ராணுவத்தினருக்கு 3 முறை பாலியல் வல்லுறவு அனுமதி: காமெடியால் வாங்கிக் கட்டிய அதிபர்

பாலியல் வல்லுறவு குறித்த ஒரு நகைச்சுவையை பாதுகாப்புப் படையினருடன் பகிர்ந்து கொண்டமைக்காக பிலிப்பின்ஸ் அதிபர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டின் தென்பகுதி முழுவதும் ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய பிறகு, ராணுவ முகாம் ஒன்றில் பேசிய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, ராணுவ வீரர்கள் மூன்று பெண்கள் வரை பாலியல் வல்லுறவில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

பதவிக்கு வந்தது முதல், இரண்டாவது முறையாக அவர் இத்தகைய கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

அவரது பேச்சு, மிகவும் இழிவானதாக இருப்பதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலியல் வல்லுறவு ஒருபோதும் நகைச்சுவையான விடயம் இல்லை என்று செல்ஸி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை @CHELSEACLINTON

டுடெர்டே இப்படித்தான் பேசினார் : "உங்களுக்காக நான் சிறைக்குச் செல்கிறேன். மூன்று (பெண்கள்) வரை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டால், நான் செய்ததாக சொல்கிறேன். ஆனால், நான்கு பேரை திருமணம் செய்தால் வேசி (விலைமாது) மகன்களே, உங்களை அடித்து நொறுக்கிவிடுவேன்".

கொலைகார முரடன்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மகளான செல்ஸீ கிளிண்டன் துபற்றி தனது ட்விட்டர் தளத்தில் "டுடெர்டெ ஒரு கொலைகார முரடன். அவருக்கு மனித உரிமை மீது எப்போதும் மரியாதை இல்லை. பாலியல் வல்லுறவு எப்போதும், கேலிக்குரிய விடயம் அல்ல" என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption `மூன்றுக்கு சம்மதம்'

ஹியூமன்ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் பெலிம் கைன், அதிபரின் பேச்சு இழிவானது என்றும், ராணுச் சட்டத்தை அமல்படுத்தும்போது ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடலாம் என்று அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டுடெர்டே அரசு, மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி, அதை ஊக்குவிக்கவும் செய்யும் என்ற மனித உரிமை அமைப்புக்களின் அச்சம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த நாட்டில் பெண்களுக்காக உள்ள ஓர் அரசியல் கட்சியான கேப்ரிலா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் வல்லுறவு நகைச்சுவை அல்ல என்றும், ராணுவச் சட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்களும் நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption `நாலுக்கு அடி'

முஸ்லிம் பிரிவினைவாதிகளும் பிற கிளர்ச்சியாளர்களும் ராணுவத்துக்கு எதிராகப் போரிடும் தென் பிலிப்பின்ஸில் கடந்த வாரம் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்தது.

கடந்த ஆண்டு டுடெர்டே ஒரு நிகழ்வில் பேசும்போது, 1989-ஆம் ஆண்டு நடந்த பாலியல் வல்லுறவு சம்பவம் மற்றும் ஆஸ்திரேலிய மதப்பிரசாரகர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

"சம்பவம் நடந்த நகரின் மேயர் என்ற முறையில் எனக்குத்தான் முதல் வாய்ப்புக் கிடைத்திருக்க வேண்டும்" என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

ராணுவத்தினரின் செயல்பாடுகளுக்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காகத்தான் அதிபர் அவ்வாறு பேசியிருக்கிறார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

காதல்... திருமணம்... கசப்பு... திருப்பம்...

இலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 122-ஆக உயர்வு

மோதி அரசின் 3 ஆண்டு ஆட்சி: வேலைவாய்ப்பு வீழ்ச்சி?

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்