தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

  • 3 ஜூன் 2017

தென் சீனக் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா ராணுவமயமாக்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேதிஸ் எச்சரித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் என்று சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்திருக்கிறார்.

கடல் வள ஆதாரம் அதிகமாக இருக்கின்ற தென் சீனக் கடலை தங்களுடையது என்று சீனா உரிமை கொண்டாடுவதை போல, பல்வேறு நாடுகளும் அப்பகுதி தங்களுடையது என்று உரிமை பாராட்டி வருகின்றன.

அதேவேளையில், வட கொரியாவின் ஏவுகணை மற்றும் ஆணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஜெனரல் மேதிஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

தென் சீனக் கடல் உரிமைகளை விட்டு கொடுக்க போவதில்லை - சீனா

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க கப்பலால் பரபரப்பு

இந்த ஆண்டு நடத்தியுள்ள தொடர் ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, வட கொரியாவுக்கு எதிரான தடைகளை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பவை விரிவாக்கிய சற்று நேரத்தில் மேதிஸின் இந்த கூற்று வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா மேற்கொண்ட பல வார பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் வந்துள்ள இந்த தடைகள், எல்லா நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்கரில்லா பாதுகாப்பு பேச்சுவார்த்தை மன்றத்தில் ஜெனரல் மேதிஸ் பேசுகையில், "செயற்கை தீவுகள் மீது அதிக உரிமைகள் இருப்பதாக தெரிவித்து, ராணுவமயமாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

"தற்போது இருக்கின்ற தீவுகளில், தன்னிச்சையாக, வலுக்கட்டாயமாக மாற்றங்கள் கொண்டு வருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் கூறினார்.

தென் சீனக் கடலில் கூட்டு ராணுவ பயிற்சி இடைநிறுத்தம்: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரொட்ரிகோ

அமெரிக்க-சீன அதிபர்கள் தொலைபேசி உரையாடல்; தென் சீன கடலில் பரபரப்பு

"ஒரு முக்கிய கடல்வழி பாதையாக இருக்கின்ற தென் சீனக் கடலில் தங்களுடைய நலன்களை பாதுகாப்போம்" என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பும், அந்நாட்டின் பிற மூத்த அதிகாரிகளும் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் நியமிக்கப்பட்டபோது, "செயற்கையாக தீவுகளை உருவாக்குவதை நிறுத்துவதற்கு சீனாவுக்கு அமெரிக்கா தெளிவான சமிக்கையை முதலில் அனுப்ப போவதாகவும், இரண்டாவதாக அத்தகைய தீவுகளில் சீனா அணுகுவதற்கு தேவையான அனுமதி முற்றிலும் மறுக்கப்படும்" எனவும் அமெரிக்க உள்துறை அமைச்சர் ரெக்ஸ் தில்லர்சன் எச்சரித்திருந்தார்.

Image caption ஷாங்கரில்லா பாதுகாப்பு பேச்சுவார்த்தை மன்றத்தில் ஜெனரல் மேதிஸ் உரை

அதற்கு பதிலளிக்கும் விதத்தில், "தங்களுடைய உரிமைகளை பாதுகாத்து கொள்வதில் சீனா உறுதியாக இருக்கும்" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நாடுகளுக்கு இடையில் போட்டி நடைபெறும் நிலையில், மோதல் தவிர்க்க முடியாமல் போய்விடாது என்று கூறி அமெரிக்க-சீன உறவுகளில் நேர்முக குறிப்பொன்றையும் ஜெனரல் மேதிஸ் சிங்கப்பூரில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க எந்த அளவுக்கு பொறுப்பேற்கும்?

பதட்டம் அதிகரித்து வருகின்ற இந்த பிராந்தியத்தில் எந்த அளவுக்கு அமெரிக்கா தன்னுடைய பங்காற்றும் என்பது இந்த பாதுகாப்பு மன்றத்தில் கலந்துகொண்டுள்ள ஆசிய பிரதிநிதிகளின் மிக பெரிய கேள்வியாக இருந்தது என்று சிங்கப்பூரில் இருக்கின்ற பிபிசியின் கிரிஷ்மா வாஸ்வானி தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் கொள்கைகளுக்கு அமெரிக்கா கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை: டிரம்ப்

'கொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு' - சீனா மற்றும் அமெரிக்கா உறுதி

ஆசியாவில் இருந்து அமெரிக்கா திரும்பிவிடப் போவதில்லை என்பதை தன்னுடைய கூட்டாளி நாடுகளுக்கு ஜெனரல் மேதிஸ் மீண்டும் உறுதி செய்திருக்கிறார் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக பல நாடுகள் தென் சீன கடலில் தங்களுடைய எல்லைகளை கோரி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இந்த பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை JAY DIRECTO/AFP/Getty Images
Image caption தென் சீன கடலில் சீனாவின் உரிமை பாராட்டுவதற்கு எதிராக பிலிப்பைன்ஸ் மக்கள்

கடற்பரப்பும் தைவான். சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றுமு புருணை ஆகியவற்றால் தென் சீன கடலில் உள்ள சிறு தீவுகள், பகுதியளவோ அல்லது முற்றிலுமாகவோ உரிமை கொண்டாடப்பட்டு வருகின்றன.

பளவப்பாறைகளில் செயற்கை தீவுகளை உருவாக்கியிருக்கும் சீனா, கடல் கண்காணிப்பை மேற்கொள்ளும் பகுதிகளும் இந்த நாடுகளால் உரிமை கோரப்படுகின்றன.

தென் சீனக் கடல் பிரச்சனை: சீனாவுக்கு எதிராக சர்தேசத் தீர்ப்பாயம் தீர்ப்பு

நடுநிலைமையாக இருப்பதாகக் கூறிக்கொண்ட அமெரிக்காவின் முந்தைய பராக் ஒபாமாவின் நிர்வாகம் கூட, தீவுகளை செயற்கையாகக் கட்டியமைப்பது, கிழக்கு ஆசிய நாடுகள் உரிமை கோருகின்ற இந்த தீவுகளில் சீனா நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றிற்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து வந்தது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிலிப்பைன்ஸ் தொடுத்திருந்த வழக்கிற்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று சீனாவின் கோரிக்கைகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்றுகொள்ள போவதில்லை என்று சீனா அறிவித்துவிட்டது.

உலகளவில் ஏற்படும் விளைவுகளால், இந்த பகுதி கவனம் பெறுவதால், இங்கு ஏற்படும் உரசல்கள் கவலைகளை தோற்றுவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்