கத்தார் பிரச்சனை: பயணிகளுக்கு என்ன பாதிப்பு?

கத்தார் தலைநகர் தோஹாவுக்கான விமானசேவைகளை பல விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா, ஏமன் ஆகிய நாடுகள், கத்தாருடனான அனைத்து ராஜீய தொடர்புகளையும் நிறுத்திக் கொண்டன. இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை அந்த நாடு மறுத்துள்ளது.

இந்த நாடுகள், தங்கள் வான்பரப்பையும் கத்தாரின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் பயன்படுத்த தடை விதித்துள்ளன.

இனி பயணிகள் என்ன செய்யலாம்?

இதில் யாருக்கு நேரடி பாதிப்பு?

இந்த திடீர் தடையால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் கத்தாருக்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நான்கு நாடுகளில் இருந்தும் கத்தார் வழியாக வேறு நாடுகளுக்கு செல்பவர்களும், அதாவது, தோஹா வழியாக சிங்கப்பூரில் இருந்து கெய்ரோவுக்கு செல்பவர்கள் அல்லது தோஹா வழியாக லண்டனின் இருந்து ரியாதுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்/செளதி அரேபியா/எகிப்து/ பஹ்ரைனுக்கு செல்ல/திரும்ப கத்தார் ஏர்வேசில் பதிவு செய்திருக்கிறேன். நான் என்ன செய்வது?

அடுத்த அறிவிப்பு வரும்வரை, இந்த நான்கு நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் கத்தார் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது.

2017, ஜூன் 5 முதல் ஜூலை 6 வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருப்பவர்கள், பயணம் மேற்கொள்ளாதபட்சத்தில், பயணக் கட்டணங்கள் முழுவதையும் திரும்பப்பெறலாம்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கத்தார் பிரச்சனை: பயணிகளுக்கு என்ன பாதிப்பு?

முன்பதிவு செய்யப்பட்ட பயணதேதிக்குப் பிறகு, 30 நாட்களுக்குள் பயணத்திற்கான மறுபதிவை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் செய்து கொள்ளலாம். ஆனால் ஒருமுறை மட்டுமே பயண மாறுதல் மேற்கொள்ளலாம்.

ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் +974 4023 0072 என்ற தொலைபேசி எண்ணையோ, அருகில் உள்ள கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட பயணதேதிக்குப் பிறகு, 30 நாட்களுக்குள் பயணத்திற்கான மறுபதிவை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் செய்து கொள்ளலாம். ஆனால் ஒருமுறை மட்டுமே பயண மாறுதல் மேற்கொள்ளலாம்.

ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் +974 4023 0072 என்ற தொலைபேசி எண்ணையோ, அருகில் உள்ள கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்/செளதி அரேபியா/எகிப்து/ பஹ்ரைனுக்கு, தோஹா மார்க்கமாக பயணம் செய்ய கத்தார் ஏர்வேசில் முன்பதிவு செய்திருக்கிறேன். நான் என்ன செய்யலாம்?

அந்த வழியாக நீங்கள் செல்ல முடியாது. ஆனால் சர்வதேச வான் போக்குவரத்து அமைப்பான ஐ.ஏ.டி.ஏ-வின் விதிகளின்படி, பிற விமானங்களில் மறுபதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள்.

உதாரணமாக, தோஹா வழியாக லண்டனில் இருந்து துபாய்க்கு பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தால், உங்களுக்கான மாற்று பயண ஏற்பாடுகளை, கத்தார் ஏர்வேஸ் ஏற்பாடு செய்யவேண்டும். பயணமானது நேரடியாகவோ, ஒன்றுக்கும் மேற்பட்ட மார்க்கத்தில் செல்வதாகவோ இருக்கலாம்.

இருந்தபோதிலும், விமானத்தில் இடம் இருப்பதைப் பொறுத்துத்தான் உங்களுக்கான பயணச்சீட்டு ஒதுக்கப்ப்டும் என்பதால், திட்டமிட்டபடி நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறைவு.

பயணங்களை மீண்டும் திட்டமிட, +974 4023 0072 என்ற தொலைபேசி எண்ணையோ, அருகில் உள்ள கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளவும்.

வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள நான் கத்தார் ஏர்வேஸில் முன்பதிவு செய்திருக்கிறேன். பயணத்தில் மாற்றம் இருக்குமா?

பயணத் திட்டங்கள் வழக்கம் போலவே இருக்கும் என்று கத்தார் ஏர்வேஸ் கூறுகிறது. கத்தார் நாட்டிற்கு உள்ளேயும், தடை செய்யப்பட்ட ஆறு நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்கான பயணத் திட்டங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை.

எனவே, தோஹா மார்க்கமாக சிங்கப்பூரில் இருந்து லண்டன் செல்வதில் எந்த மாற்றமும் இல்லை.

படத்தின் காப்புரிமை FLIGHTRADAR24.COM

ஆனால், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் வான்பரப்பை கத்தார் ஏர்வேஸ் பயன்படுத்தாததால், அதன் விமானங்கள் பயணிக்கும் வழித்தடங்கள் மாற்றப்படலாம்.

சில மாற்றுத் தடங்கள், பயண நேரத்தை அதிகரிக்கலாம் (எரிபொருள் செலவும் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு), இருந்தாலும், பயண நேரத்தில் ஏற்படும் வித்தியாசம் குறித்து இதுவரை கத்தார் ஏர்வேஸ் எதுவும் தெரிவிக்கவில்லை.

வேறெந்த விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன?

செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து கத்தாருக்கு பயணம் மேற்கொள்வதற்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தால், உங்கள் பயணத்திட்டம் பாதிப்படையும்.

எத்திஹாட், எமிரேட்ஸ், ஃப்ளைதுபாய், ஏர்-அரேபியா, கல்ஃப் ஏர், செளதி அரேபியன் ஏர்லைன்ஸ், எகிப்துஏர் அகிய விமான நிறுவனங்கள் கத்தாருக்கான பயணங்களை ரத்து செய்துவிட்டன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கத்தாருக்கான பயணங்களை ரத்து செய்துவிட்ட எத்திஹாட் விமான நிறுவனம்

இந்த அனைத்து விமான நிறுவனங்களும், பயணச்சீட்டிற்கான கட்டணத்தை முழுமையாக திருப்பி கொடுப்பது அல்லது, செல்ல வேண்டிய இடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு பயணிப்பதற்காக மறுபதிவு செய்யும் வாய்ப்புகளை வழங்குகின்றன.

எமிரேட்ஸ்: ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டோ, உள்ளூர் எமிரேட்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோ, பயணக்கட்டணத்தை திரும்பப்பெறலாம்.

எதிஹாட்: +971 2599 0000 என்ற எண்ணையோ, விமான நிறுவனத்தின் வலைதளத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

ஃப்ளைதுபாய்: +971 600544445, +974 4 4227350/51 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்; உங்கள் டிராவல் ஏஜெண்டை அணுகலாம் அல்லது விமான நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தனிப்பட்ட செய்தி அனுப்பலாம்.

ஏர் அரேபியா: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வட பகுதியில் இரண்டு இடங்களில் இருந்து செயல்படும் ஏர் அரேபியாவின் +971 6 5580000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது விமான நிறுவனத்தின் வலைதளத்திற்கு செல்லலாம்.

கல்ஃப் ஏர்: பஹ்ரைனின் தேசிய விமான நிறுவனமான கல்ஃப் ஏர் நிறுவனத்தை +973 17373737 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது விமான நிறுவனத்தின் வலைதளத்திற்கு செல்லலாம்.

செளதியா மற்றும் எகிப்துஏர் ஆகிய நிறுவனங்கள், பிரத்யேக தொடர்பு எண்களை வழங்கவில்லை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்/செளதி அரேபியா /பஹ்ரைன்/எகிப்தில் இருந்து கத்தாருக்கு பயணிக்க விரும்புகிறேன். அதற்கான வாய்ப்புகள் என்ன?

நேரடி பயணத்திற்கான வாய்ப்பு இல்லை, நீங்கள் செல்லும் இடத்திற்கு அருகில், பயணத் தடை இல்லாத இடத்திற்கு சென்று, பிறகு அங்கிருந்து வேறு வழியாக அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

உதாரணமாக, ஓமன் ஏர் மற்றும் குவைத் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள், வழக்கம்போல தோஹாவுக்கு விமானங்களை இயக்கிவருகின்றன. எனவே மஸ்கட் அல்லது குவைத் வழியாக பயணங்களை மேற்கொள்ளலாம்.

செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா ஆகிய நாடுகள், கத்தாருடனான ராஜீய உறவுகளை துண்டித்திருப்பதால், இந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் கத்தாருக்குள் செல்வதற்கு அனுமதிகிடையாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். அதேபோல், கத்தாரில் இருந்து இந்த ஆறு நாடுகளுக்கு செல்லவும் அனுமதியில்லை.

இந்தக் கட்டுப்பாடுகள் எதுவரை நீடிக்கும்?

கட்டுப்பாடுகள் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

இந்த வழித்தடத்தில், அடுத்த மாதத்திற்கான பயண முன்பதிவுகளை யாரும் செய்வதாக தெரியவில்லை. நிச்சயமாக இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். என்றாலும், சிக்கல்கள் நீண்ட காலம் நீடிக்கலாம்.

இது தொடர்பான பிற செய்திகள்:

அண்டை நாடுகளின் நடவடிக்கைகளால் கத்தாரின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும்?

கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்

கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் செளதி, எகிப்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்