, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசினார். இதுதான் 1979-இல் இருந்து, இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உயர் மட்டத்தில் முதல் நேரடி தொடர்பு ஆகும்.

இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் வெளிப்படையான மற்றும் நேரடி பேச்சுவார்த்தைக்கு இந்த உரையாடல் வழிவகுத்தது. அதே போல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது.

2013ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, அதி உயர் அதிகாரத்தை கொண்ட தலைவர் மூலம், மேற்கத்திய நாடுகளுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை கையாள, அதி உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை (supreme national security council) விட, வெளியுறவு துறை அமைச்சரை அனுமதிக்கும்படி ரூஹானி வழிசெய்தார். இதன்பின்னர் வெளியுறவுதுறை அமைச்சராக முகம்மது ஜவாத் ஜரிஃப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடக்கும் இடத்திற்கு வெளியே, ஜரிஃப் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு செயலர் ஜான் கெரி ஜெனிவா ஏரியில் சாவுகாசமாக நடந்து செல்வது, சிரிப்பது, பேசுவது போன்றவை நடந்தன. இவை ஒருகாலத்தில் அசாதாரணமானதாக தோன்றிய செயல்கள் இவை.

ஆனால் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்தபோது, இவை சாதாரணமாக மாறியது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மனித உரிமை மீறல்களுக்காக, சர்வதேச அளவில் கண்டனத்திற்கு ஆளும் நாடக இரான்உள்ளது

ரூஹானி முன்னுள்ள சவால்கள்

ஆரம்பத்தில் இருந்து ரூஹானி இரானின் பல பிரச்சினைகளுக்கு"ஒரே இரவில் தீர்வுகள்" கிடைக்காது என்று எச்சரித்தார்.

அணுசக்தி ஒப்பந்தம் இரானுக்கு எதிரான பல தடைகள் அகற்றப்படுவதை உறுதி செய்தன, ஆனால் இதன் நன்மைகள் பல இரானியர்களுக்கு மெதுவாகவே வந்தடைந்தன.

சாதாரண இரானியர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இதை உணரவில்லை என்று கூறுகின்றனர்.

பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது, மேலும் அவசரமாக தேவைப்படும் வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்த்ததை விட மிக மெதுவாக நடந்துவருகின்றன.

மனித உரிமை மீறல்கள் அதிகமாக காணப்படும் நாட்டில், அவர் அதிக சுதந்திரம் கொண்ட ஒரு சகாப்தத்தை உறுதியளித்தார்.

ஆனால் வெகு சிலரே முன்னேற்றம் இருப்பதாக நம்பினர். சில இடங்களில் நிலைமை மேலும் மோசமாகியது.

இன்னும் பல ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் சிறையில் உள்ளனர். இரானில் மேற்கொள்ளப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவர் பேசிய முக்கிய உரைகள் ஒன்றில், அரசு ஊடக தலைவர்களிடம் பேசிய அவர், இஸ்லாம், அரசு ஊடகம் தனது பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்காததை விட சற்று அதிகம் பொறுத்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டார். ஆனாலும் கூட ரூஹானியின் ஆட்சியில் ஊடகங்களில் தணிக்கை குறைந்ததாக தெரியவில்லை.

உலக அளவில், மிக குறைந்த வேகத்தில் இணையம் செய்யப்படும் நாடு இரானாக உள்ள நிலையில், இணையம் இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் காரணமாக, கட்டுப்பாடுகளை மீறி பிராக்ஸி சர்வர்களை பயன்படுத்துவதற்கு பலர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

தொடர்பான செய்திகள்:

இரானில் பழமைவாதியை தோற்கடித்த மிதவாதி; மீண்டும் அதிபரானார் ஹசன் ரூஹானி

இரான் தேர்தல் நிலவரம்: ஹாசன் ரூஹானி முன்னணி

இதையும் படிக்கலாம்:

கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான்

லட்சக்கணக்கான இந்திய பெண்கள் பணியிலிருந்து விலகுவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்