பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் 'பலே உத்தி' : ஆய்வு

பெண் மயில்களின் கவனத்தை ஈர்க்க ஆண் மயில்கள் பொய்யான பாலியல் அழைப்பு ஒலிகளை எழுப்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி

பொதுவாக மயில்கள் தங்களது தோகைகளை அசைக்கும் பழக்கமுடைவை, ஆனால், இது பாலியல் ரீதியான அழைப்பு உத்தி என்று கனடா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல விதங்களில் குரல் எழுப்பும் தன்மை மயில்களுக்கு உண்டு. மேலும், கூடலின்போது மயில்கள் தனித்துவமான பேரொலியொன்றை எழுப்பும்.

பெண் மயில்களை கண்டவுடன் ஆண் மயில்கள் இந்த ஒலியை எழுப்புவதாக பதிவு செய்துள்ள உயிரியலாளர்கள், இந்த ஏமாற்று வித்தை ஆண் மயில்களுக்கு அவற்றின் நோக்கத்துக்கு பலன் கிட்டும் வகையில் அமைவதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் 'தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட்' என்ற சஞ்சிகையில் பதிப்பாகியுள்ளது.

பார்வையை ஈர்க்கும் தோகை மற்றும் நடையழகால் தனது பாலியல் ஈடுபாட்டை பறைசாற்றும் வகையில் நடந்து கொள்ளும் மயில்கள் விலங்கு மற்றும் பறவையினங்களில் பாலியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த உதாரணமாகும்.

ஆண் மயில்கள் பலமான ஒலி எழுப்புவதன் காரணமென்ன?

வெற்றிகரமாக பெண் மயிலை ஈர்த்துவிட்ட ஆண் மயில், அதனுடன் கூடலில் ஈடுபடுவதற்கு முன்பு, பெண் மயிலருகே அருகே சென்று தனித்துவமான பேரொலியொன்றை எழுப்பும்.

படத்தின் காப்புரிமை ATTILA KISBENEDEK/AFP/Getty Images

ஆண் மயில்கள் எழுப்பும் இந்த ஒலி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கூட கேட்கும் அளவு பலமான ஒலியாக இருப்பதால், இவ்வாறான பலத்த ஒலியை எழுப்பும் ஆண் மயிலுக்கு இதனால் என்ன பலன் என்று ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ரோஸ்லின் டக்கின் கூறுகையில், ''ஆண் மயில் எழுப்பும் ஒலி மிகவும் பலமாக இருக்கும். தான் கூடவுள்ள பெண் மயிலுக்கு தனது எண்ணத்தை புரிய வைப்பதை தாண்டியும் இந்த ஒலிக்கு பங்குள்ளது'' என்று தெரிவித்தார்.

வட அமெரிக்கவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சுதந்திரமாகவும், கூண்டில் அடைக்கப்படாமலும் கூட்டமாக இருக்கும் பறவைகள் குறித்து டக்கின் ஆய்வு மேற்கொண்டார். இப்பறவைகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவையாகும்.

60% அளவுக்கு ஆண் மயில்களிடையே பொய்யான அழைப்புகள் இருந்தது வியப்பளிக்கும் வகையில் பொதுவான அம்சமாக டக்கின் கண்டறிந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை 2. YOSHIKAZU TSUNO/AFP/Getty Images
Image caption பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி: ஆய்வு

இந்த ஏமாற்று வித்தையின் மூலம் அந்த ஆண் மயில்களுக்கு பெண் துணை கிடைப்பதாக டக்கின் கண்டறிந்துள்ளார்.

''ஆண் மயில் எழுப்பும் ஒலியின் அளவு அதிகரித்தவுடன், அதனால் ஈர்க்கப்பட்டு அதனருகே பெண் மயில் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. ஆனால், இவ்வாறான செய்கையினால் ஆண் மயில்களுக்கு ஏதாவது உடல்தகுதி ரீதியான ஆதாயம் கிடைக்கிறதா என்று இன்னமும் தெரியவில்லை'' என்று டக்கின் மேலும் தெரிவித்தார்.

ஆனால், அதிகப்படியான முறைகள் இவ்வாறான ஒலியை கேட்கும் போது, ஆண் மயில்களின் ஏமாற்று வித்தையை பெண் மயில்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் ஆபத்தும் உள்ளது.

இதையும் படிக்கலாம்:

'மயில் எப்படி கர்ப்பமாகிறது?' ராஜஸ்தான் நீதிபதி புது விளக்கம்

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியில் தாமதம்

ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்