இளம் குழந்தைகள் உயரமாக வளர தினமும் ஒரு முட்டை?

  • 10 ஜூன் 2017

ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், ஆரோக்கியமாக, உயரமாக வளர்வார்கள் என்று ஆறு மாதங்களாக எக்வேடோரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை DERKIEN/GETTY

முட்டையை சமைத்தோ, அரை வேக்காடாகவோ, முழுமையாக வேகவைத்தோ, அல்லது ஆம்லேட்டாகவோ எந்த வடிவில் சாப்பிட்டாலும், அது இளம் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

வளர்ச்சி குறைவைத் தடுக்கும் எளிய, மலிவான, எளிய வழி இது என்று `பீடியாட்ரிக்ஸ்` சஞ்சிகையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் முதல் இரண்டு வருடங்கள், அதன் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முக்கியமானது.

வயதுக்கு குறைந்த வளர்ச்சி

உயரமாக வளர்வதற்கான முக்கியத் தடை ஊட்டச்சத்துக் குறைபாடுதான். சிறுவயதில் ஏற்படும் நோய்தொற்றுகளும், நோயும் குழந்தைகளின் உயரத்தை பாதிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐந்து வயதுக்கு குறைவான 155 மில்லியன் குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ற உயரத்தில் இல்லை, குள்ளமாக இருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Scott Barbour/Getty Images

இவர்களில் பெரும்பாலானோர் குறைவான மற்றும் மத்திய வருவாய் பெறும் நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த சிக்கலை கையாள்வதற்கான வழிகளை சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

117, உலகிலேயே வயது முதிர்த்த பெண் காலமானார்

மாட்டிறைச்சித் தடை: இந்தியாவில் அரசியலாகும் உணவு

லோரா லான்னோட்டி மற்றும் அவரது சக பணியாளர்கள், ஈக்குவெட்டர் நாட்டின் ஊரக மலைப்பகுதிகளில் கள ஆய்வு மேற்க்கொண்டனர்.

அங்கு வசிக்கும் ஆறு முதல் ஒன்பது மாத குழந்தைகளுக்கு இலவச முட்டை வழங்கி, அது பயனளிக்கிறதா என்பதை ஆராய்ந்தார்கள்.

முட்டை விருந்துகள்

ஆய்வில் எடுத்துக்கொண்ட160 இளம் குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் தினமும் ஒரு முட்டை உட்கொண்டனர், அவர்கள், எஞ்சியவர்களுடன் (தினமும் ஒரு முட்டை சாப்பிடாத, ஆனால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களுடன்) கண்காணிக்கப்பட்டு, ஒப்பீடு செய்யப்பட்டனர்.

குழந்தைகளின் வீடுகளுக்கு வார்ந்தோறும் சென்ற ஆய்வாளர்கள், முட்டையால் அலர்ஜி ஏற்பட்டதா என்பது உட்பட, முட்டை கொடுப்பதால் குழந்தைகளுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை வருகிறதா என்பதையும் கண்காணித்தார்கள்.

படத்தின் காப்புரிமை Junko Kimura/Getty Images

ஆறு மாத ஆய்வின் முடிவில் ஆச்சரியமான வித்தியாசம் தெரிந்த்து. முட்டை சாப்பிடாத குழுவினரை விட முட்டைச் சாப்பிட்ட 47% குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது.

ஆய்வின் துவக்கத்தில் தங்கள் வயதுக்கு குறைவான வளர்ச்சியுள்ளவர்களாக கருதப்பட்ட, முட்டை சாப்பிட்ட குழந்தைகளின் வளர்ச்சிகூட, ஆய்வின் முடிவில் ஒப்பீட்டளவில் அதிகரித்திருந்த்து.

அபூர்வ யானைப்பறவை முட்டை ஏலம்

இரண்டு மீட்டர் உயரத்தில் ராட்சத சாக்லெட் முட்டை

தினமும் முட்டை சாப்பிட்ட குழுவில் இருந்த குழந்தைகளின் உயரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருந்தது.

ஆனால், முட்டை சாப்பிடாத குழுவில் இருந்த குழந்தைகள் அவ்வப்போது முட்டை சாப்பிட்டிருந்தாலும்கூட, அவர்களின் உயரம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது.

ஆராய்ச்சியை முன்னெடுத்த லன்னோட்டி சொல்கிறார், "எங்கள் முயற்சியின் தாக்கம், மிகந்த ஆச்சரியமளிப்பதாக இருந்தது".

படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images

"மலிவு விலையில், சுலபமாக கிடைக்கக்கூடிய முட்டை, ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ளவர்களுக்கும், வறியவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்."

சிறு குழந்தைகளுக்கு சிறப்பான ஊட்டச்சத்து உணவு முட்டை என்று லோரா லான்னோட்டி சொல்கிறார்.

"முட்டை, ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது, இது முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்."

சீரான உணவு

ராயல் கல்லூரியில் குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை நலத்துறைக்கு தலைமை வகிக்கும் பேராசிரியர் மேரி ஃபெவ்ட்ரெல் சொல்கிறார், "இன்றைய சூழ்நிலையில், முட்டைகளை பயன்படுத்தி மேலும் பல ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும், சில கலாச்சாரங்களில், சிறு குழந்தைகளுக்கு ஆரம்பகால உணவாக முட்டை கொடுப்பதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. முக்கியமாக, அலர்ஜி ஏற்படலாம் என்ற கவலைகளும் காணப்படுவது இயல்பு."

"நல்ல ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பான உணவு முட்டை. தாய்ப்பாலுடன் கூடவே, வேறு உணவுகளையும் அறிமுகப்படுத்தலாம் என்று தாய் நினைக்கும்போது, முட்டையை குழந்தைக்கு கொடுக்கலாம் - ஆனால், ஒருபோதும் நான்கு மாதங்களுக்கு முன்பு குழந்தைக்கு முட்டை கொடுக்க்க்கூடாது."

எந்தவொரு நோய்த்தொற்று அபாயத்தையும் தவிர்க்க, முட்டை நன்றாக சமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை China Photos/Getty Image

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், அவர்கள் வளர்ச்சி சீராக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தாய்மார்களுக்கு பரிந்துரை செய்கிறது.

ஆறு மாதங்கள் பூர்த்தியான குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன், ஊட்டச்சத்து மிகுந்த பிற உணவுகளையும் கொடுக்கலாம். குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

"முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் உணவில் பல்வேறு வகைகள் இருக்கவேண்டும், குழந்தைகளுக்கு தேவைப்படும் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு விதமான உணவுகளையும், மாறுபட்ட சுவைகளையும் சாப்பிட அனுமதிக்கவேண்டும்" என்று பிரிட்டிஷ் ஊட்டச்சத்து அறக்கட்டளை அறிவுறுத்துகிறது.

"குழந்தைகளின் உணவில் புரதச்சத்து நிறைந்திருக்கவேண்டும். முட்டை மட்டுமல்ல, பீன்ஸ், பருப்பு, மீன், குறிப்பாக எண்ணெய் மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் அவர்களின் உணவில் இடம்பெறவேண்டும்."

பிற செய்திகள்

“எனது அரசு ஸ்திரத்தன்மை வழங்கி, நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும்” - தெரீசா மே

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

தமிழக கல்வித் துறையில் தேவை சீர்திருத்தங்களா? அடிப்படை மாற்றங்களா?

விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்