லண்டன் மேயர் சாதிக் கானுடன் டிரம்ப் மீண்டும் மோதல்

லண்டன் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த நகர மக்களுக்கு மேயர் சாதிக் கான் அளித்த உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மோதியுள்ளார்.

டிரம்பும், சாதிக் கானும்

பட மூலாதாரம், EPA

லண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.

ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் "பரிதாபமான சாக்குப்போக்கு" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.

இந்த சோக நிகழ்வுக்கு பின்னர், "இன்றும், இன்னும் சில நாட்களும் அதிக போலீஸார் காவல் பணிபுரிவதை லண்டன் மக்கள் காணலாம். அதைக் கண்டு பீதி அடைய வேண்டாம்" என்று சாதிக் கான் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Jack Taylor/Getty Images

இவ்வாறு தெரிவித்திருப்பதற்கு சாதிக் கானை விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னணியை எழுத தவறி, "குறைந்தது 7 பேர் பலி. 48 பேர் காயம். லண்டன் மேயர் பீதியடைய வேண்டாம்! என்கிறார்" என டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

மேயர் மீதான டிரம்பின் இந்த தாக்குதலுக்கு பதிலளித்துள்ள அவருடைய செய்தி தொடர்பாளர், "தவறான டிவிட்டர் தகவலுக்கு பதில் அளிப்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் சாதிக் கானுக்கு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை லண்டன் மேயர் மீதான அதிபர் டிரம்பின் தாக்குதலுக்கு அட்லாண்ட்டிக்கின் இருபுறமும் உள்ள நாடுகளில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.

இந்த ஆண்டின் இறுதியில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு டிரம்ப் வருகை தரவிருக்கும் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று லண்டன் தொழிலாளர் கட்சி பிரதிநிதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்திருந்தனர்.

பட மூலாதாரம், David Becker/Getty Images

முஸ்லிமான சாதிக் கான் அதிபர் டிரம்பின் பயணத்தடையை முன்னதாக விமர்சித்திருக்கிறார்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 6 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிரான அதிபர் டிரம்பின் இந்த பயணத்தடையை நீதிமன்றங்கள் இடைநிறுத்திவிட்டன.

அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் வருவதை தடை செய்வதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவித்தபோது, அவரை 'கோமாளி' என்று அழைத்து, டிரம்ப் மிகவும் மோசமாக தோல்வியடைய போவதாக சாதிக் கான் கூறியிருந்தார்.

இஸ்லாம் பற்றிய டிரம்பின் பார்வைகளை "அறியாமை" என்று கூறிய சாதிக் கான், நியூ யார்க் பில்லியனர் தன்னுடன் அறிவுக்கூர்மை தேர்வில் மோத தயாரா? என்று சவால் விடுத்திருந்தார்.

செளதியின் பாரம்பரிய கத்தி நடனத்தில் டொனால்ட் டிரம்ப்

காணொளிக் குறிப்பு,

செளதியின் பாரம்பரிய கத்தி நடனத்தில் டிரம்ப் (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்