சீனாவுடன் ஒப்பிட்டு அமெரிக்க சூழலை புகழ்ந்த சீன மாணவி: வலைத்தளங்களில் சீற்றம்

  • 24 மே 2017

அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையில், அமெரிக்க ஜனநாயகத்தில் புதிய காற்று வீசுவதாக பாராட்டி பேசிய சீன மாணவி, சமூகவலைத்தளங்களில் வெளியான சீற்றம் மிகுந்த எதிர்வினைகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளார்.

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption சீன மாணவி யாங் சூபிங்

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய சீன மாணவியான யாங் சூபிங், சீனாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் அந்நாட்டில் சுதந்திர பேச்சுரிமைக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகளை அமெரிக்காவில் நிலவும் சூழலுடன் ஒப்பிட்டு பேசினார்.

இதனால் சினமடைந்த சீன சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள், தனது தாய் நாட்டை மாணவி யாங் இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, இம்மாணவி இனி அமெரிக்காவிலேயே தங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால், மாணவியின் மாறுபட்ட கருத்தை கேட்பது அவசியம் என்று தெரிவித்த மேரிலாண்ட் பல்கலைக்கழகம், சீன மாணவிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.

விழாவில் உரையாற்றுவதற்கு மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி யாங், சீனாவில் காற்று மாசுபாட்டை சமாளிக்க முகமூடி அணிய வேண்டியிருக்கிறது; ஆனால் இதற்கு மாறாக, அமெரிக்காவில் இனிய மற்றும் ஆரோக்கியமான காற்று வீசுவதாக தெரிவித்தார்.

யு டியூப் வலைதளத்தில் அவர் வெளியிட்ட காணொயில், ''அமெரிக்க விமான நிலையத்துக்கு வெளியே வீசிய காற்றை சுவாசிக்கும் போதும், உள்ளிழுத்த காற்றை வெளியேற்றும் தருணத்திலும், சுதந்திரமாகவும், இதமாகவும் நான் உணர்ந்தேன்'' என்று தெரிவித்தார்.

மேலும், இது குறித்து யாங் கூறுகையில், ''இனி நான் அனுபவிக்கப் போகும் இந்த புதிய, இதமான காற்றுக்கு நான் என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். இங்கு பேச்சுரிமைக்கு சுதந்திரம் உள்ளது. ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமை ஆகியவை எளிதாக வழங்கப்படாது. இவற்றை பெறுவதற்கு போராட்டங்கள் நடத்துவது மதிப்பு மற்றும் அர்த்தம் மிகுந்தவை'' என்று குறிப்பிட்டார்.

சீன இணையத்தளத்தில் முக்கியமான தலைப்புகளில் ஒன்றாக யாங்கின் உரை அமைந்துவிட்டது. செவ்வாய்க்கிழமையுடன் இது குறித்த பதிவுகள் 50 மில்லியன் தடவைகளுக்கு மேலாக பார்க்கப்பட்டுள்ளன.

மன்னிப்பு கேட்ட மாணவி

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சீன மாணவர்கள் உள்பட இதனால் ஆத்திரமடைந்த சீன சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் , யாங் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டி, அவருக்கு பதிலடி தரும் வகையில் பல காணொளிகளை யு டியூப் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை @ADMJEINSBT
Image caption வலைப்பூ தளத்தில் மன்னிப்பு கோரிய மாணவி

சமூகவலைத்தளங்களில் பெருகிவரும் எழுச்சியை சந்தித்துள்ள யாங், சீன வலைப்பூ தளமான வெய்போவில் தான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனது உரைக்கு கிடைத்த எதிர்வினையால் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்ததாக குறிப்பிட்டார்.

தனது தாய் நாட்டை ஆழமாக நேசிப்பதாக குறிப்பிட்ட யாங், '' நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் என்னை மன்னிப்பர் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இதன் மூலம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம் :

பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு

'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?

புற்றுநோயை எதிர்த்து போராடிய 'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகன் மரணம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்