அண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம்

அண்டார்டிகாவில், 'லார்சன் சி' பனியடுக்கில் (Ice shelf) ஏற்பட்டுள்ள பிளவில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை கண்டிராத மிகப்பெரிய பனித் தகர்வு ஏற்படுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கும் பனிப் பிளவு, ஆச்சரியப்படும் வகையில் திசை மாறியிருக்கிறது.

"அந்தப் பிளவு மேலும் 16 கிலோமீட்டர் பெருகி, பனியடுக்கின் விளிம்பில் இருந்து அதன் மூக்கை வலப்புறமாக குறிப்பிடத்தக்க அளவு வெளிப்படையாக 13 கிலோமீட்டர் அளவு திரும்பிவிட்டது," என்று ஸ்வான்சீ பல்கலைக்கழக பேராசிரியர் அட்ரியன் லுக்மன் கூறுகிறார்.

பனித் தகர்வு இனி எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம், இருந்தபோதிலும், எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இப்போது இந்த பனிப் பிளவு 200 கிலோமீட்டர் நீளத்திற்கு இருக்கிறது என்று கூறும் அவர், இது சுமார் 5000 சதுர கிலோமீட்டர் அதாவது வேல்ஸின் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டதாக இருக்கும் என்கிறார்.

பிற செய்திகள் :

மே மாதம் 25 முதல் 31 ஆம் தேதிக்குள் விரிசல் பெரிய அளவில் அதிகரித்திருப்பதாக அவர் சொல்கிறார். இந்த குறிப்பிட்ட இரு நாட்களில் அந்த இடத்தை கடந்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் செண்டினல்-1 (Sentinel-1) செயற்கைகோள்கள் இதை தெரிவிக்கின்றன.

இந்த வெண்மையான அண்டார்ட்டிகா கண்டம், ஆழ்ந்த குளிரின் இருளுக்கு மாறும் நிலையில், செண்டினலின் ரேடார் அதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சில பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, லார்சன் பிளவு, மென்மையான, நெகிழ்வான பனிப் பிராந்தியம் என்ற "பிளவு" மண்டலத்திற்குள் வந்துவிட்டது. ஆனால், இந்த நிலை, மே மாதத் தொடக்கம் வரைதான் இருந்தது, அதன்பிறகு திடீரென்று விரிசல் பிளந்து விட்டது.

படத்தின் காப்புரிமை NASA

மேலும், இந்த புதிய விரிசலின் கிளைப் பகுதி நீட்சியடைந்து, தற்போது கடலை நோக்கி திரும்பிவிட்டது.

பனித் தகர்வு நடைபெறும்போது உடையும் துண்டு பனியடுக்கில் இருந்து படிப்படியாக பிரிந்து அதிக தூரம் விலகிச் செல்லலாம்.

"வெடெல் பனிக் கடல் முழுவதும் பனி நிறைந்திருப்பதால் உடைந்த துண்டுகள் வேகமாக நகரும் என்று கூறமுடியாது, ஆனால், அது கடந்த சில மாதங்களில் படிப்படியாக விரிந்து வந்த வேகத்தைவிட விரைவானதாகவே இருக்கும். காற்று மற்றும் நீரோட்டத்தை பொருத்தே பிளவுகள் விலகும் வேகம் இருக்கும்" என்கிறார் பேராசிரியர் லுக்மன்.

லார்சன் சி செஃல்பில் இருந்து, பெரிய அளவிலான பனிப்பகுதி பிரிந்து போவதால் அந்த இடத்தில் பத்து சதவிகிதத்திற்கும் அதிகமான இடம் காலியாகும். இதனால், பனியடுக்கின் நிலைத்தன்மை மிகவும் குறைந்துவிடும் என்று, இது தொடர்பாக லுக்மனின் ஸ்வான்சீ குழு மேற்கொண்ட முந்தைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வடக்கில் உள்ள பனியடுக்கின் லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இது போன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. இதே போன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் கவலையுடன் கண்காணித்து வருகிறார்கள்.

பனியடுக்கு உடைந்தால் (உடைந்தாலும், அதற்கு பல ஆண்டுகளாகும்) இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக் தீபகற்பம் முழுவதும் தொடரும்.

அண்மை தசாப்தங்களில், ஒரு டஜனுக்கும் அதிகமான பெரிய அளவிலான பனியடுக்குகள் உடைந்திருக்கின்றன, அல்லது குறிப்பிட்த்தக்க அளவு பின் வாங்கியிருக்கின்றன அல்லது கணிசமான பகுதி குறைந்திருக்கிறது. பிரின்ஸ் கஸ்டவ் சேனல், லார்சன் இன்லேட், லார்சன் ஏ, லார்சன் பி, வேர்டி, முல்லர், ஜோன்ஸ் சேனல், வில்கின்ஸ் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்