`ஒட்டுமொத்த தண்டனை ஒரு போர்க்குற்றம்` - பள்ளி மீதான சிறுமியின் குற்றச்சாட்டு வைரலானது

  • 30 மே 2017
படத்தின் காப்புரிமை TWITTER/MASONCROSS

ஸ்காட்லாந்தில், 11 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது பள்ளியின் மீது போர் குற்றம் சுமத்தியது, இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.

அச்சிறுமியின் தந்தை கேவின் பெல், மாணவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் படிவத்தில் தனது மகள் இவ்வாறு எழுதியுள்ளதாக டிவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

அவரது பள்ளிக்கூடம் ஒரு மாணவரின் தவறான நடத்தைக்காக வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தண்டனை வழங்கியதாம்.

இவ்வாறு ஒருவர் செய்த குற்றத்துக்கு ஒட்டுமொத்தமாக அனைவரையும் தண்டிப்பது தவறு என்று ஜெனிவா உடன்பாடுகளை சுட்டிக்காட்டி அச்சிறுமி விமர்சித்துள்ளார்.

இதற்காக தனது மகளை தண்டிப்பதா, அல்லது அவருக்கு ஐஸ் கீரிம் வாங்கி தருவதா என தனக்கு குழப்பமாக இருப்பதாக , சிறுமியின் தந்தை பெல் தெரிவித்துள்ளார்.

தனது ஆசிரியர் மேலும் சிறப்பாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு, ஒருவரின் நடத்தைக்காக, தவறு செய்யாத பிறரை தண்டிப்பது 1949 ஆம் ஆண்டு உருவான ஜெனிவா உடன்படிக்கையின்படி, போர் குற்றமாக கருதப்படுகிறது , எனவே இது போல ஒட்டுமொத்தத் தண்டனைகளைத் தரக்கூடாது என்றார் அவா பெல் என்ற அந்தச் சிறுமி.

பென்சிலால் எழுதப்பட்ட அந்த படிவத்தின், புகைப்படம் டிவிட்டரில் 400,000க்கும் மேலான முறை லைக் செய்யப்பட்டுள்ளது.

ஸ்காட்லந்தின் பெருநகரான, கிளாஸ்கோவைச் சேர்ந்த பெல், "தனது மூத்த குழந்தைக்கு 11 வயதாகிறது ஆனால் 47 வயதை போல் நடந்து கொள்வதாக" தெரிவித்துள்ளார்.

நான் ஒரு விஷயத்தை தெளிவாக கூற வேண்டும், "எனது மகள் தனது ஆசிரியரைப் பற்றி உயர்வாகவே கருதுகிறார் . ஆனால் பள்ளியின் தண்டனை வழங்கும் முறையில் தான் சிக்கல்கள் இருப்பதாக அவள் உணர்கிறாள்", என்றார் அவரது தந்தை.

பெற்றோர்களுக்கான பள்ளிக்கூட்டத்தில், குழந்தைகளின் பள்ளி பயிற்சித் தாள்களை காட்சிக்கு வைத்த போது, தான் இதை கண்டதாக பெல் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

இது தனது மகளின் தனித்துவமான பண்பு என சிரித்து கொண்டே கூறும் பெல், வீட்டில் எந்த ஒரு விவாதத்திலும் தனது மகள் விட்டுக் கொடுக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

பெல்லின் மகள் வயதிற்கு மீறிய புத்தி கூர்மையுடன் இருப்பதாக சக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்; மேலும் இது ஒரு தொடக்கம்தான் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெல்லின் இந்த டிவீட்டுக்கு பலர் பதிலளித்து உள்ளனர்; அதில் சிலர் இதை பெல்லே உருவாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் அதற்கு பதிலளித்த பெல், அவ்வாறு உருவாக்கியிருந்தால் நான் அந்த படிவத்தில் ஜெனிவாவின் எழுத்துப் பிழையை சரி செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகளுக்கு விஷயங்களை அறிந்து கொள்ளப் பிடிக்கும் என பிபிசியிடம் பெல் தெரிவித்தார்.

மேலும் அவள் கூகுள் மூலம் விஷயங்களை அறிந்து கொள்வாள் என்றும், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரிந்து கொள்வாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த 11 வயது சிறுமி அவாவை பொருத்தவரை தனது ஆசிரியர் இதை சிறப்பாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஐஸ்கீரிம் மற்றும் தண்டனை ஆகிய இரண்டில் ஐஸ்கீரிம் என்றே டிவிட்டர் வாசிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே பெல் தனது மகள் இரண்டு ஐஸ்கீரிம் கோன்களுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER/MASONCROSS

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்