பெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்

  • 26 மே 2017

கடந்தாண்டு காணாமல் போன தனது இரு சகோதரர்களை கண்டுபிடிக்கும் விசாரணையை சலாமா அலி தொடங்கிய போது பலமடங்கு அதிர்ச்சியளிக்கும் விடயங்களைக் கண்டுபிடித்தார்.

Image caption சலாமா ஒரு ஆலோசராக பயிற்சி பெற்றவர்.

தீவிரமயமாக்கப்பட்ட இளம் கென்ய ஆண்கள் அண்டை நாடான சோமாலியாவில் உள்ள அல்-ஷபாப் தீவிரவாத குழுவில் இணைவது மட்டுமின்றி, அக்குழுவினர், பெண்களை வலுக்கட்டாயமாக அபகரித்தும், கடத்தியும் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கின்றனர்.

தனது சகோதரர்கள் குறித்த தகவலுக்கான சலாமாவின் தேடல் என்பது மிகவும் அமைதியாகவும், ரகசியமாகவும் நடத்தப்படவேண்டியிருந்தது.

காரணம், அல்-கயீதா தொடர்புடைய அல்-ஷபாப் அமைப்புடன் ஏதேனும் தொடர்பு குறித்து தகவல் வெளியானால் அது பாதுகாப்பு படைகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.

அதனால் மொம்பாஸா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பிற பெண்களை ரகசியமாக சந்தித்தார் சலாமா.

காணாமல் போன ஆண் உறவினர்கள் குறித்த கதைகளை அவர்களோடு பகிர்ந்து கொள்வது மட்டுமில்லாமல் தகவல்களை திரட்டும் பணியிலும் சலாமா ஈடுபட்டார்.

ஆனால், சலாமா மிகவும் வித்தியாசமான சில செய்திகளையும் கண்டுப்பிடித்தார்.

பெண்கள் தங்களுடைய சொந்த விருப்பத்திற்கு எதிராக சோமாலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டது குறித்த கதைகள்தான் அவை.

மொம்பாஸா மற்றும் கென்யா கடலோர பகுதியின் பிற பகுதிகளில் உள்ள கிறித்துவ மற்றும் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளம் மற்றும் வயதுமுதிர்ந்த பெண்கள்தான் சோமாலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். பெரும்பாலும் அவர்களுக்கு வெளிநாட்டிலோ அல்லது பிற நகரத்திலோ அதிக ஊதியம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டு பின்னர் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம், சலாமா ஓர் ஆலோசராக பயிற்சி பெற்றார். தொடர்ந்து, அல்-ஷபாப் குழுவிலிருந்து திரும்பிவரும் பெண்களுக்காக ரகசிய ஆதரவு குழு ஒன்றை அமைத்தார்.

இந்த செய்தி பொதுவெளியில் பரவ அக்குழுவில் தங்களையும் இணைக்கக்கோரி பெண்கள் சலாமாவை தேடி வரத் துவங்கினார்கள்.

சிலர் குழந்தைகளுடன் வந்ததாக கூறும் சலாமா, சிலர் எச் ஐ வி தொற்றுடனும், சிலர் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் காரணமாக மனநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் இருந்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அல்-ஷபாபின் அனுதாபி என்று தவறாக முத்திரை குத்தப்படுவோம் என்பதற்காக அனைவரும் வெளிப்படையாக பேசுவதற்கு அச்சப்படுகின்றனர்.

அடுத்த தலைமுறை படையினரை உருவாக்க, திட்டமிட்ட ஒருங்கிணைப்பு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அல்-ஷபாப் தீவிரவாதியின் மனைவி சாரா கூறுகிறார்.

''ஆண்கள் வந்து என்னுடன் பாலுறவு வைத்து கொள்வார்கள். எத்தனை பேர் என்பதை என்னால் கூறமுடியாது,'' என்கிறார் மற்றொரு பெண். ''நாங்கள் தொடர்ந்து பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவோம்.''

சில பெண்கள் அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கு மனைவிகளாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், பிற பெண்கள் விலைமாதர் இல்லங்களில் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியாவில் ஓர் அடிப்படை இஸ்லாமிய அரசை அமைக்கும் முயற்சியில் சண்டையிட்டு வரும் அல்-ஷபாப், அண்டை நாடுகள் மீதும் தாக்குதல்களை தொடுத்துள்ளன. இதன்காரணமாக, ஆஃப்ரிக்க கூட்டுப்படைகளின் ஓர் அங்கமாக அண்டை நாடுகள் ஒன்றிணைந்து அல்-ஷபாப் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட படையினரை அனுப்பியுள்ளன.

அல்-ஷபாப்பின் பதில் தாக்குதல்களினால் ஏற்பட்ட கொடூர விளைவுகளை கென்யா பார்த்துள்ளது.

சலாமா குழுவை சேர்ந்த புதிய உறுப்பினர் ஃபெயித். சமீபத்தில்தான் அல்-ஷபாப் தீவிரவாதிகள் வசமிருந்து தப்பித்தார்.

அவருக்கு 16 வயது இருந்தபோது மூத்த தம்பதியர் இவரை அணுகி கடற்கரைக்கு அப்பால் உள்ள மலிண்டி என்ற நகரில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

பணிக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் அதற்கு அடுத்தநாள் 14 பிற பயணிகளுடன் பேருந்து ஒன்றில் ஏறினார்.

பேருந்தில் பயணித்த அனைவருக்கும் மயக்க மருந்து கலக்கப்பட்ட தண்ணீர் கொடுக்கப்பட்டது.

''நாங்கள் மயக்கத்திலிருந்து தெளிந்த போது, ஓர் அறைக்குள் இரு ஆண்கள் இருந்தனர்'' என்கிறார் ஃபெயித். ''கறுப்பு துணிகளால் எங்கள் கண்களை அவர்கள் கட்டினார்கள். பின், அந்த அறையில் எங்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள்.''

Image caption குழந்தையுடன் ஃபெயித்

மீண்டும் மயக்கமடைய வைக்கப்பட்ட நிலையில், ஓர் இருண்ட காட்டிற்குள் திறந்தவெளியில் விழித்துள்ளார் ஃபெயித்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதன் விளைவாக கர்ப்பம் தரித்த ஃபெயித், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை தன்னந்தனியாகப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

''நான் அந்த காட்டில் அனைத்தையும் தனியாகத்தான் செய்தேன். அப்படித்தான் குழந்தையையும் பெற்றெடுத்தேன்.''

இறுதியாக, பாரம்பரிய நாட்டு வைத்தியர் ஒருவர் மருத்துவ குணமுடைய வேர்களைத் தேடி காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, மருத்துவரின் உதவியை பெற்று ஃபெயித் மற்றும் அவருடைய குழந்தை இருவரும் காட்டிலிருந்து தப்பித்தனர்.

பிபிசியிடம் பேசிய பெண்கள் பலரும் அல்-ஷபாப் வசம் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது குழந்தை பெற்றுள்ளனர்.

முன்னாள் அல்-ஷபாப் தீவிரவாதியின் மனைவியான சாரா, இது தற்செயலானதல்ல என்று கூறுகிறார்.

சோமாலியாவில் உள்ள முகாம்களில் வாழ ஆட்களை நியமிப்பது என்பது மிகவும் கடினம் என்ற காரணத்தாலும், குழந்தைகளிடம் எளிதில் எதையும் போதித்துவிடலாம் என்பதாலும் அடுத்த தலைமுறை போராளிகளை உருவாக்க ஒருங்கிணைந்த திட்டம் இருப்பதாக கூறுகிறார்.

''என்னுடைய முகாமில் பிற பெண்களை அமைப்பிற்குள் கொண்டுவருவதற்கு பெண்கள் இருக்கின்றனர்,'' என்கிறார் சாரா. ''பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டியதுதான் பெண்கள் வேலை என அவர்கள் கருதுகிறார்கள்.''

''தன்னுடைய முகாமில் இருந்த 300 பெண்களில் பெரும்பாலானவர்கள் கென்யர்கள்,'' என்கிறார் சாரா.

குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கும் ஆதரவுகரம் நீட்டுகிறார் சலாமா. அந்த பட்டியலில் எலிசபெத்தும் அடங்குவார்.

இரு ஆண்டுகளுக்குமுன் எலிசபெத் கடைசியாக தன் மூத்த சகோதரியை பார்த்தவர்தான். செளதி அரேபியாவில் வேலை ஒன்றுக்கு செல்கிறோம் என்று கிளம்பியவர்தான்.

ஒருமாதம் கழித்து அவர் தொடர்பு கொண்டதாக எலிசபெத் கூறுகிறார்.

''சோமாலியாவில் ஓர் ஆபத்தான மற்றும் தீய இடத்தில் இருப்பதாகவும், அது அல்-ஷபாப் முகாம் என்றும் சகோதரி எங்களிடம் கூறினார்,'' என்கிறார் எலிசபெத். அதன்பிறகு தொலைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட, அன்றிலிருந்து அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

பிரச்சனை ஒன்று இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் கென்யா அரசாங்கம், பெண்கள் யாரும் முன்வராத காரணத்தால் இதன் வீரியத்தை கணிப்பது கடினமாக இருப்பதாக கூறுகிறார் மொபாஸாவில் உள்ள பிராந்திய ஆணையர் இவான்ஸ் அசோக்கி.

சோமாலியாவிலிருந்து திரும்பிவரும் போராளிகளுக்காக அம்னெஸ்டியின் திட்டம் ஒன்று உள்ளது. சிலர் அதன் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளனர். ஆனால், அதேசமயம் ஆண்கள் திடீரென காணாமல் போயிருப்பதாகவும் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன.

''சோமாலியாவுக்கு விருப்பப்பட்டு சென்றவர்களும், விருப்பமில்லாமல் சென்றவர்களும் குற்றவாளிகளாகத்தான் பார்க்கப்படுகின்றனர்.''

பாதுகாப்பு கருதி இந்த கட்டுரையில் இடம்பெற்ற பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

பிற செய்திகள் :

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

பிரிட்டனில் சமீபத்திய வரலாற்றில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்த ஓர் பார்வை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்