வட கொரியா மீதான தடையை விரிவாக்கியது ஐநா பாதுகாப்பவை

இந்த ஆண்டு வட கொரியா நடத்திய தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு எதிரான நடவடிக்கையாக அந்நாட்டின் மீதான தடையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பவை விரிவாக்கியுள்ளது.

வட கொரியாவின் குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Reuters

வட கொரிய தலைவரின் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கைகள் உள்பட, பயணத்தடை, 4 நிறுவனங்கள் மற்றும் 14 அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இந்த தடையில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்கா மற்றும் சீனா மேற்கொண்ட பல வார பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் விதிக்கப்படும் இந்த தடைகள், பாதுகாப்பவை உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அவை விதித்த தடையை வட கொரியா மீறியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற 15 உறுப்பு நாடுகளின் பாதுகாப்பவை கூட்டத்தில் இந்த தடை விதிக்கும் தீர்மானம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள 14 வட கொரிய அதிகாரிகளில், வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளை வழிநடத்தும் ச்சோ இல்-யுவும் அடங்குகிறார்.

பட மூலாதாரம், Reuters

வட கொரிய தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், வட கொரியாவின் ராணுவ திட்டத்திற்கு நிதி ஆதரவு அளிக்கின்ற வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் இந்த தடை பட்டியலில் இடம்பெறும் பிற நபர்களாவர்.

வட கொரியாவின் போர்தந்திர ராக்கெட் படை, கோர்யோ வங்கி மற்றும் இரண்டு வர்த்தக நிறுவனங்கள் இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உள்பட அந்நாட்டின் உயரிய அதிகாரிகளின் நிதியை மேலாண்மை செய்கின்ற கட்சி அலுவலகத்தோடு கோர்யோ வங்கி தொடர்பு கொண்டுள்ளது.

இதற்கு முன்னால் நிகழ்ந்திராத இடைவெளிகளில் வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்காப்புக்காகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் நோக்கிலும் அணு ஆயுத திட்டத்தை நடத்துவதாக அது கூறுகிறது.

அமெரிக்க கண்டத்தை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கும் இறுதி குறிக்கோளுடன் செயல்படுவதை, ஏவுகணை சோதனைகளில் வட கொரியாவின் வளர்ச்சி சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா பொறுமை

வட கொரியாவின் அணு ஆயுத நோக்கங்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா "உத்திப்பூர்வ பொறுமை" காக்கிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்கா சமீபத்தில் அதனுடைய விமானந்தாங்கியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பியுள்ளது.

அதேவேளையில், வட கொரியாவின் ரகசிய ஆட்சியின் மீது அதிக அழுத்தங்கள் வழங்க, அதன் கூட்டாளி நாடான சீனாவோடு அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பவை முதல்முறையாக தடைகளை விதித்தது.

அப்போதிலிருந்து பாதுகாப்பவை இந்த தடை நடவடிக்கைகளை வலுப்படுத்தி வந்துள்ளது.

தொடர்படைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்