விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

படத்தின் காப்புரிமை AFP

தங்கக் கடத்தல் குறித்த செய்திகள் தினமும் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது. தங்கத்தை கடத்துவது குற்றச் செயல், பிடிபட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றாலும், தங்கக் கடத்தல் காலங்காலமாக தொடரும் ஒரு குற்றச்செயல்.

நிழல் உலக தாதாக்களான ஹாஜி மஸ்தான் மற்றும் தாவூத் இப்ராஹிம் போன்றவர்கள் கடல் மார்க்கமாக தங்கத்தை கடத்தினார்கள். கடந்த சில ஆண்டுகளாக விமானத்தின் மூலம் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கடத்தலின் பரிமாணங்கள் மாறினாலும், கடத்தப்படுவது மட்டும் குறையவில்லை.

மக்கள் நகைகளாக தங்கத்தைக் கொண்டு வந்ததும், உடலில் மறைத்து எடுத்துவந்ததும் ஒரு காலம். ஆனால் கடந்த சில மாதங்களில் தங்கம், பல விசித்திரமான வழிகளில் கடத்தப்படுகிறது. இதைக் கண்டு அதிகாரிகளே திகைத்துப் போயிருக்கின்றனர். அவற்றில் சில…

1. ஆசனவாயில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தல்

கடந்த 3-4 மாதங்களில் தங்கக் கட்டிகளை ஆசனவாயில் மறைத்து வைத்து, கடத்த முயன்ற மூன்று நபர்களை விமான புலனாய்வு பிரிவினர் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்தார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஏப்ரல் மாதம், இரவு நேரத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த இரண்டு நபர்களிடம் விமானத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.

அவர்கள் இருவரும், துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வந்தவர்கள். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் நடத்திய சோதனையில், தங்கக்கட்டிகள் ஆசனவாயில் மறைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இருவரிடம் இருந்து மொத்தம் 24 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்த எடை 3000 கிராம், அதன் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்!

மே மாதம், கொழும்பில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வந்த ஒரு இலங்கை நாட்டவர், மெட்டல் டிடெக்டரை கடக்கும்போது, உலோகம் இருப்பதற்கான எச்சரிக்கை சமிக்ஞை ஒலி எழும்பியது.

அவரை தடுத்து நிறுத்திய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆசனவாயில் தங்கம் மறைத்து வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று, தங்கம் வெளியில் எடுக்கப்பட்டது. வெளியே எடுக்கப்பட்ட ஆறு தங்கக்கட்டிகளின் எடை 204 கிராம், சந்தை மதிப்பு 15 லட்சம் ரூபாய்.

2. ஜூசரில் தங்கம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

துபாயில் இருந்து மும்பைக்கு ஏப்ரல் மாதம் வந்த பயணி ஒருவர் மீது புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை தீர விசாரித்ததில் எதுவும் தெரியவில்லை. அவரது பொருட்களும், உடமைகளும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோதுதான், ஜூசரில் இருந்த ரகசியமும், தங்கமும் வெளிப்பட்டன.

பயணியின் `ஹேண்ட் ஜூசர்`-இன் உள்ளே இருந்தது உலோகத்திலான மோட்டர் மட்டுமல்ல, மற்றொரு உலோகமான 567 கிராம் எடை கொண்ட தங்கமும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஜூசரில் மறைக்கப்பட்டிருந்த தங்கத்தின் மதிப்பு 17 லட்சம் ரூபாய்.

3. குப்பைத்தொட்டியில் தங்கம்

மஸ்கட்டில் இருந்து மும்பைக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே, விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துவிட்டது.

விமானம் தரையிறங்கியதும், சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமானத்தின் பின்புற பகுதியில் இருக்கும் இரண்டு கழிவறைகளின் குப்பைத்தொட்டிகளின் கீழ் பாகத்தில் எட்டு தங்கக் கட்டிகள் பதுக்கப்பட்டிருந்தன.

தங்கக்கட்டிகள் தலா ஒரு கிலோ எடை கொண்டதாக இருந்தன. விமானத்தின் குப்பைத்தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட எட்டு கிலோ தங்கத்தின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் ஆகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

4.குடிநீர் பாட்டில்களில் மறைத்து தங்கக் கடத்தல்

ஒரே விமானத்தில் பயணம் செய்த 21 பயணிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜெட்டாவில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வந்தவர்கள். அவர்களின் பொருட்களை சோதனையிட்டபோது, தண்ணீர் பாட்டிலின் கீழ்ப்பகுதியிலும், மூடிகளிலும் தங்கம் மறைத்துவைக்கப்பட்டிருந்து வெட்டவெளிச்சமானது.

கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 5.6 கிலோ, அதன் மதிப்பு ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய். இவர்கள் அனைவரும் லக்னெளவில் இருந்து செயல்படும் ஒரு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Image caption விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

5. உள்ளங்கால்களில் மறைக்கப்பட்டு, கடத்தப்பட்ட தங்கம்

கடந்த மார்ச் மாதம் மும்பை விமான நிலையத்தில் நிலைகொள்ளாமல் அங்கும்-இங்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்த ஒரு பயணியை சுங்க அதிகாரிகள் கவனித்தனர்.

இதே விமானநிலையத்தில் அந்த பயணியை சில நாட்களுக்கு முன்னரும் பார்த்த நினைவு அதிகாரிகளுக்கு இருந்தது. எனவே, சுங்க அதிகாரிகளின் சந்தேகம் வலுத்தது.

சிங்கப்பூரில் இருந்து மும்பை வந்த அந்த பயணியை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தபோது, எச்சரிக்கை சமிக்ஞை ஒலித்தது. சோதனையில் எதுவும் அகப்படவில்லை. குழம்பிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.

கடைசியில் மர்ம முடிச்சு பயணியின் காலணிகளை கழற்றியதும் அவிழ்ந்தது. அந்த நபர், தனது உள்ளங்கால்களில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். அந்த நபரின் காலடியில் இருந்த 12 தங்கக்கட்டிகளின் மதிப்பு 36.5 லட்சம் ரூபாய்!

6.டார்ச் மூலம் தங்கக் கடத்தல்

கடந்த ஜனவரி மாதம், ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ரியாதில் இருந்து மும்பை வந்த ஒரு பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்த்து. அவரை தீவிர சோதனைக்கு ஆட்படுத்தினார்கள். அவரிடம் இருந்து ஒன்றும் சிக்கவில்லை. அவரது பொருட்களை சோதனையிட்டார்கள். எல்.ஈ.டி டார்ச்சின் பேட்டரி வைக்கும் இடத்தின் கீழே 6 தங்கக்கட்டிகள் டேப் போட்டு ஒட்டப்பட்டிருந்தன. அவருடைய பர்ஸில் நான்கு தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தங்கக்கட்டிகளின் மொத்த எடை 1.10 கிலோ, மதிப்பு 29 லட்சம் ரூபாய்.

படத்தின் காப்புரிமை AFP

7. வாஷிங் மெஷினில் மறைத்து தங்கக் கடத்தல்

சுங்கத்துறை அதிகாரிகள் பலவிதமான தங்கக் கடத்தல்களை பார்த்திருக்கிறார்கள். அவர்களே அசந்துபோகுமாறு விசித்திரமான முறையில் சில நாட்களுக்கு முன் தங்கம் கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எமிரேட்ஸ் ஏர்வேஸ் மூலமாக துபாயில் இருந்து மும்பைக்கு வந்த ஒரு பயணி, வாஷிங் மெஷின் கொண்டு வந்திருந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றாலும், பயணியின் நடவடிக்கைகளால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. வாஷிங் மெஷினை பிரித்து மேய்ந்தபோது, அதன் மோட்டரில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின் எடை 2.25 கிலோ, அதன் மதிப்பு 61 லட்ச ரூபாய்.

Image caption விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

8. உள்ளாடைகளில் மறைத்து தங்கம் கடத்தல்

ஷார்ஜாவில் இருந்து மும்பைக்கு வந்த விமானப் பயணியின் மேல் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தபோது, அவரது உடலில் உலோகம் இருப்பதாக எச்சரிக்கை சமிக்ஞைகள் தெரிவித்தன. அந்த நபர் ஒரு சாதாரண மனிதர், ஷார்ஜா மற்றும் துபாயில் சிறு-சிறு வேலைகள் செய்துவந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சோதனையில் அவரது உள்ளாடைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 1160 கிராம் எடை கொண்ட 10 தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 36 லட்ச ரூபாய்.

9.பெல்டில் மறைத்து கடத்தப்பட்டது தங்கம்

இஸ்தான்புலில் இருந்து மும்பைக்கு வந்த ஒரு துருக்கியர், மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இடுப்பில் அணியும் பெல்டில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெல்டில் சுமார் மூன்று கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

Image caption கோப்புப் படம்

10. பெண்களின் கைப்பை வளையத்தில் தங்கம்

விலே பார்லேவில் உள்ள வெளிநாட்டு தபால்நிலையத்தில் சோதனை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய 12 பார்சல்களை கைப்பற்றினார்கள். அவற்றில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக துப்பு கிடைத்திருந்தது..

பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது, அவற்றில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகள் இருந்தன, அவை காலியாகவும் இருந்தன. சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முதலில் சற்று திணறினாலும் பிறகு உண்மை வெளியானது. அந்தக் கைப்பைகளில் பொருத்தப்பட்டிருந்த இணைப்பு வளையங்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.

வளையங்களில் இருந்த தங்கத்தின் மொத்த எடை 4136 கிராம், அதன் மதிப்பு 1.12 கோடி ரூபாய்.

"மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது பழமொழி, மின்னுவது மட்டும் பொன்னல்ல என்பது புதுமொழி".

இதுவும் படிக்கலாம்:

மாட்டிறைச்சி சர்ச்சை முடியவில்லை, மோமோஸுக்கு தடை கோருகிறார் பாஜக உறுப்பினர்

பிரிட்டனின் ஜனநாயகத் திருவிழா: வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்