வட கொரியாவை புரிந்து கொள்ள அழைக்கும் ஒரு பிரிட்டிஷ் மாணவர்

ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளால் வட கொரியா உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதனால், அங்கு வாழும் வட கொரிய மக்களை பற்றி அதிகமாக அறிய வர, அவர்களில் நண்பாகளை உருவாக்கி கொள்ள இந்நேரமே சரியான தருணம் என்கிறார் ஒரு பிரிட்டிஷ் மாணவர்.

சர்வதேச நட்புறவு இல்லத்தில் தேனீர் விருந்து
படக்குறிப்பு,

சர்வதேச நட்புறவு இல்லத்தில் தேனீர் விருந்து

வட கொரியா என்றதும், தடை செய்யப்பட்டது, வெளிநாடுகளுக்கு திறக்கப்படாத நாடு, நலிவுற்றது, துன்பப்படுகின்ற நாடு என்ற மிக விரைவாக நாம் முத்திரை குத்திவிடுகிறோம்.

நாம் உருவாக்கிய இந்த முத்திரைகளை சற்று அகற்றிவிட்டு, மனித நிலையில் வட கொரியாவை பற்றி தெரிவிக்க விரும்புவதாக 24 வயதான பென்ஜமின் கிரிஃபின் தெரிவிக்கிறார்.

கண்கள் திறந்தன

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு வட கொரியா பற்றி தெரிந்தைவை எல்லாம், ஒரு ஆவணப்படம் மற்றும் சில யூடியூப் காணொளிகளை பார்த்து தெரிந்து கொண்ட தகவல்கள்தான்.

அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற சுற்றுலா நிறுவனமான ஜூச்செ பயணச் சேவை நிறுவனத்தின் உதவியோடு மேற்கொண்ட ஒரு விடுமுறை சுற்றுலாதான், வட கொரியா பற்றிய உண்மையை பென்ஜமின் கிரிஃபினுக்கு வழங்கியது.

2013 ஆம் ஆண்டு வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங் சென்றபோது, நான் போகும் இடமெல்லாம் படையினர் இருப்பர் என்று எதிர்பார்த்தேன். அவர்களை உண்மையான மக்களை பார்க்கவில்லை என்பதைதான் இது குறிப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

படக்குறிப்பு,

சுற்றுலா கல்லூயில் மாணவர்களோடு கரிஃபின்

அங்கு மக்கள் வேலைக்கு செல்வது, பொருட்கள் வாங்க செல்வது, சாப்பிடுவது, பூங்காவில் நடனமாடுவது என பார்த்த இயல்பான வாழ்க்கை அவருக்கு ஆச்சரியமூட்டியது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பது எவ்வளவு சிறந்தது அல்லது முதலாளித்துவம் எவ்வளவு கேடானது என்றெல்லாம் பியோங்யாங் மக்கள் கவலைப்படவில்லை என்பது தான் உண்மை.

இன்று எங்கு பொருட்கள் வாங்க செல்கிறாம்? என்னுடைய பணியில் நான் எவ்வாறு இருக்கிறேன்? என்னுடைய மகள் திருணம் செய்துகொள்ள போகிறாரா? என்பதைதான் அவர்கள் கவனத்தில் எடுத்துகொள்கிறார்கள்.

வட கொரியாவில் வாழ்க்கை

அடுத்த ஆண்டே பியோங்யாங் சுற்றுலா கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்ற தானாக முன்வந்து பென்ஜமின் கிரிஃபின் வட கொரியா சென்றார்.

பின்னர், ஜூச்செ பயணச் சேவை நிறுவனத்தின் திறன்மிக்க சுற்றுலா வழிகாட்டியாக மாறிய பென்ஜமின் கிரிஃபின், எந்த வயதினருக்கும், நாட்டினருக்கும் கிம் இல்-சுங் பல்கலைக்கழகத்தில் மூன்று வாரங்கள் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்கின்றவராக பணியாற்றுகிறார்.

வட கொரியாவின் பிரச்சனைகளை முழுமையாக மன்னித்து விட வேண்டியதில்லை. ஆனால், நமக்கு சற்று அடிப்படை நிலை பரஸ்பர புரிதல் தேவைப்படுகிறது. இதற்கு கல்வி சுற்றுலா சிறந்த முயற்சியாகும் என்பது கிரிஃபினின் வாதமாகும்.

படக்குறிப்பு,

வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங்-உன் இந்த கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் தான் இயற்பியல் கற்றார்

"விமர்சனப் பார்வையை நிறுத்திவிட வேண்டாம். ஆனால், அந்த நாட்டின் மையம் என்ன?, அங்குள்ள மக்கள் எதற்கு மதிப்பளிக்கிறார்கள் என்று கண்டறிவது முக்கியமானது".

அங்கு அரசியல் உள்ளது. அங்கு அணு அயுத சோதனைகள் நடைபெறுகின்றன. எண்ணிப்பார்க்க முடியாத மனித உரிமைகள் மீறல்கள் நடந்தேறுகின்றன. ஆனால், மனிதருக்கும் மனிதருக்கும் இடையேயுள்ள ஊடாடுதலை உற்றுநோக்குவது இன்றியமையாதது. எதுதான் நடைபெற்றாலும், தகவல் பரிமாற்றத்தில் பல விடயங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டியுள்ளது.

வட கொரியாவில் நடப்பதென்ன?

வட கொரியாவின் உண்மை நிலைமைகளை கிரிஃபின் மறுக்கவில்லை. நாட்டுபுறங்களில் ஏழ்மை, நாட்டின் உயர்மட்ட தலைவர் மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றிய ஆளுமை வழிபாடு அனைத்தும் அங்குள்ளன.

உயர்தர குடும்பங்களுக்கு என்றே ஒதுக்கப்பட்டுள்ள பியோங்யாங் நகரத்தில், மக்கள் வாரத்தில் 6 நாட்கள், ஒரு நாளில் 10 முதல் 12 மணிநேரம் வரை உழைக்கின்றனர்.

ஓய்வுக்கு என்றும், புல்வெட்டுதல், பெருங்கூட்டமாக ஆடும் நடன ஒத்திகை போன்ற தன்னார்வ பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்குலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இடைவிடாத பரப்புரை மேற்கொண்டாலும். சில வட கொரியர்கள் மேற்குல கலாசாரத்தில் ஆர்வம் காட்டுபவர்களாகவே இருப்பதாக கிரிஃபின் தெரிவிக்கிறார்.

அசலான மற்றும் போலியான நைக் மற்றும் அடிடாஸ் ஆடை பிராண்டுகள் அந்த நாட்டிலும் காணப்படத்தான் செய்கின்றன. 2014 ஆம் ஆண்டு கிரிஃபின் கற்றுகொடுத்த மாணவர்கள் மேற்குலக பாடகர்கள் மற்றும் திரைப்படங்களை அறிந்திருந்தனர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு உறவாடும் மக்கள்

கிரிஃபின் மற்றும் அவருடைய சக சுற்றுலா வழிகாட்டிகள் மிகவும் விரும்பிய ஒன்று கெரோக்கி. கெரோக்கி நேரம் என்று ஒதுக்கி சிற்றுந்து ஒன்றில், அனைவரும் பயணம் மேற்கொண்டதை கிரிஃபின் நினைவுகூர்கிறார்.

அவர்களில் மிகவும் இனிமையான குரலுடைய இரண்டு வட கொரிய இளம் பெண்களும் இருந்தனர். அவர்கள் அந்நேரத்தில் 'டைட்டானிக்' திரைப்படத்தை பார்த்திருக்க வேண்டும். 'மை ஹார்ட் வில் கோ ஆன்' என்ற பாடலை மிகவும் சுருதி விலகி, சற்று மோசமான குரலில் பாடினார் அவர்களில் ஒருவர். வெளிநாட்டவரின் மத்தியில் இருகின்ற வாய்ப்பை பயன்படுத்தி தலைசிறந்த விதத்தில் பாடுவதற்கு அவர்கள் விரும்பியது தெளிவாக தெரிந்தது.

படக்குறிப்பு,

தலைநகர் பியாங்யோங்கிற்கு வெளியில் நடைபெறும் கிராமிய நடனம்

இத்தகைய நேரங்களில் அரசியலுக்கு வெளியே நாம் வந்துவிடுகிறோம். அவர் ஒரு மனிதர். பயமுறுத்தும் வட கொரியர் அல்ல என்பதை உணரலாம் என்று கிரிஃபின் விளக்குகிறார்.

வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் ஒருவர், அதன் மூலம், வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்திற்கு மான்யம் அளிக்கிறார் என்றும், அல்லது அங்கு நடைபெறும் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறார் என்றும் கூறப்படும் கருத்தை கிரிஃபின் மறுக்கிறார்.

புதிய பார்வை, பரந்த மனப்பான்மை

உரையாடல் மற்றும் கலாசார பரிமாற்றம்தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று கிரிஃபின் வாதிடுகிறார்.

தன்னுடைய கருத்தை தன் நாட்டில் பரப்பும் நோக்கில் இரவு வேளையில் எடுக்கப்பட்ட வட கொரிய செயற்கைக்கோள் படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.

ஒளி மின்னும் ஷென்யாங் நகரத்திற்கும், சோலுக்கு இடையில் கருங்குழி இருப்பது போன்று வட கொரியா இந்த படத்தில் தோன்றுகிறது.

படக்குறிப்பு,

ஒளி மின்னும் ஷென்யாங் நகரத்திற்கும், சோலுக்கு இடையில் கருங்குழி இருப்பது போன்று வட கொரியா தோன்றும் படம்

"வட கொரியாவை நாம் புரிந்து கொண்டிருப்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு. இதில் நாம் மற்றும் அவர்கள். இருள் மற்றும் ஒளி, நன்மை மற்றும் தீமை. இது இருளாக உள்ளது. இது அறியப்படாதது. இவ்வாறு குறைவான எண்ணங்களோடு பார்க்கும் கண்ணாடியை நாம் அனைவருக்கும் வழங்கியுள்ளோம். ஒரு நாடு தீமையானதாக மட்டுமே இருந்தால் ஏதாவது ஒரு நன்மையாவது அதனால் செய்ய முடியுமா?", என்று கேட்கிறார் அவர்.

``இந்த புகைப்படம் பகலில் எடுக்கப்பட்டிருந்தால், இந்த நாடுகளுக்கு இடையிலான பிரிவுகளை நாம் கண்கூடாக பார்த்திருக்க முடியும். வட கொரியாவும் நம்முடைய உலகை சேர்ந்ததே", என்கிறார் அவர்.

காணொளி: வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்

காணொளிக் குறிப்பு,

வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்