கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்

தங்களுடைய பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக ஆக்குவதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன.

கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த 5 நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் கூறுகின்றன.

ஆனால், கத்தார் இதனை மறுத்துள்ளது.

சிறிய தீபகற்பமான கத்தாரோடு நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் செயல்படும் தொடர்புகளை ரியாத் மூடியுள்ளதாக சௌதி அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) தெரிவித்திருக்கிறது.

இதனை 'நேர்மையற்ற' முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் கத்தார், இதற்கு 'எந்த அடிப்படையும் இல்லை' என்கிறது.

அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருக்கும் சக்தி மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடையில், முக்கியமான பிளவாக இந்த எதிர்பாராத திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், EPA

வளைகுடா நாடுகளுக்கும், அவற்றின் அருகிலிருக்கும் இரானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்திருக்கும் பின்னணியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இரானின் ஆதரவோடு செயல்படும் ஆயுதப்படைகளோடு கத்தார் ஒத்துழைப்பதாக சௌதியின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

நடந்தது என்ன?

திங்கள்கிழமை அதிகாலையில் கத்தாருடனுள்ள ராஜீய உறவுகளை திரும்ப பெற பஹ்ரைன் எடுத்த நடவடிக்கைக்கு பின்னர், சௌதி அரேபியவும் ராஜீய உறவுகளைத் திரும்ப பெற்றது.

காணொளிக் குறிப்பு,

சௌதி கட்டார் மோதல்: டொனால்ட் ட்ரம்ப் காரணமா?

இதனை தொடர்ந்து அவற்றின் நட்பு நாடுகளும் வெகுவிரைவாகவே இதே நடவடிக்கையை எடுத்தன.

"தீவிரவாதம், கடும்போக்குவாதம் போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே" இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதை சௌதியின் அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) மேற்கோள்காட்டியுள்ளது.

தங்களுடைய எல்லைகளில் வாழும் கத்தார் மக்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியேற வேண்டும் என்று மூன்று வளைகுடா நாடுகள் காலக்கெடு வழங்கியுள்ளன.

சமீபத்திய திருப்பங்கள்

•கத்தார் ராஜீய அதிகாரிகள் ஐக்கிய அரபு எமிரேட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதம், கடும்போக்குவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் அமைப்புகளை ஆதரிப்பது, நிதி ஆதரவளிப்பது மற்றும் அவற்றின் கொள்கைகளை தழுவி கொள்வதாக அபுதாபி கத்தார் மீது குற்றஞ்சாட்டியுள்ளதாக டபியூஎஎம் (WAM) அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

•உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி கத்தார் தலைநகர் தோகாவுக்கு இருக்கின்ற விமானப் பயண சேவையை இடைநிறுத்துவதாக, ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் விமான நிறுவனங்களான எத்திஹாட் ஏர்வேஸ், எமிட்ரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் விமான நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

பட மூலாதாரம், Adam Pretty/Getty Images

•கத்தார் ஏர்வேஸூக்கு தங்களின் வான்வழியை மூடியுள்ளதாக நட்பு வளைகுடா நாடுகள் கூறியுள்ளன.

•பஹ்ரைனின் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் கத்தார் ஆட்டங்காண செய்துள்ளதாகவும், அதனுடைய விவகாரங்களில் கத்தார் தலையிடுவதாகவும் பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

•"தீவிரவாதத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை" செயல்படுத்துவது, கிளர்ச்சி ஆயுதக்குழுக்களோடு கையாள்வதை போல அல் கயீதா மற்றும் இஸ்லாமிய அரசு அமைப்பு உள்பட தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றால் தன்னுடைய நட்பு நாடுகளில் இருந்து கத்தாரை அகற்றியுள்ளதாக ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடும் அரேபிய கூட்டணிக்கு தலைமையேற்கும் சௌதி தெரிவித்திருக்கிறது.

பின்னணி

கத்தாரோடு ஏற்பட்டுள்ள இந்த ராஜீய சர்ச்சையில் திடீரென இந்த உறவை முறிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இம்முடிவு எதிர்பாராத ஒன்றல்ல. பல ஆண்டுகளாகவே பதட்டம் நிலவி, குறிப்பாக சமீபத்திய வாரங்களில் அது அதிகரித்த பின்னணியில் இது வருகிறது.

காணொளிக் குறிப்பு,

இஸ்ரேல் பாலஸ்தீன போர்: தற்காப்பா? நிலத்திருட்டா?

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே நான்கு நாடுகளும் அல் ஜசீரா உள்பட கத்தார் செய்தி இணையப் பக்கங்களை தடை செய்தன.

கத்தார் அரசர் தமிம் பின் ஹமாட் அல்-தானி, சௌதி அரேபியாவை விமர்சிப்பதாகக் கூறப்பட்ட கருத்துகள் கத்தார் அரசு ஊடகத்தில் வெளியானது.

பட மூலாதாரம், Getty Images

இந்த தகவலை "வெட்கக்கேடான இணைய குற்றம்" என்று கூறி, இந்த கருத்துக்கள் போலியானவை என்று கத்தார் அரசு நிராகரித்தது.

2014 ஆம் ஆண்டு, தங்களுடைய விவகாரங்களில் கத்தார் தலையிட்டதாகக் கூறி, அதற்கு எதிராக கத்தாரில் இருந்த தங்களின் தூதர்களை சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்டுகள் பல மாதங்கள் திரும்ப அழைத்து கொண்டன.

முக்கிய இரு அம்சங்கள்

பரந்த அளவில், திங்கள்கிழமை எடுக்கப்பட்ட இந்த முடிவில், இஸ்லாமியவாதக் குழுக்களுடன் கத்தாருக்கு இருக்கும் உறவுகள் மற்றும் சௌதி அரேபியாவின் போட்டியாளரான இரானின் பங்கு என இரண்டு முக்கிய அம்சங்களை தெரிவிக்கலாம்.

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராக போரிடுவதில் அமெரிக்காவோடு கத்தார் இணைந்துள்ள நிலையிலும், இஸ்லாமிய அரசுக்கு கத்தார் நிதி ஆதரவு அளித்தது என்று இராக்கின் ஷியா தலைவர்களிடம் இருந்து வருகின்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கத்தார் மறுத்துள்ளது.

இருப்பினும், இங்குள்ள செல்வந்தர்கள் நன்கொடைகளை கொடுத்தனர் என்றும், சிரியாவில் செயல்படும் கடும்போக்கு இஸ்லாமியவாத குழுக்களுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் கத்தார் அரசு வழங்கியிருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Bryn Lennon/Getty Images

அல் கயீதாவோடு தொடர்புடைய நுஸ்ரா முன்னணி என்று முன்னதாக அறியப்பட்ட ஒரு குழுவோடு தொடர்பு வைத்திருப்பதாகவும் கத்தார் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பயங்கரவாத அமைப்பு என்று வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட , இஸ்லாமியவாத முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பையும், இந்த குழுக்களையும் கத்தார் ஆதரிப்பதாகவும், அதனுடைய ஊடகங்கள் மூலம் இந்த குழுக்களின் கருத்துக்களையும், திட்டங்களையும் பரப்பி வருவதாவும் சௌதி அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இரானோடு தொடர்பு வைத்துள்ளதை கத்தார் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு உலக கால்பந்து கோப்பை போட்டியை நடத்தவுள்ள கத்தார், இந்த முடிவை பற்றி அல் ஜெஸீரா கருத்துக்களில் விமர்சித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்